ஜப்பான் சார்ந்து நான் இதுவரை வாசித்த இரண்டு புத்தகங்களுமே எழுத்தாளர்கள் தங்கள் சுய அனுபவங்களைப் பதிவு செய்யும் நினைவுக் குறிப்பு (Memoir) வகையைச் சார்ந்தவை. முதல் புத்தகம் ஹருகி முராகமி தனது வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி எழுதிய What I Talk about When I Talk about Running.
இரண்டாவது புத்தகம் டெட்சுகோ குரோயாநாகி அவர்கள் எழுதிய Totto-chan: The Little Girl at the Window.
குரோயாநாகி ஜப்பானின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் திகழ்ந்தவர். யுனிசெஃப்-ன் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியவர்.
டோமோயி என்கிற பள்ளியில் தனது கற்றல் அனுபவங்களையும், குழந்தை பருவ நிகழ்வுகளையும் தான் புத்தகமாக எழுதியிருக்கிறார்.
கோபாயாஷி என்பவரால் 1937ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1945ல் அமெரிக்காவின் குண்டுவீச்சில் தரைமட்டமாக்கப்பட்ட பள்ளி அது.
சற்றெக்குறைய ஒன்பது ஆண்டுகள் மட்டுமே இயங்கிய பள்ளியில் ஒரு மாணவி பெற்ற அனுபவங்களைப் பற்றிய புத்தகம் ஜப்பானில் மட்டும் ஒரே ஆண்டில் 45 லட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. இன்றும் உலகெங்கிலும் பல பள்ளிகளில் இந்த புத்தகத்தின் சில பகுதிகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் விரும்பி கற்றுக் கொள்ளும் வகையில் கற்றல், கற்பித்தல் முறைகளைச் செயல்படுத்திய பள்ளி தான் டோமோயி. அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் எண்ணிக்கை வெறும் ஐம்பது மட்டுமே. பழைய ரயில்பெட்டிகளை மாற்றியமைத்து அதில் தான் வகுப்பறைகள் செயல்பட்டன. ஆறாவது பெட்டியாக ஒரு சிறு நூலகமும் செயல்பட்டிருக்கிறது. தலைமையாசிரியராக இருந்த கோபாயாஷி குழந்தைகளின் மீது தனிக்கவனமும், அக்கறையும் கொண்டவர்.
அத்தகைய பள்ளியில் தான் டோட்டோசான் என்கிற சிறுமி முதல் வகுப்பில் சேர்க்கப்படுகிறாள். தனது குறும்புத்தனத்தால் ஏற்கனவே படித்த பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு டோமோயிக்கு வருகிறாள்.
டோமோயின் சூழலும், அங்கு குழந்தைகளின் விருப்பங்களுக்கு கொடுக்கப்படும் முன்னுரிமையும், கனிவான ஆசிரியர்கள் மற்றும் நல்ல நண்பர்களின் துணையும் டோட்டோசானின் ஆளுமையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என விரிகிறது இந்த புத்தகம். டோட்டோசானின் குழந்தைமையை சிதைக்காமலே அவளிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது டோமோயி பள்ளி.
ஒரு குழந்தையின் அனுபவங்களினூடே இந்த புத்தகம் நம் முன்வைக்கும் கேள்விகளும், கருத்துக்களும் முக்கியமானவை. அதுவும் நம் குழந்தைகள் இயற்கையிலிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு தொடுதிரைகளுடன் வாழப் பழகத் தொடங்கியிருக்கிற இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.
வாசித்து முடிக்கையில் நாம் நம் குழந்தைகளின் குரலுக்கு செவிசாய்த்துவிட வாய்ப்பிருக்கிறது.
வாசிப்போம்.
பி.கு.: தமிழிலும் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது.