உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Wednesday, April 22, 2020

பூமியும், புத்தரும்

வத்தலகுண்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது பெருமாள்மலை என்கிற சிற்றூர். அந்த சிற்றூரில் இருக்கிறது Bodhi Zendo மையம். யேசு சபை துறவி ஒருவரால் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வரும் ஜென் தியான மையம் அது. காப்பித் தோட்டங்கள்,வெண்ணெய்ப் பழ  மரங்கள் (Avacado trees), மலைக்குன்றுகள், புல்வெளிகள் என பசுமை கொஞ்சும் நிலப்பரப்பு அது. அங்கு தான் பூமியை ஸ்பரிசிக்கும் புத்தரைக் கண்டேன்.

அங்கு தங்கியிருந்த ஒரு மாலையில் எதிரே இருந்த மலைக்குன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் உச்சியில் ஒரு பழமையான தேவாலயமும், மணிக்கூண்டும் இருந்ததைக் கண்டேன். நகரின் நடுவே இரைச்சலில் முழ்கியிருக்கும் தேவாலயங்களை விட இப்படி நிசப்த வெளியில் தனித்திருக்கும் தேவாலயங்களுக்கென்று ஒரு தனி வசீகரமிருக்கிறது.

அதே மாலையில் குளிர் மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து என்னை அணைத்துக் கொண்டது. மேகங்களுக்கு நடுவே சற்று நேரம் மிதந்து கொண்டிருந்தேன். நான் கண்ட தேவாலயமும், மணிக்கூண்டும் பார்வையிலிருந்து மறைந்து போயிருந்தன. என்னை சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளை நிற குளிர் மட்டுமே வியாபித்திருந்தது. குளிரின் நிறம் வெண்மை தானா?

பௌத்தத்தில் புத்தரின் தியான நிலைகள் பல்வேறு முறைகளில்  விளக்கப்படுகின்றன. நான் பார்த்த புத்தர் தனது இடது கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு, வலது கையால் பூமியை தொட்டுணர்ந்த நிலையில் அமர்ந்திருக்கிறார். புத்தரின் இந்த நிலைக்கு பௌத்தம் அளிக்கும் விளக்கம் வெகு சுவராஸ்யமானது.

சித்தார்த்தன் போதி மர நிழலில் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறான். அவனது தியானத்தைக் கலைக்க விரும்பிய தீயசக்திகள் அவனை பயமுறுத்தி, அங்கிருந்து துரத்தப் பார்க்கின்றன. சித்தார்த்தன் அசைந்து கொடுக்கவே இல்லை. எல்லா முயற்சிகளும் தோற்றுப் போகவே, அவனிடம் இந்த பூமி எங்களுடையது, நீ இங்கிருந்து இப்போதே வெளியேறி விட வேண்டும் என்கின்றன. இந்த தருணத்தில் சித்தார்த்தன் பூமியைத் தொட்டு தனக்கு உதவி செய்ய அழைத்ததாகவும், பூமி திறந்து இவருக்கு இங்கிருக்க உரிமையுண்டு என்று பதிலளித்த போது தீய சக்திகள் அனைத்தும் மறைந்து போனதாகவும் நீள்கிறது அந்த கதை. சித்தார்த்தன் தன் சுயத்தைக் கண்டுணர்ந்து புத்தனானது இத்தகைய சூழலில் தான் என்கின்றன சில பௌத்த நூல்கள்.

புத்தர் பூமியைத் தொட்டு உணரும் இந்த நிகழ்வு மனிதர்கள் நிலத்தோடு தொடர்புடையவர்கள், மனித நாகரிகங்கள் அனைத்தும் மண்ணில் வேர்கொண்டு வளர்ந்தவை தான் என்பதை வலியுறுத்தி சொல்கிறது. மனிதர்களுக்கும், பூமிக்குமான இத்தகைய இணக்கம் துண்டிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் புத்தரின் தியான நிலை நமக்கு விட்டுச் செல்லும் செய்தி முக்கியமானது.

ஏப்ரல் 22 - உலக பூமி தினம்


Tuesday, April 14, 2020

அம்பேத்கரை வாசித்தல் #1

இந்தியாவில் சாதிகள்

இந்தியாவில் சாதிகளின் தோற்றம், வளர்ச்சி, அவற்றின் அமைப்பியக்கம் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் இந்திய சமூகத்துக்கு வெளியே இருந்து அதனை கற்றறிய முயன்றவர்கள் (டாக்டர் கெட்கர் போன்ற விதிவிலக்குகள் இருக்கவே செய்கின்றன). டாக்டர் பி. ஆர். அம்பத்கர் இந்தியாவில் சாதிகள் பற்றிய தனது கட்டுரையில் சாதி அமைப்பை அதன் அடிப்படைகளோடு, சமூகவியல் கண்ணோட்டத்தோடு நுட்பமாக அணுகியிருக்கிறார்.


