உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Friday, December 21, 2018

பறவை மனிதரின் பயணங்கள்

The Fall of a Sparrow by Salim Ali

நான் வாசித்து முடித்த இரண்டாவது சுயசரிதை புத்தகம் இது.

இந்தியாவின் புகழ்பெற்ற பறவையிலாளர் சலீம் அலி, இந்தியர்களின் வாழ்வும், சூழல்களும் வெகுவாக மாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் முற்றிலும் வித்தியாசமான ஒரு பணியை தேர்ந்தெடுத்தவர். தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுத முடிவெடுத்த போது தன்னிடம் நினைவுகள் மட்டுமே மிச்சமிருந்ததாக முன்னுரையில் சொல்லும் இந்த மனிதரின் வாழ்க்கை உண்மையிலேயே வெகு சுவாரஸ்யமானது.


பறவைகளை பொழுதுபோக்குக்காக வேட்டையாடி, வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சிறுவன், தான் சுட்டு வீழ்த்திய ஒரு குருவியினது தனித்தன்மையின் விடை தேடி புறப்படுகிறான். அந்த அறிவுத்தேடல் அவனை மேலும் பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையின் புதிர்களை கண்டறியும் செயலுக்கு எப்படி இட்டு செல்கிறது என்பதை அவனது குரலாகவே பதிவு செய்கிறது இந்த புத்தகம்.

வட இந்தியாவின் இமயமலைத் தொடர், கட்ச் பிரதேசம், மத்திய இந்தியாவின் பஸ்தர் பகுதி, தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், அண்டை நாடுகளான பர்மா, ஆப்கானிஸ்தான் என நீளும் சலீம் அலியின் ஆய்வு பயணங்களும் அதனூடே அவர் சேகரித்திருக்கும் இயற்கை குறித்த அறிவியல் தகவல்களும் தலைமுறைகள் தாண்டியும் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். அவரது ஆய்வுகளுக்கும், பயணங்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அளித்த ஒத்துழைப்பும், ஆதரவும் மிகவும் முக்கியமானது. அவரை கௌரவித்த விருதுகளும், அவர் ஆவணப்படுத்திய புத்தகங்களும், சில புகைப்படங்களும் பட்டியலிடப்பட்டு சுயசரிதையோடு இணைக்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவேர்சிட்டி பிரஸ் பதிப்பகத்தார் எழுத்துருவை மாற்றி வெளியிட்டால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.   

இந்த புத்தகம் முழுக்க சலீம் அலி சந்தித்த பல மனிதர்கள் வந்து போகிறார்கள் குறிப்பாக ஆங்கிலேய அதிகாரிகளும், உயிரியல் விஞ்ஞானிகளும். சிலருடன் பல தருணங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றிய போதிலும், வனஉயிரின பாதுகாப்பு சார்ந்து ஒத்த கருத்து உள்ளவர்களுடன் இணைந்து பணி செய்கிறார், அவர்களிடமிருந்து பல அறிவியல் நுணுக்கங்களை கற்றுக் கொள்கிறார். 

வன உயிரின பாதுகாப்பை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டும் எனக் குறிப்பிட்டு கூறும் சலீம் அலி, அதனை அகிம்சை என்ற பெயரில் உணர்ச்சிகரமானதாக மாற்றி அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தருவதில் தனக்கு உடன்பாடில்லை என்கிறார். 

பறவை நோக்குதல் என்பது இயந்திரமயமான நவீன உலகின் அழுத்தும் யதார்த்தங்களிலிருந்து விடுபட்டு, அடர்ந்த கானகங்களில் தன் சுயத்தை தேடும் ஒரு முயற்சி தான் என்கிறார். 
 வாழ்வில் ஒருமுறையேனும் கூண்டுகளுக்கு வெளியே பறந்து திரியும் பறவைகளை சற்றேனும் உற்று நோக்கியிருந்தால் நீங்களும் இதனை உணர்ந்திருக்கக் கூடும்.

Saturday, December 1, 2018

வாசிப்போம் #5

Homo Deus: A Brief History of Tomorrow  

Sapiens: A Brief History of Humankind எழுதிய யுவால் நோவா ஹராரியின் அடுத்த புத்தகம் இது. தனது சாப்பின்ஸ் நூலில் மனிதகுலம் கடந்து வந்த வரலாற்றின் பக்கங்களை அறிவியல் பார்வையோடு பதிவு செய்தவர், இந்த புத்தகத்தில் மனிதகுலத்தின் எதிர்காலம் பற்றிய தனது பார்வையை முன்வைக்கிறார்.

