இதமாகவும், ஒளிப்பிழம்பாகவும் பகல் பொழுதில் விண்ணில் மின்னும் நட்சத்திரம் ஏதுமில்லை. அதுபோல இவ்வுலகில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையான போட்டி என்று ஏதுமில்லை. 25 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கவிதை படைத்த கிரேக்க கவிஞர் பின்டார் ஒலிம்பிக் போட்டிகளின் பெருமையைப் பற்றி கூறிய வார்த்தைகள் இவை. இன்றும் ஒரு விளையாட்டு வீரரின் கனவு என்பது ஒலிம்பிக் போட்டியில் தன் நாட்டின் சார்பாக பங்கேற்று பதக்கங்கள் வெல்வது தான்.
பண்டைய கால ஒலிம்பிக்
கிமு 776-ல் கிரேக்க நாட்டின் ஒலிம்பியா நகரில் நடந்த விளையாட்டுப் போட்டியே முதலாவது ஒலிம்பிக் போட்டி என வரலாறு பதிவு செய்துள்ளது. பண்டைய கால ஒலிம்பிக் பற்றிய பல கதைகள் கிரேக்க வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் வரலாற்று அறிஞர்களால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்புலம் யாதெனில், மன்னர் எஜியஸøடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற மாவீரன் ஹெர்குலிஸ், தமது வெற்றியின் அடையாளமாக ஒலிம்பியா என்னும் மைதானத்தை உருவாக்கியதோடு அங்கு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினார் என்பதாகும். துவக்கத்தில் 12க்கும் மேற்பட்ட கிரேக்க நகரங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். தடகள ஓட்டப்பந்தயம், மல்யுத்தம், குத்துச்சண்டை, குதிரையோட்டம் மற்றும் ராணுவ வீர விளையாட்டுகள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் ரோமாபுரி ஆட்சியாளர் முதலாம் தியடோசியசுவின் வெறுப்பினால் கிமு 393 முதல் தடை செய்யப்பட்டது.
நவீன கால ஒலிம்பிக் போட்டிகள்
அடுத்த 1500 வருடங்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளே நடக்கவில்லை. கிபி 1894ல் பிரஞ்சு கல்வியாளர் பியர் தெ குபர்த்தென் அவர்களின் முயற்சியால் பன்னாட்டு ஒலிம்பிக் குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாரீஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் காங்கிரசில் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. 1896-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் நாள் ஏதென்ஸ் நகரில் முதன்முறையாக நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த முதல் நவீன ஒலிம்பிக் போட்டியில் 280 விளையாட்டு வீரர்கள் 13 நாடுகளிலிருந்து வந்து 43 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். தொடக்க காலத்தில் விளையாட்டு போட்டிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியிலேயே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. 1924-ல் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளைத் தான் வெற்றிகரமான, முழுமையான ஒலிம்பிக் போட்டிகள் எனச் சொல்லலாம்.
1896 முதல் 2016 வரை 31 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த காலகட்டத்தில் விளையாட்டு உலகில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன, பல சாதனைகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன, விடாமுயற்சிக்கு உதாரணமாக பல விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உருவாகியிருக்கிறார்கள். இன, மத, நிற வேற்றுமைகளை புறந்தள்ளி தேசங்களுக்கிடையே ஒற்றுமை மலர ஒலிம்பிக் போட்டிகள் உதவியிருக்கிறது.
ஒலிம்பிக் சின்னங்கள்
ஐந்து வளையங்கள்: அனைத்து மக்களிடையே விளையாட்டு நட்புறவைக் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டவை-ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட ஐந்து வளையங்கள். இந்த ஐந்து வளையங்களும் ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களை குறிப்பிடுவதாகும்.
ஒலிம்பிக் தீபம்: பழங்கால மற்றும் நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடர்பை உணர்த்தும் ஜோதியாக ஒலிம்பிக் தீபம் இருக்கிறது. கிரேக்கத்தில் உள்ள ஒலிம்பியா நகரில் சூரிய சக்தியால் பற்ற வைக்கப்பட்டு, நடைபெறும் நாட்டுக்கு எடுத்து வரப்படுகிறது.