சாதியின் அடிப்படையான இயல்பாக அகமணம் செய்து கொள்ளும் முறையை குறிப்பிட்டு கூறும் அம்பேத்கர், புறமண வழக்கம் தொடக்ககாலச் சமுதாயங்களில் நிலவியது என்கிறார்.

சாதியமும், அது சார்ந்த கட்டுப்பாடுகளும் ஏதோ ஒருவித தெய்வத்தன்மை பொருந்திய மதக் கோட்பாடாக இந்திய மக்களிடம் திணிக்கப்பட்டிருக்கிறது. மதங்களும், சில தத்துவங்களும் சாதியின் பழக்கவழக்கங்களை, சீரிய இலட்சியங்களாக காட்ட பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பது போன்ற கருத்துக்கள் எவ்வளவு உண்மை என்பது இந்திய சமூகத்தின் வரலாற்றையும், சமகால நிகழ்வுகளையும் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு புலனாகும்.

இரத்த தூய்மையைக் காப்பதே சாதி அமைப்பின் நோக்கம் எனக் கூறுவோர், உண்மையில் சாதி தோன்றுவதற்கு முன்பே இந்திய இனங்கள் தமக்குள் இரத்தத்தாலும், கலாச்சாரத்தாலும் கலந்து போயிருந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார். இந்த கருத்தினை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாவதன் மூலம் அம்பத்கரை ஒரு சிறந்த சமூக விஞ்ஞானி எனப் புரிந்து கொள்ளலாம்.

சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வாக கலப்புமணத்தை முன்வைக்கிறது இக்கட்டுரை. சாதியைப் போற்றுகின்ற மதங்களின் புனிதத்தின் மீதான நம்பிக்கையை ஒழிப்பதும், அவற்றின் அதிகாரங்களை மறுப்பதும் தான் மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்யும் என்கிறார்.  

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம் இந்தியாவில் ஏன் வழக்கத்திலிருந்தது? அதற்கான காரணம் என்ன? 

ஏன் குழந்தை திருமணங்கள் ஒரு சமூக வழக்கமாகவே மாறிப் போயிருந்தன?

ஏன் விதவைகள் மறுமணம் இங்கு விலக்கப்பட்டிருந்தது?

இன்றும் கூட கலப்புத் திருமணங்கள் செய்தவர்கள் ஏன் கொலை செய்யப்படுகிறார்கள்?

இன்டர்நெட் யுகத்திலும் Matrimonial களின் வழியே ஏன் அகமணமுறை இன்றும் காப்பாற்றப்படுகிறது?

இத்தகைய சமூக வழக்கங்களுக்கும், சாதிக்குமான உறவுகள் என்ன? 

மதங்கள் ஏன் அதிகாரத்தின் ஆதாரமாக இருக்கின்றன?

இப்படியான பல கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான பதில்களை தருகிறது இப்புத்தகம். இப்பதில்களும், தகவல்களும் சுருக்கமானவையே. ஆனால் இந்திய சமூகத்தில் சாதி என்னும் மனநிலையின் ஆதிக்கம் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்தி விடுகிறது . அம்பத்கரின் சிந்தனைகளை வாசிப்பதற்கான சாளரத்தையும்  திறந்து விடுகிறது.


வாசிப்போம் 

ஏப்ரல் 14 - அம்பேத்கர் பிறந்த தினம்



Tuesday, April 7, 2020

விடுதலைக்கான நெடும்பயணம் #1

(1962ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு முன் நீதிமன்றத்தில் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரையின் சுருக்கமான வடிவம். அவருடைய சுயசரிதையான Long Walk to Freedom  நூலிலிருந்து)



பல ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்கியில் (Transkei) உள்ள எனது கிராமத்தில் சிறுவனாக இருந்த போது, எங்கள் இனக்குழுவிலுள்ள பெரியவர்கள் கடந்த காலத்தைப் பற்றி சொல்ல கேட்டிருக்கிறேன். வெள்ளையர்கள் இந்த மண்ணில் கால் பதிப்பதற்கு முன்பிருந்த பொன்னான நாட்கள் அவை. இனக்குழுக்களின் தலைவர்களிடம் அதிகாரங்கள் இருந்த போதிலும் ஜனநாயக உணர்வு அவர்களிடமிருந்தது.  அந்த நாட்களில் எங்கள் மக்கள் அமைதியாக வாழ முடிந்தது, எந்த தடைகளுமின்றி சுதந்திரமாகவும், நம்பிக்கையோடும் நாடு முழுக்க செல்வதற்கான உரிமை இருந்தது. இந்த அழகிய தேசத்தின் நிலமும், காடுகளும், நதிகளும், பிற வளங்களும் எங்களுக்கானவையாக இருந்தன. அரசும், வணிகமும், ஆயுதங்களும் மக்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயே நிர்வாகம் செய்யப்பட்டன.

