2. தூக்கம் - ஒளியும், வெப்பநிலையும்
ழான் என்னும் பிரஞ்சு அறிவியலாளர் தொட்டால் சிணுங்கி செடியில் ஒரு உள்ளார்ந்த உயிரியல் கடிகார அமைப்பைக் கண்டறிந்ததைப் பார்த்தோம். இந்நிகழ்வு நடந்து சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின், 1938 ம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான நத்தானியேல் கிளைட்மேனும், அவரது ஆய்வு உதவியாளரான புருஸ் ரிச்சார்ட்சனும் இணைந்து மனிதர்களில் சிர்காடியன் இசைவு பற்றிய ஆய்வினை நடத்தினர்.
இவ்விருவரும் இருள் நிரம்பிய குகை ஒன்றில் 32 நாட்கள் தங்கியிருந்து தங்களது தூக்கம் மற்றும் விழிப்பு நிலைகளின் தன்மையையும், உடலின் வெப்பநிலையையும் பதிவு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் அவர்கள் இரண்டு முக்கியமான உண்மைகளைக் கண்டறிந்தனர். ஒன்று, தொடர்ந்து இருளில் வாழ நேர்ந்தாலும் ஏறக்குறைய 15 மணிநேர விழிப்பு நிலையும், 9 மணிநேர தூக்க நிலையும் மாறி, மாறி வருவது. இரண்டு, இந்த நிலை இருவருக்கும் வெகு சரியாக 24 மணிநேர சுழற்சியாக இல்லாமல் சில வேறுபாடுகள் இருந்தது. இந்த ஆய்வு நடந்து ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மனிதர்களில் சிர்காடியன் இசைவின் சராசரி காலஅளவு 24 மணி 15 நிமிடங்கள் என வரையறுத்துள்ளோம்.
உயிரினங்கள் இந்த பூமியில் தோன்றியதில் இருந்தே உணர்ந்து கொண்டிருக்கும் இரவு-பகல் சுழற்சி, அவற்றின் உயிரியல் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பூமியின் சுழற்சியைக் கொண்டு மட்டும் மூளை சிர்காடியன் இசைவை கட்டுப்படுத்துவது இல்லை. உணவு, உடற்பயிற்சி, வெப்பநிலை வேறுபாடுகள், சமூக உறவு நிலைகள் போன்ற மற்ற காரணிகளும் அதில் பெரும் பங்கை வகிக்கின்றன. இதற்கு உதாரணமாக முழுவதும் பார்வையற்ற ஒரு நபரிலும் இந்த சிர்காடியன் இசைவு செயல்படுவதைச் சொல்லலாம்.
மனித மூளையில் அமைந்துள்ள சிர்காடியன் இசைவை கட்டுப்படுத்துகிற அமைப்பு சுப்ராசியஸ்மாடிக் நியூக்ளியஸ் (suprachiasmatic nucleus) என்றழைக்கப்படுகிறது. இந்த அமைப்பானது நம் விழித்திரைகளில் இருந்து பார்வை உணர்வுகளை பெருமூளைக்கு எடுத்துச் செல்லும் பார்வை நரம்புகள் கடக்கும் பகுதிக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. நம் கண்கள் வழியே நாம் கடத்தும் ஒளித் தகவல்களை பயன்படுத்தி சிர்காடியன் இசைவில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சரி செய்துகொள்கிறது.
ஏறக்குறைய நூறு பில்லியன் நரம்பணுக்களாலான மனித மூளையின் அளவுடன் ஒப்பிடும் போது இந்த சுப்ராசியஸ்மாடிக் நியூக்ளியஸ் வெறும் 20,000 நரம்பணுக்களாலான சிறிய அமைப்பு தான். ஆனால் மனிதர்களின் தூக்கம் மற்றும் விழிப்பு செயல்பாடுகளில் இந்த அமைப்பின் பங்கு அளப்பெரியது.
படம்: மனித உடலின் வெப்பநிலை மற்றும் 24 மணி நேர சிர்காடியன் இசைவு இடையிலான தொடர்பை காட்டுகிறது
மனித உடலின் வெப்பநிலை தூக்கம் மற்றும் விழிப்பு செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பகல் நேரங்களில் சற்று அதிகரித்து காணப்படும் அது, இரவு நெருங்கும் போது குறையத் தொடங்கி விடுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் குறைந்தே காணப்படும் உடலின் வெப்பநிலை காலை நேரங்களில் மீண்டும் மெல்ல அதிகரிக்கிறது. நாம் தூங்கினாலும், தூங்கா விட்டாலும் இந்த நிலை ஒரு சுழற்சியாகவே நீடிக்கிறது. அதாவது உடல் வெப்பநிலை சற்றே அதிகரிப்பது விழிப்பு நிலையுடனும், சற்றே குறைவது உடல் தூக்கத்திற்கு தயாராவதையும் குறிக்கிறது. சிர்காடியன் இசைவில் இந்த வெப்பநிலை மாற்றத்தை நிர்வகிப்பது சுப்ராசியஸ்மாடிக் நியூக்ளியஸ் தான்.
தூக்கத்தை பாதிக்கும் காரணிகளில் ஒளி மற்றும் வெப்பநிலைக்கு என்ன பங்கிருக்கிறது என்பது இப்போது நமக்கு கொஞ்சம் புரிந்திருக்கும் இல்லையா?
தொடரும்..
Source: Why We Sleep by Matthew Walker