உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Friday, December 11, 2020

தூக்கத்தின் தோற்றுவாய் தேடி.. #4

இருளின் ஹார்மோன் 

மனிதர்களின் தூக்கம் மற்றும் விழிப்பு நிலைகளில் மெலடோனின் என்கிற ஹார்மோன் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மனித மூளையின் பின்புறமாக அமைந்துள்ள பினியல் சுரப்பி மெலடோனினைச் சுரக்கிறது.



நாம் முந்தைய பதிவுகளில் பார்த்த சுப்ராசியஸ்மாடிக் நியுக்ளியஸின் உத்தரவின் பேரில் பினியல் சுரப்பி செயல்படுகிறது. பொதுவாக மெலடோனின் ஒட்டுமொத்த தூக்கத்தையும் கட்டுப்படுத்தும் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

உண்மையில் மெலடோனின் செயல்பாடு என்பது சூரிய வெளிச்சம் மங்கியவுடன் இருட்டி விட்டது என்கிற தகவலை ஒரு உயிரினத்திற்கு உணர்த்துவது தான். 

இதை கீழ்க்கண்ட ஒரு உதாரணத்துடன் விளக்கலாம். தூக்கத்தினை ஒலிம்பிக்கின் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் என வைத்துக் கொள்வோம். இங்கே மெலடோனினின் பணி வீரர்களே, பந்தயம் தொடங்கப்போகிறது, தயாராக தொடக்கக்கோட்டிற்கு அருகே நில்லுங்கள் என்ற தகவலை தெரிவிக்கும் அலுவலரைப் போலத்தான். இங்கே இந்த அலுவலர் வீரர்களுக்கு பந்தயம் தொடங்கவிருக்கிறது என்ற தகவலை மட்டுமே அறிவிக்கிறார். அவர் தாமாக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பதில்லை. அதுபோல தான் மெலடோனினும் தூக்கத்திற்கு உடலை தயார்படுத்தும் பணியை மட்டுமே செய்கிறது. தூக்கம் எனும் நிகழ்வில் பங்கேற்பதில்லை. 

காலையில் சூரிய வெளிச்சத்தை மூளை உணர்ந்தவுடன் மெலடோனின் சுரப்பு முழுவதும் நின்று விடும். காலையில் இரத்த ஓட்டத்தில் மெலடோனின் அளவு குறைந்து போவது தூக்கநிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு வருவதற்கான அறிகுறியாகிறது, மெலடோனினின் சுரப்பு சூரிய வெளிச்சத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகவே இருக்கிறது. சூரிய வெளிச்சம் குறையத் தொடங்கும் மாலை நேரத்தில் சுரக்கத் தொடங்குவதால் தான் இதை இருளின் ஹார்மோன் என அழைக்கிறார்கள் அறிவியலாளர்கள்.

தொடரும் 

Source: Why We Sleep by Matthew Walker