உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Friday, February 21, 2020

ஒரு கத சொல்லட்டா சார் ? #3

நடந்து கடக்கிற தூரம் தான்.
***********************************

மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு மாலை நேரத்தில் தன் வீட்டின் ஜன்னலோரத்திலிருந்து வெளியே தோட்டத்திலிருந்த பலாமரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரஹ்மத். பெரிய பலாப்பழம் ஒன்றை கொறிக்க எத்தனித்து அதனைச் சுற்றி சுற்றி வந்தன இரண்டு அணில்கள். இப்படி ஒரு காட்சியை அவன் இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த  நகரத்தில் காண்பது இப்போது அரிதாகி விட்டது. அதனால் தானோ என்னவோ மனம் லயித்து போய் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது பருவத் தேர்வுகள் முடிந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருக்கிறான்.

‘மழ பெஞ்சு முடிஞ்ச பெறவு சைக்கிள எடுத்துட்டு கடைக்கி வா’ என்று வாப்பா சொல்லி விட்டு போனது நினைவுக்கு வந்தது. உம்மா சமையலறையில் செய்து கொண்டிருந்த பழப்பத்தலின் வாசம் வேறு மூக்கை துளைத்தது. நேராக அடுப்படிக்கு போய் சூடாக இரண்டு பழபத்தல்களை சாப்பிட்டு விட்டு நான்கை ஒரு தூக்குவாளியில் எடுத்துக் கொண்டு, உம்மாவிடம் சொல்லி விட்டு  கிளம்பி விட்டான்.

அவர்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த கடை. மாலை முதல் இரவு வரை செயல்படும் பழைய புத்தகக் கடை அது. அவனது வாப்பா அமீரகத்தில் தனது இளமையை தொலைத்து சம்பாதித்ததில் மிஞ்சியவை ஐந்து சென்ட் நிலமும், அதில் ஒரு சிறிய வீடும் மேலும் இந்த கடைக்கான சிறுமுதலீடும்.

ரஹ்மத்திற்கு புத்தகங்கள் மீதான தீராக்காதல் சிறுவயதிலேயே தொடங்கி விட்டது. காமிக்ஸ் உலகின் மாயாவியும், அக்கதைகளில் வரும் குதிரையும், நாயும் அவனுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களாயிருந்தன. சிறுவயதில் இப்படியோரு குதிரையும், நாயும் தன்னிடமிருந்தால் காடு முழுவதும் சுற்றியலையலாம் என்றெல்லாம் கூட நினைத்திருக்கிறான்.

பொழுதுபோக்காக தொடங்கிய வாசிப்பு வாழ்வினது அதிஉன்னதங்களை நோக்கிய சாளரத்தை அவனுக்கு திறந்து விட்டிருந்தது. கட்டுரைகள், சிறுகதைகள் என எழுதவும் தொடங்கியிருந்தான்.

சைக்கிளை கடைவாசலில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்று வாப்பாவிடம் பழபத்தல்கள் இருந்த தூக்குவாளியை நீட்டியபடி உட்கார்ந்தான்.

‘இந்த வலத்தில இருக்க புஸ்தவமெல்லாம் நேத்து தாம் நாகரோவில்லேருந்து வந்துது. ஏதோ பெரிய ஆபீசரா இருத்தவராம், அவரு போயச் சேந்த பொறவு அவரு வச்சிருந்த புஸ்தவத்த எல்லாம் பழைய விலைக்கு வித்துருக்கானுவ அவருக்க புத்திரனுங்க. அதில ஒரு பெட்டிய நம்ம கடைக்கு அனுப்பிக்காரு உசேன் அண்ணாச்சி.’
அவர் பேசி முடிக்கவும் அட்டைபெட்டியை திறந்து பார்த்தான் ரஹ்மத். ஆங்கிலமும், தமிழும் என அவன் கேள்விப்படாத புத்தகங்கள் எல்லாம் அந்த சேமிப்பிலிருந்தன, நல்ல மனிதர்களைப் போலவே சிறந்த புத்தகங்களும் கூட தூக்கி எறியப்படுகின்றன என நினைத்துக் கொண்டான்.
வாப்பா தான் கையில் வைத்திருந்த நாளிதழை அவன் கையில் கொடுத்தபடி அதில் பிரசுரமாகியிருந்த கட்டுரைப் போட்டிக்கான விளம்பரத்தை அவனிடம் காட்டினார்.
‘நீ தான் நல்லா கட்டுரை எல்லாம் எழுதுவியே, இந்த தலைப்புல கட்டுரை ஒண்ணு எழுது’.
அவன் சரியென்று தலையாட்டியபடி நாளிதழை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏறக்குறைய இரண்டு மணிநேரம் அந்த அட்டைபெட்டியிலிருந்த புத்தகங்கள் அனைத்தையும் எடுத்து புரட்டியபடியே இருந்தான். ஏறக்குறைய எல்லா புத்தகங்களின் முகப்பிலும் வாங்கப்பட்ட தேதியும், தருணமும் குறித்து வைக்கப்பட்டிருந்தன. சில புத்தகங்களில் பென்சில் கொண்டு குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. ஒரு மனிதன் தேடித் தேடிச் சேகரித்த செல்வங்களாகவே அவை அவனுக்கு தெரிந்தன.