நமது நம்பிக்கைகள், மரபுகள், பண்பாடுகள், வாழ்க்கைமுறைகள் எதுவாக இருந்தாலும் திறந்த மனதுடன், நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த உலகம் குறித்த கற்பிதங்களை கேள்விக்குட்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளோடு துவங்குகிறது இந்த புத்தகம். 


கடந்த சில நூற்றாண்டுகளில் இருந்ததை விடவும் போர்கள், பெரும்பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் போன்றவற்றின் தாக்கம் நமது சமகாலத்தில் பெருமளவு குறைந்திருப்பதை குறிப்பிட்டுக் காட்டி, இத்தகைய மாற்றத்திற்கு மனித செயல்பாடுகளும், அறிவியல் ஆய்வுகளும் முக்கியமான காரணம் என நிறுவுகிறார்.

வளர்ச்சி நோக்கிய மனிதகுலத்தின் பயணத்தில் அடுத்தடுத்த இலக்குகளாக இறவாத்தன்மை(Immortality), பேரின்ப நிலை (Bliss) மற்றும் தெய்வீகத்தன்மை (Divinity)ஆகியவற்றை அடைதல் போன்றவை இருக்கும் என்கிறார். எதிர்காலத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக சூழலியல் பிரச்சனைகளை முன் வைக்கிறார். 

மற்ற எல்லா உயிரினங்களின் மீதும் ஆதிக்கம் செலுத்தி இந்த உலகை தமக்கு ஏற்ற முறையில் மனிதர்கள் மாற்றியமைத்தற்கு முக்கிய காரணம் பெருமளவில் ஒருங்கிணைந்து செயலாற்றியதால் தான் என்கிறார்.

ஆன்மா, மனித மனம் போன்ற கருத்தாக்கங்கள் வெறும் புனைவுகள் தான் என்று கூறும் ஹராரி, மனித உணர்வுகள், மூளையில் இருக்கும் லட்சக்கணக்கான நியூரான்களிடையே நடக்கும் மின்வேதியியல் வினைகளின் வெளிப்பாடு தான் என்கிறார். தொழில்நுட்பங்களின் துணைகொண்டு இத்தகைய வினைகளை மாற்றி அமைப்பதன் மூலம் மனிதன் நிலையான பேரின்ப நிலையை அடைய முயற்சிப்பான் என்பதும், இத்தகைய அதீத தொழில்நுட்ப வளர்ச்சி வெகு சில பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.

இந்த பிரபஞ்சத்தில் படைப்பின் அதிஉன்னதம்  மனிதன் இல்லை என்பதும், மனிதம், மனித நலன் போன்றவை காலப்போக்கில் மறைந்து, நாம் உருவாக்கும் தரவுகள் (Data), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர கற்றல் (Machine Learning) போன்ற தொழில்நுட்பங்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்.

பண்டைய வரலாற்றுக் காலங்களில் தோன்றிய மதங்களிலும், மத நூல்களிலும் தரவுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்போதைய நவீன உலகத்திற்கான வழிகாட்டுதல்களை மனிதர்கள் கண்டடைய முடியாது எனக் கூறும் ஹராரி, இன்னும் சில பத்தாண்டுகளில் புதிய, நவீன தொழில்நுட்ப மதங்கள் உருவாக வாய்ப்பிருப்பதாக ஆருடம் கூறுகிறார்.

தனது கருத்தாக்கங்களை தீர்க்கதரிசனமாகவோ, அறிவியல் புனைவாகவோ முன்வைக்காமல் அறிவியல் ஆய்வு முடிவுகளின் துணை கொண்டு கணிப்புகளாக மட்டுமே தொகுத்து தந்திருக்கிறார். ஒரு வரலாற்றாசிரியர் அறிவியலை, மிக சுவாரஸ்யமாக, எந்த இடத்திலும் வாசகனை தேங்க விடாமல், தனது எழுத்தாற்றலால் 462 பக்கங்களையும் தொடர்ச்சியாக வாசித்து விடும்படி எழுதியிருக்கிறார்.

வாழ்க்கையில் நாம் வாசிக்கும் ஒரு சில புத்தகங்களே நாம் இதுவரை கொண்டிருக்கும் பல நம்பிக்கைகளை தலைகீழாக புரட்டிப் போட்டு கேள்விக்குட்படுத்தும் திறன் வாய்ந்தவை. Homo Deus: A Brief History of Tomorrow  அந்த வகையை சார்ந்தது. 

நீங்கள் இந்த புத்தகத்தில் ஹராரி கூறியிருக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது முரண்பட்டு கேள்விகள் எழுப்பலாம். கேள்விகளை கேட்பதும், விடைகளை தேடுவதும், மாற்றங்களை ஏற்பதும் தானே அறிவியலாக முடியும்.