1959-ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகருக்குள் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக புரட்சி செய்து உலக வரலாற்றின் பக்கங்களில் தனது தனி முத்திரையை பதித்தவர் பிடல் காஸ்ட்ரோ. ஒரு தேசியவாதியாகவும், ஜனநாயகவாதியாகவும் தொடங்கிய பிடலின் அரசியல் பயணம் அவரை மாபெரும் சர்வதேச தலைவராகவும், சமூக போராளியாகவும் உருமாற்றியது. கியூப மக்களுக்கு சமத்துவமும், சுயமரியாதையுமிக்க வாழ்வை ஏற்படுத்தி தருவதற்காக அவர் எடுத்த முயற்சிகள் இன்று கியூபாவை உலக அரங்கில் தலைநிமிர செய்திருக்கிறது.
1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24, 2008 அன்று தாமாக பதவி விலகினார். உலகில் நீண்ட காலத்திற்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. சர்வதேச அரங்கில் காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை அணிசேரா இயக்கத்தின் (Non Aligned Movement) பொதுச் செயலாளராக இருந்துள்ளார். 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் நாள் இந்த உலகிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.
கியூபாவின் தலைவராக, அமெரிக்காவின் ஏகாதிபத்திய சுரண்டல்களையும், கொலை முயற்சிகளையும், கடுமையான பொருளாதார தடைகளையும் மீறி கல்வி, சுகாதாரம் என அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை இலவசமாக வழங்கி பொதுவுடைமை தத்துவங்களை நிலைநாட்டும் பணியில் தான் மறையும் வரை பயணித்தவர்.
6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்திய யுனஸ்கோ கணக்கெடுப்பின் படி அந்நாட்டு மக்கள்தொகையில் 99.8 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றவர்கள். உலகில் மிகச்சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா. கியூபாவின் மருத்துவ குழுவினர் 18-க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றிக் கொண்டு எந்த ஆதாயமும் இல்லாமல் பணியாற்றுகிறார்கள். எச்ஐவி தொற்றுள்ள தாயிடமிருந்து குழந்தைக்கு அந்த நோய் பரவுவதை முற்றிலும் ஒழித்த நாடு கியூபா என்று 2015-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்தது. மேலும் இங்கு மகப்பேறின் போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் (Maternal Mortality Rate) பிற உலக நாடுகளை விட மிக மிகக் குறைவு. கியூபாவில் தொழில்நுட்ப துறைகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆண்களுக்கு அதிக ஊதியம், அதே வேலை செய்யும் பெண்களுக்கு குறைவான ஊதியம் என்ற ஏற்றதாழ்வுகள் கியூபாவில் இல்லை. மேலும், நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்த வீட்டை சாத்தியமாக்கி கொடுத்தது பிடல் காஸ்ட்ரோவின் மிக முக்கியமான சாதனையாகும்.
புரட்சிக்கு பிந்தைய கியூபாவில் 60 சதவிகித உணவு தேவையை அன்றைய சோவியத் யூனியன் பூர்த்தி செய்து வந்தது. 1989ல் சோவியத் யூனியன் சிதறிய நிலையில் அமெரிக்காவின் பொருளாதார தடையும் சேர்ந்து கொள்ள நெருக்கடியான சூழலில் தவித்தது கியூபா. இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள உடனடி நடவடிக்கைகள் காஸ்ட்ரோ தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. எங்கெல்லாம் வெற்றிடங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் மட்கு எரு (Compost), வளமான மண் இட்டு நிரப்பப்பட்டுப் பயிர்தொழில் மேற்கொள்ளப்பட்டது. தெருக்களின் நடைபாதைகள் உட்பட எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல என்ற நிலை உருவானது. இப்படி புதிதாக 81 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உருவாக்கப்பட்டு, இங்கு விளைவிக்கப்படும் பொருட்கள் ரேஷன் மூலமாக மக்களை எளிதாக சென்றடைந்தன. ரசாயன உரங்களுக்கு மாற்றாக பசுந்தாள் உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. அனைத்து வகையான கழிவுகளும், குப்பைகளும் மறுசுழற்சி செய்யப்பட்டன. இன்றைக்கு கியூபாவின் சிறு விவசாயிகள் நாட்டிலுள்ள வேளாண் நிலங்களில் 25 சதவிகிதத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆனால் 65 சதவிகித உணவு தானிய உற்பத்தியின் வழியாகத் தங்கள் நாட்டிற்கு பங்களிப்பு செய்கிறார்கள். கியூபாவில் உள்ள 1.1 கோடி மக்களுக்கும் இயற்கை வேளாண்மை முறையில் உணவளிக்க போதுமான ஆற்றல் அந்நாட்டு விவசாயிகளிடம் உள்ளது.
விளையாட்டுத் துறையிலும் கியூபாவின் சாதனை குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியதே. ஒலிம்பிக்கில் இதுவரை மொத்தம் 220 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள் கியூப விளையாட்டு வீரர்கள். குத்துச்சண்டை போட்டிகளில் உலக அளவில் பிரசித்தி பெற்ற வீரர்களும், பயிற்சியாளர்களும் கியூபாவிலிருந்தே உருவாகிறார்கள். புரட்சிக்கு பிந்தைய கியூபாவில், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு கடும் நெருக்கடிக்குள்ளான கியூபாவில் இன்று ஒவ்வொரு குழந்தையும் பள்ளி செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவில் ஊட்டச்சத்துமிக்க ஆரோக்கியமான உணவை ஒவ்வொரு குடும்பமும் பெறுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மாற்று திறனாளிகளுக்கான முறையான கல்வியும், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தனது எல்லாக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாத தேசம், தனது எல்லா குடிமக்களுக்கும் அடிப்படை ஊட்டச்சத்தை உறுதி செய்யாத தேசம், ஊட்டச்சத்துக் குறைபாட்டையும், தடுக்கக்கூடிய நோய்களையும் ஒழிக்காத தேசம் அதர்மமான தேசம் என்பது பிடலின் கருத்து. சமூக நலனுக்கான புரட்சியை தலைமை தாங்கி நடத்துவதை விட முக்கியமானது, அப்புரட்சியின் பலனை சமூக-பொருளாதார படிநிலையின் அடிமட்டத்தில் இருக்கும் மனிதர்களுக்கும் கொண்டு சேர்ப்பது. அந்த வகையில் பிடலின் உற்ற நண்பரும் மகத்தான படைப்பாளியுமான காப்ரியேல் கார்சியோ மார்க்கேஸ் குறிப்பிட்டதைப் போன்று நம் காலத்தின் மகத்தான இலட்சியவாதிகளுள் ஒருவர் பிடல்.
அஞ்சலிகள்.
உதவிய தளங்கள் : தி இந்து, தீக்கதிர்