பண்டைய கால ஆப்பிரிக்க சமூகங்களின் கட்டமைப்பு என்னை வெகுவாக கவர்ந்திருக்கிருக்கிறது. என் அரசியல் பார்வையை உருவாக்கியதிலும், செழுமைப்படுத்தியதிலும் அதற்கு சிறப்பான ஒரு பங்கிருக்கிறது. அச்சமூகங்கங்களில் உற்பத்தியின் மிக முக்கியமான காரணியான நிலம் ஒட்டுமொத்த இனக்குழுவுக்கும் பொதுவானதாக இருந்தது. தனியுடைமை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. வர்க்க பேதமோ, சுரண்டலோ இல்லாத ஒரு சமூகமாக அது பரிணமித்தது. எல்லாரும் சுதந்திரமான, சமமான மனிதர்கள் என்கிற கோட்பாடே எங்கள் நிர்வாகங்களின் அடிப்படையாக அமைந்தது. இத்தகைய கோட்பாடுகளை பல்வேறு இனக்குழுக்களை நிர்வகிக்கும் அவைகளின் (Councils) அமைப்புச் சட்டங்களிலும் நீங்கள் காண முடியும். இந்த அவைகள் யாவும் மக்கள்மயபடுத்தப்பட்டிருந்தன. எல்லா மக்களும் அவை முன்னெடுக்கும் விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்தினை முன்வைக்கிற நிலை அன்றிருந்தது.

இன்றைய சூழலின் தேவைகளுக்கு மிகவும் பழமையானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் கருதப்படும் இச்சமூக அமைப்பு தான் புரட்சிகர ஜனநாயகத்தின் விதைகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய சமூக அமைப்பில் அடிமைத்தனமும், வறுமையும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும் ஒரு போதும் இருக்காது. இப்படிப்பட்ட ஆப்பிரிக்காவின் வரலாறு தான் இன்றும் போராடுகிற எனக்கும், என் தோழர்களுக்கும் உத்வேகம் தரக் கூடியதாக இருக்கிறது.

இந்த நாட்டில் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு ஆப்பிரிக்கனும் ஒரு விதமான முரண்பாட்டை உணர்ந்து கொண்டே இருக்கிறான். தன்னுடைய மனச்சாட்சிக்கும், இந்த நாட்டில் அமலில் இருக்கும் சட்டங்களுக்கும் இடையிலான பெரிய முரண்பாடு அது. இவ்விதமான முரண்பாடு இந்த நாட்டு குடிமக்கள் மட்டுமே உணரக் கூடிய ஒன்றல்ல, எங்கெல்லாம் சிந்திக்கத் தெரிந்த, கூர்மையான உணர்வுகள் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் எல்லோருமே இத்தகைய முரண்பாட்டை உணர்வார்கள். மேற்கத்திய தத்துவியலாளரான பெர்ட்ரண்டு ரசல் பிரிட்டனில்,  அந்நாட்டின் அணுஆயுத கொள்கைக்கு எதிராக குரலெழுப்பியதையும், அதற்காக அவர் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டதையும் ஒரு உதாரணமாக உங்கள் முன் சொல்ல விரும்புகிறேன். அவர் இத்தகைய விளைவுகளை தான் எதிர்கொள்ளக் கூடும் எனத் தெரிந்தே மக்களுக்கு நன்மை தராத தனது நாட்டின் கொள்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்தார். நானும், இன்னும் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு ஆப்பிரிக்கனும் அதைத் தான் செய்ய முயற்சி செய்கிறோம்.

