2016ல் வெளியான ஜங்கிள் புக் திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும், கதையின் நாயகனான சிறுவன் மொக்ளியை குரங்கு கூட்டங்கள் கடத்திச் சென்று அதன் தலைவனாக இருக்கும் கிங் லூயியிடம் கொண்டு சேர்க்கும். தலைவனாக இருக்கும் கிங் லூயி, சிறுவனிடம், மனிதர்கள் பயன்படுத்தும் சிகப்பு பூவை (நெருப்பு) எனக்கு நீ உருவாக்கி தர வேண்டும், அதன் ரகசியத்தை அறிந்து விட்டால் மனிதர்களை போலவே நாங்களும் மாறிவிடுவோம் என்று சொல்லும். ஒரு பேன்டஸி திரைப்படத்தின் காட்சிதான் என்றாலும் மனிதர்களுக்கும் நெருப்பிற்குமான தொடர்பினை வெகு நேர்த்தியாக நமக்குள் செலுத்தி விட்டு போகும் காட்சி இது. நெருப்பை உருவாக்கி, அதனை கட்டுப்படுத்தி, பயன்படுத்தப் பயின்ற மனிதர்கள் அடைந்த பலன்கள் என்ன ? வாருங்கள் பார்க்கலாம்.
சாப்பியன்ஸ் உணவுச்சங்கிலியின் உச்சத்திற்கு வெகு வேகமாக முன்னேறியதற்கு முக்கிய காரணம் அவர்கள் நெருப்பை அன்றாடம் பயன்படுத்த தொடங்கியது தான். சுமார் எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் நெருப்பை அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஹோமோ எரக்டஸ், நியண்டர்தல்கள் மற்றும் சாப்பியன்ஸ்களின் மூதாதயர்கள் நெருப்பை அன்றாடம் பயன்படுத்தும் முறையை பழகினார்கள்.
நெருப்பானது இருட்டில் வெளிச்சத்தையும், கடுங்குளிரில் வெப்பத்தையும், மற்ற வேட்டை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பையும் மனிதர்களுக்கு அளித்தது. கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பைக் கொண்டு வெப்பமண்டல புதர் காடுகளில் எளிமையாக வேட்டையாடி உண்ணத் தொடங்கினார்கள்.
சமையல்...சமையல்...
நெருப்பைப் பயன்படுத்தி சமைக்கக் கற்றுக்கொண்ட பின் கோதுமை, அரிசி, உருளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டார்கள். நெருப்பு, உணவின் வேதித்தன்மையையும், உயிரித்தன்மையையும் வெகுவாக மாற்றியமைத்தது. மிக முக்கியமாக உணவுப் பொருட்களில் இருக்கும் நோய் பரப்பும் கிருமிகளை அழிக்க நெருப்பு வெகுவாக உதவியது.
உணவை வாயிலிட்டு மென்று, விழுங்கி அது செரிமானமாகும் ஒட்டுமொத்த முறையும் இப்போது மனிதர்களுக்கு எளிதாகிப் போனது. நெருப்பினால் சமைத்தல் சாத்தியமாகிய பின் மனிதர்கள் பல வகையான உணவுப் பொருட்களை உட்கொள்ள தொடங்கினார்கள். உணவருந்துவதற்கு அவர்கள் செலவிட்ட நேரமும், பற்களின் அளவும், ஜீரண உறுப்புகளின் அளவும் குறைய தொடங்கியது.
ஜீரண உறுப்புகளின் அளவு குறைய தொடங்கியதும், மூளையின் அளவு பெரியதாக தொடங்கியதும் ஒன்றொடு ஒன்று தொடர்புடைய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நீளமான குடல்களும், அளவில் பெரிய மூளையும் உடலின் ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பவை, எனவே இரண்டையும் ஒரு சேர ஒரே உடலில் கொண்டிருப்பது என்பது ஒரு உயிரிக்கு இயலாத காரியம். ஜீரண உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் பயன்பாடு குறைந்து மூளையின் அளவு பெரிதானதில் சமைத்தல் பெரும் பங்காற்றியது.
மனிதர்களுக்கும், மற்ற பலமிக்க வேட்டை விலங்குகளுக்குமிடையே ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது நெருப்பு தான். பெரும்பாலான வேட்டை விலங்குகளுக்கு அதன் வலுவான உடல் கட்டமைப்பு தான் மிகப்பெரிய பலம். ஆனால் வேறு எந்த விலங்கும் நெருப்பு போன்றதொரு இயற்கையின் ஆற்றலை கட்டுப்படுத்தி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவில்லை. உதாரணமாக கழுகுகளால் காற்றிலுள்ள வெப்ப அலைவரிசைகளை அடையாளம் கண்டு அதற்கேற்றவாறு வெப்பக்காற்று மேலேழும் போது, சிறகடித்து உயரே எழுப்ப முடியும். ஆனால் அவைகளால் காற்றில் வெப்ப அலைவரிசைகளை உருவாக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. கழுகுகளை போலன்றி மனிதர்களால் தேவைக்கு ஏற்றவாறு நெருப்பை உருவாக்கி பயன்படுத்த முடியும். ஒற்றை மனிதன் உருவாக்கும் ஒரு சிறு தீப்பொறி ஒட்டுமொத்த காட்டையும் தீக்கிரையாக்கி விடக்கூடும். நெருப்பின் கண்டறிதல் வருங்கால மனிதகுல ஆதிக்கத்தின் தொடக்கப்புள்ளி.
மனிதர்கள் இடம்பெயர்ந்த கதை..... அடுத்த பதிவில்
Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari