உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Wednesday, November 15, 2017

மாரத்தான் - Breaking 2

மாரத்தான் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? 

மனித மனத்தின் வலிமையை சோதிக்கும், 42.1 கிமீ தூர ஓட்டபந்தயம் அது. ஆம் உடல் வலிமையும், மன வலிமையும் ஒருங்கே வாய்க்கப்பெற்றவர்களுக்கே பந்தய தூரத்தை கடப்பது சாத்தியமாகிறது. ஆண்கள் மாரத்தான் போட்டியில் கென்யாவின்  Dennis Kemitto  2 மணி 2 நிமிடம் 57 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தது தான் தற்போது வரை  உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது.

சமீபத்தில் நைக் (Nike) நிறுவனத்தின் விஞ்ஞானிகளுக்கு வித்தியாசமான யோசனை தோன்றி, இரண்டு மணி நேரத்திற்குள் ஒருவரால் பந்தய தூரத்தை கடக்க முடியுமா என்பதை கண்டறிய விரும்பினார்கள். விளையாட்டு அறிவியல் சார்ந்த ஒரு சோதனையாக நடந்த இந்த முயற்சியை நேஷனல் ஜியோகிராஃபிக் Breaking 2 என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இருக்கிறது. இந்த சோதனை முயற்சிக்காக அவர்கள் தேர்ந்தெடுத்த மூன்று வீரர்களும், அவர்களது பின்னணியும் சுவாரஸ்யமானது. 


முதல் நபர் எத்தியோப்பியாவின் Lelisa Desisa . 
27 வயதான இவர் 2013-ம் ஆண்டு நடந்த உலக புகழ்பெற்ற பாஸ்டன் மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்றவர். இவர் பங்கேற்ற அந்த ஆண்டில் தான் போட்டி முடியும் இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடிப்பில் காயம் ஏதும் இன்றி தப்பித்திருந்தாலும், அந்த நிகழ்வு ஏற்படுத்திய பாதிப்பினால் தான் வென்ற பதக்கத்தை அந்த நகர மக்களுக்காக அற்பணித்திருக்கிறார்.

இரண்டாவது நபர் எரித்திரியாவின் Zersenay Tadese. 
35 வயதான இவர் 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்று தனது நாட்டுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வாங்கி கொடுத்தவர். அரை மாரத்தான் (21 கி.மீ)தூரத்தை 58 நிமிடங்கள் 23 வினாடிகளில் கடந்து, அந்த பிரிவில் உலக சாதனைக்கும் சொந்தக்காரர்.

மூன்றாவது நபர் கென்யாவின் Eliud Kipchoge, 
32 வயதான இவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றவர். நவீன காலத்தின் சிறந்த மாரத்தான் வீரர் என பாராட்டப்படுபவர்.

இவர்கள் மூவருக்கும் பல கட்ட மருத்துவ பரிசோதனைகள், பயிற்சிகளுக்கு பிறகு இந்த சோதனை போட்டி நடத்தப்பட்டது. போட்டியின் முடிவில் Eliud Kipchoge 2 மணிநேரம் 25 வினாடிகளில் (2:00:25) பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். விஞ்ஞானிகள் நிர்ணையித்த இலக்கை வீரர்களால் அடைய முடியாமல் போகவே, போட்டியின் முடிவில் பத்திரிகையாளர்கள் Eliud Kipchoge விடம் உங்களால் இரண்டு மணிநேரத்திற்குள் மாரத்தான் தூரத்தை கடக்க முடியவில்லையே Does this mean human beings have limits? என்று கேட்டதற்கு, இல்லை, இலக்குக்கும் எனக்குமான வித்தியாசம் வெறும் 25 வினாடிகள் தான். என்னால் இன்று இது முடியாமல் போயிருக்கலாம் ஆனால், நிச்சயமாக இந்த 25 வினாடிகளை தாண்டி இன்னொருவரால் இரண்டு மணிநேரத்திற்குள்  மாரத்தான் தூரத்தை கடக்க முடியும், No human is limited என்கிறார் புன்னகையோடு. 


மூன்று வீரர்கள், அவர்களின் பின்னணி, மாரத்தான் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்கள் என Youtubeஇல் காண கிடைக்கிறது இந்த ஆவணப்படம். https://www.youtube.com/watch?v=V2ZLG-Fij_4