‘மணி ஒன்பதாச்சு வீட்டுக்கு போவோமா’ என்று கேட்டபடி கடையை அடைக்க வாப்பா ஆயத்தமான போது தான் நேரமானதை உணர்ந்தான்.

‘சைக்கிளை உருட்டிகிட்டே நடந்து போவமா வாப்பா’

புகைப்படம் நன்றி: தோழர் ஜீன்பால்
(சித்தரிப்புக்காக மட்டும் )
காற்றில் ஈரம் ஏறியிருந்தது, மழை நின்று போயிருந்தால் ஆட்கள் நடமாட்டமும் அதிகமாகியிருந்தது. ஏன் நடந்து போலாம் என்று தீர்மானித்தான் என்று சிந்தித்தபடியே வந்து கொண்டிருந்தார். ஊரை பாத்து நிறைய நாள் ஆனதுனால நடத்து போக விரும்பியிருப்பான் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டார். சாலையோர மரங்களிலிருந்து காற்று சிதறடித்துக் கொண்டிருந்த மழைத்துளிகளை தன் உடலில் உணர்ந்தபடி  நடந்து கொண்டிருந்தான் ரஹ்மத்.

வழியிலிருந்த மாதா கோவிலிருந்து பிரார்த்தனை முடிந்து ஆட்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.  வழக்கமாக தங்கள் தெருவுக்கு மீன் கொண்டு வரும் மேரியக்கா, தங்கள் கடைக்கு பக்கத்திலேயே தையல் கடை வைத்திருக்கும் ஜோஸ் அண்ணாச்சி என பலரையும் ரஹ்மத் பார்த்துக் கொண்டிருந்தான்.

பத்து நிமிட நடைக்கு பிறகு கடைகள் இருக்கும் பகுதிக்கு வந்திருந்தார்கள். எதிரில் ரஹ்மத்துக்கு பள்ளிக்கூடத்தில் தமிழ் பாடம் எடுத்த ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் வணக்கம் சொன்னான் ரஹ்மத். அவனது கல்லூரி படிப்பு பற்றி விசாரித்துக் கொண்டார். அவரது வகுப்பில் நான் எதிர்காலத்தில் எழுத்தாளாகப் போகிறேன் என்று சொன்னவன் இவன் மட்டுமே என்பதனால் அவருக்கு இவன் மீது தனிக்கவனமிருந்தது. இவர்களிடம் பேசிவிட்டு மாட்டுக்கறி விற்கும் கடை நோக்கி நடந்து போய் கொண்டிருந்தார் முருகன் சார்.

இடப்புற வளைவிலிருந்த பிரத்தி பெற்ற சிவன் கோவில் இருந்த பகுதியிலிருந்து மூன்று பெரியவர்கள் இவர்கள் எதிரே வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெரியவர் ரஹ்மத்தின் வாப்பாவை பார்த்து பேசத் தொடங்கினார்.

‘நீங்க கொடுத்த புஸ்தவமெல்லாத்தையும் நம்ம பிள்ளியளுக்கு பயங்கரமா பிடிச்சு போச்சுது கேட்டியளா. நீங்க தான் அதுக்கு விலை போட்டு பைசா ஒண்ணும் வாங்கேல’

‘அது ஒண்ணும் வேணாம் அண்ணாச்சி நீங்களே பாவப்பட்ட பிள்ளியளுக்கு படிப்பகம் நடத்திதியோ அதுல நம்ம வெயாவாரம் செய்யப்பிடாதுல்லா’

‘உமக்கு பெரிய மனசு தான் ஓய், இது யாரு மோனா?, வாப்பாய கண்டு படிக்கணும் மக்கா. வரட்டா’

வாப்பாவின் இத்தகைய செயல்கள் அவனுக்கு நன்றாகவே தெரியும். வீட்டுக்கு வந்து உம்மாவுடன் சேர்ந்து இரவு உணவை முடித்து விட்டு தன் அறைக்கு சென்று மேசையில் அமர்ந்தான் ரஹ்மத். வாப்பா அவன் கையில் கொடுத்த பத்திரிகையில் அந்த விளம்பரத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு எழுதத் தொடங்கினான். நேரம் நள்ளிரவைத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. கட்டுரை ஒரு நல்ல வடிவம் பெற்று விட்டதாக உணர்ந்த பிறகு படுக்க சென்றான்.

காலையில் ரஹ்மத்தின் உம்மா அவன் மேசையிலிருந்த கட்டுரையை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தார். அக்கட்டுரை ‘நான் விரும்பும் இந்தியா’ எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.