இங்கு அமலில் இருக்கும் பல சட்டங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. ஆட்சியில் இருக்கும் தேசியவாத அரசினால் (Nationalist Party Government) எழுதப்பட்ட எல்லா சட்டங்களுமே அறமற்றது, அநீதியானது, சகித்துக் கொள்ள இயலாதது. நாங்கள் இத்தகைய சட்டங்களை வலுவாக எதிர்க்கிறோம், அவற்றிற்கு எதிராக கடுமையாக போராடுகிறோம், அவற்றை மாற்றி எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

இன்று நான் சில சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறேன், நான் செய்த செயல்களுக்காக அல்ல. மாறாக, எந்த மதிப்பீடுகளுக்களாக நான் போராடுகிறேனோ அதற்காக, என் சிந்தனைகளுக்காக. இப்படிப்பட்ட உயரிய இலட்சியங்களுக்காக போராடுகிறவர்களை சட்டவிரோதி எனப் புறக்கணிப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களின் படி  சில மாதங்கள் நான் சட்ட விரோதியாக தலைமறைவு வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளேன்.

கடந்த சில மாதங்களில் என் மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வாழ்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. அன்றாடம் அலுவலக வேலைகள் முடிந்த பின்னர் என் குடும்பத்தினருடன் உணவருந்துவதே பெரிதும் விரும்புகிறேன். ஆனால் உண்மையில் என் தாய்நாட்டில், சொந்தங்களையும், நண்பர்களையும் பிரிந்து காவல்துறையால் தொடர்ந்து துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். இப்படி வாழ்வது சிறையில் தண்டனை அனுபவிப்பதை விடக் கொடுமையானது. ஒரு நாகரிகமான சமுதாயத்தில் வாழுகிற எந்த மனிதனும் இத்தகைய வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை எனக் கருதுகிறேன். 

சில வேளைகளில், சில மனிதர்களுக்கு என் வாழ்க்கையில் நடந்ததைப் போன்று அவர்கள் விரும்பிய இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படலாம். அரசுகளின் சட்டங்கள் அவர்களை சட்டவிரோதியாக வாழ நிர்பந்திக்கலாம். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இப்படி வாழ நேர்ந்ததற்காக நான் ஒரு போதும் வருத்தமடையப்  போவதில்லை. என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகள் சரியானவை என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்த நாட்டில் வாழும் இன்னும் பல மக்களும் இந்த அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாவார்கள் என்பதையும் கூட என்னால் வெகு நிச்சயமாக சொல்ல முடியும்.

நீங்கள் தண்டனைகளை தருவதன் மூலம் ஒரு மனிதனின் நம்பிக்கையை அழித்து விடலாம் என நினைக்கிறீர்கள். அறம் சார்ந்து வாழ்கிற மனிதர்களின் நம்பிக்கையை எந்த தண்டனையும் உருக்குலைத்து விடாது என்பதற்கு வரலாற்றின் பக்கங்களில் சாட்சிகள்  இருக்கின்றன. நீங்கள் தரப்போகிற தண்டனைகள் என்னையோ, என் தோழர்களையோ, என் மக்களையோ இந்த போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கப் போவதில்லை. 

நம் நாட்டின் சிறைகளில் ஆப்பிரிக்கர்களின் நிலை எவ்வளவு மோசமானது என்பது தெரிந்த போதிலும் இந்த நீதிமன்றம் விதிக்கப் போகிற தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராகவே இருக்கிறேன். இந்த நாடு முழுக்க என் மக்கள் நிறத்தின் பெயரால் படும் இன்னல்களையும், பாகுபாடுகளையும் நினைக்கும் போது சிறையின் சுவர்களுக்குள் நான் அடையப் போகிற இன்னல்கள் அவ்வளவு கொடுமையானதாக இருக்காது என நம்புகிறேன்.

மீண்டுமொரு முறை உரக்கச் சொல்கிறேன், நீங்கள் தரப்போகிற தண்டனைகள் என்னையோ, என் தோழர்களையோ, என் மக்களையோ இந்த போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கப் போவதில்லை. மாறாக, அது சொந்த மண்ணில் விடுதலை நோக்கிய  நெடும்பயணத்திற்கு தூண்டுகோலாகவே இருக்கப் போகிறது. தண்டனைக் காலம் முடிந்தவுடன் ஓய்ந்து விடுவேன் என நினைத்து விடாதீர்கள். என் மக்கள் எதிர்கொள்கிற அத்தனை அநீதிகளும் முழுமையாக அழித்தொழிக்கப்படும் வரை நான் இயங்கிக் கொண்டே இருப்பேன்.

என் மக்களுக்காகவும், தென்னாப்பிரிக்காவுக்குமான என் கடமைகளைச் செய்து விட்டேன். எதிர்கால தலைமுறை நான் குற்றமற்றவன் என முடிவு செய்யும் என்பதிலும், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய உண்மையான குற்றவாளிகள் இந்த அரசின் உறுப்பினர்கள் தான் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

Book Courtesy: Fr. Sebastian :)