உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Monday, August 3, 2020

தூக்கத்தின் தோற்றுவாய் தேடி... #1

1. தொட்டால் சிணுங்கியின் ரகசியம்

இரவானால் ஏன் தூக்கம் வருகிறது? உயிரினங்களின் உடல்நலனில் தூக்கத்தின் பங்கு என்ன? தூங்கும் போது மனித உடலில் நிகழும் மாற்றங்கள் என்னென்ன? கனவுகள் எங்கிருந்து தோன்றுகின்றன? இது போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கிறதா?

மனிதன் சிந்திக்கத் தொடங்கியதிலிருந்தே தூக்கம் மற்றும் கனவுகள் பற்றிய புரிதல் அவனுக்குள் அவிழ்க்க முடியாத பெரும் புதிராக அடங்கியிருக்கிறது. இன்றும் உயிரினங்களின் தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வுகள் உலகெங்கும் நடந்தபடியே தான் இருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் தருகிற தரவுகளும், பதில்களும் வெகு சுவராஸ்யமானவை.

தூக்கம் சார்ந்த ஆய்வுகளில் மிக முக்கியமான தொடக்கம் 1729ம் ஆண்டு பிரஞ்சு அறிவியலாளர் ழான் ஜாக்குஸ் டி அர்டஸ் டி மைரான் (Jean-Jacques d'Ortous de Mairan) என்பவர் தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) செடியை வைத்து நடத்திய ஆய்வு. இச்செடியை உற்று கவனித்த போது ழான் கண்டறிந்தது என்ன?



தொட்டால் சிணுங்கியின் இலைகள் பகல் பொழுதுகளில் விரிந்து காணப்படும். ஏதேனும் உயிரினங்கள் அல்லது வேறு பொருட்களுடன் தொடுதல் ஏற்பட்டால் மட்டும் சுருங்கி விடும். இயல்பான இயக்கத்தில் மாலை நேரம் தொடங்கி இரவு முழுவதும் சுருங்கிய நிலையிலேயே இருக்கும். அடுத்த நாள் காலையில் மீண்டும் விரிந்த நிலைக்கு திரும்பி விடும்.

ழான் இந்த செடியை ஆய்வு செய்யும் வரை இதன் இயல்பு சூரிய ஔியோடு தொடர்புபடுத்தியே பார்க்கப்பட்டது. அதாவது சூரிய இயக்கத்தின் கட்டுப்பாட்டில் தான் தொட்டால் சிணுங்கியின் உயிரியல் செயல்பாடு இருப்பதாக கருதப்பட்டது.

ழான் ஒரு தொட்டால் சிணுங்கி செடியை எடுத்து முழுவதும் இருட்டான ஒரு பெட்டியில் 24 மணிநேரம் வைத்து ஆராய்ந்து பார்த்தார். அதன் செயல்பாடு சூரியனின் இயக்கத்தை மட்டுமே ஒத்து இருக்குமென்றால் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 24 மணிநேரமும் அதன் இலைகள் சுருங்கி இருந்திருக்க வேண்டும் தானே? ஆனால் நடந்ததாே வேறு நிகழ்வு. அதன் இயல்பான வாழிடத்தில் இருக்கும் போது குறிப்பிட்ட இடைவெளியில் சுருங்கி விரிவதைப் போன்றே பெட்டியில் அடைக்கப்பட்ட போதும் அதன் உயிரியல் செயல்பாடு இருப்பதைக் கண்டறிந்தார்.

இந்த எளிமையான ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தொட்டால் சிணுங்கி செடியினுள் ஒரு உள்ளார்ந்த உயிரியல் கடிகார அமைப்பு இருக்கலாம் என்பதை அனுமானித்தார். பிந்தைய ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உயிரினங்கள் தனக்கென உருவாக்கிக் கொண்ட சிர்காடியன் இசைவு (Circadian rhythm) தான் அந்த உயிரியல் கடிகாரத்தின் அடிப்படை எனக் கண்டறியப்பட்டது. 2017 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சிர்காடியன் இசைவை கட்டுப்படுத்துகிற மூலக்கூறுகளின் செயல்பாட்டைக் கண்டறிந்ததற்காக வழங்கப்பட்டது. மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளும் சிர்காடியன் இசைவின் செயல்பாட்டை உறுதிப்படுத்துகின்றன. மனிதர்களின் அன்றாட உயிரியல் செயல்பாடுகளை நிர்வகிப்பதிலும், தூக்கம் மற்றும் விழிப்பு நிலைகளைக் கட்டுப்படுத்துவதிலும் இந்த சிர்காடியன் இசைவு முக்கியப் பங்காற்றுகிறது.

தொடரும்..

Source: Why We Sleep by Matthew Walker

2 comments:

  1. மிக அருமையாக அறிவுப் பூர்வமான துவக்கம்... தொடர்ந்து தொடராக எழுத வாழ்த்துகள்... உங்கள் வாசிப்பும் உள்வாங்கி சிந்திக்கும் திறனும் இந்த சமூகத்துக்கு தேவை...

    ReplyDelete
  2. மிக அருமையாக அறிவுப் பூர்வமான துவக்கம்... தொடர்ந்து தொடராக எழுத வாழ்த்துகள்... உங்கள் வாசிப்பும் உள்வாங்கி சிந்திக்கும் திறனும் இந்த சமூகத்துக்கு தேவை...

    ReplyDelete