ஒலிம்பிக் கொடி: வெள்ளை நிற பின்புலத்தில் ஐந்து வளையங்களும் பதிக்கப்பட்ட கொடியே ஒலிம்பிக் போட்டிகளின் அதிகாரபூர்வ கொடியாகும்.
ஒலிம்பிக் பதிவுகள்
விரைவு, உச்சம், வலிமை என்ற வாசகத்தை குறிக்கோளாக கொண்டுள்ள ஒலிம்பிக் போட்டிகள் உலக வரலாற்றில் பல குறிப்பிடத்தக்க பதிவுகளை விட்டுச் சென்றுள்ளது.
1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தான் முதன்முதலில் பெண்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தொன்மையும், பாரம்பரியமும் நிறைந்த ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களின் பங்களிப்பு இன்றைக்கும் சிறப்பாகவே இருக்கிறது. சிறுவயதில் போலியோவாலும், பக்கவாதத்தாலும் கால்கள் செயலற்று போன போதும் அதிலிருந்து மீண்டு வந்து 1960-ம் ஆண்டில் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் தடகளப் போட்டிகளில் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்ற வில்மா ரூடால்ப் தன்னம்பிக்கைக்கு சிறந்த உதாரணம். 2016 ரியோ ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாக்ஷி மாலிக், நம் இதயங்களை வென்ற தீபா கர்மாகர், லலிதா பாபர் போன்றோரின் பங்களிப்பும் அளப்பெரியதே.
1936-ம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கருப்பின அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், 4x100 தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் வென்ற நான்கு தங்கப்பதக்கங்களும், நீளம் தாண்டுதலில் அவர் நிகழ்த்திய சாதனையும் ஹிட்லரின் இன ஆதிக்க சிந்தனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்தது. ஒரே ஒலிம்பிக் போட்டியின் நான்கு தடகள நிகழ்வுகளில் தங்கப்பதக்கங்கள் வென்ற ஓவன்ஸின் இந்த சாதனை 48 ஆண்டுகளுக்குப் பிறகே முறியடிக்கப்பட்டது.
1968-ம் ஆண்டு மெக்ஸிகோ ஒலிம்பிக்கில் கருப்பின அமெரிக்க வீரர்களான டாமி ஸ்மித்தும், ஜான் கார்லோசும் பரிசு வழங்கும் மேடையில் அமெரிக்க தேசிய கீதம் இசைக்கப்படும் போது கையில் கருப்பு கையுறை அணிந்து, கையை உயர்த்தி, தலையை தாழ்த்தி நின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு சம உரிமை வேண்டியும் அவர்கள் காட்டிய இச்செய்கை உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2016 ரியோ ஒலிம்பிக்கிலும் பல நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்தேறின. போர்களினாலும், இடர்பாடுகளாலும் பாதிக்கப்பட்டு சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து அயல்நாடுகளில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் தனி அணியாக பங்கேற்றனர். போலந்து நாட்டைச் சேர்ந்த வட்டு எறியும் வீரரான Piotr Malachowski தான் ரியோ ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப்பதக்கத்தை கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் சிகிச்சை செலவிற்கான ஏலமிட்டு உதவியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் வெறும் விளையாட்டு போட்டிகளாகவும், பொழுதுபோக்காகவும் மட்டுமல்லாது பல வழிகளில் சர்வதேச அளவில் அளப்பரிய மாற்றங்களை ஏற்படுத்தவும், அடையாளம் காட்டவும் வழிவகுக்கிறது. இளையோரிடம் உத்வேகத்தையும், சாதிக்கும் இலட்சிய நோக்கையும், சமூக அக்கறையையும் வளர்த்தெடுப்பதில் இத்தகைய விளையாட்டு போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒலிம்பிக்கின் வழி நெடுக மனித நேயமும், மதிப்பீடுகளும், பெரும்பான்மை ஆதிக்கத்திற்கு எதிரான குரல்களும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
published in October 2016 issue of Sigaram Digest
published in October 2016 issue of Sigaram Digest
No comments:
Post a Comment