உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Saturday, September 5, 2020

தூக்கத்தின் தோற்றுவாய் தேடி.. #3

சிர்காடியன் இசைவும், பரிணாம வளர்ச்சியும்.

மனிதர்களின் தூக்கம் மற்றும் விழிப்பு நிலைகளைக் கட்டுப்படுத்தும் சிர்காடியன் இசைவு எல்லா மனிதர்களுக்கும் ஒரே வகையில் இருப்பதில்லை. 


சில மனிதர்களுக்கு இந்த 24 மணிநேர சிர்காடியன் இசைவில் விழிப்பு நிலை அதிகாலை நேரத்தில் நிகழும். இவர்களின் தூக்கநிலை முன்இரவிலேயே தொடங்கி விடும். இத்தகைய சிர்காடியன் இசைவு வாய்க்கப் பெற்றவர்கள் அதிகாலையில் நேரத்துடன் விழித்துக் கொள்பவர்களாக இருப்பார்கள்.

உலக மக்கள்தொகையில் நாற்பது சதவிகிதம் பேர் இத்தகைய சிர்காடியன் இசைவு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நேரத்துடன் விழித்துக் கொள்வது வெகு இயல்பானதாக இருக்கிறது. 

முப்பது சதவிகிதம் பேர் இரவு தாமதமாக படுக்கைக்கு செல்வதையும், காலையில் நீண்ட நேரம் கழித்து விழித்துக் கொள்வதையும் பழக்கமாக கொண்டவர்கள். இன்னொரு முப்பது சதவிகிதம் பேர் மேற்சொன்ன இரண்டு நிலைகளுக்கும் இடையே இருப்பவர்கள், இவர்களில் பலர் பெரும்பாலும் கொஞ்சம் தாமதமாக படுக்கைக்குச் செல்லக்கூடியவர்களே. 

இரவு தாமதமாகத் தூங்கும் சிர்காடியன் இசைவு வாய்க்கப் பெற்றவர்களால் அதிகாலையில் விழித்துக் கொள்வது சிரமமானது. அப்படி விழித்துக் கொண்டாலும் அவர்களால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. அவர்களது மூளையில் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் முன்மண்டை புறணி (Prefrontal Cortex) முழுமையாக செயல்படாத நிலையிலேயே இருக்கும். இது கடும் குளிர்பிரதேசங்களின் காலை நேரங்களில் ஒரு இயந்திரம் தனது இயக்க வெப்பநிலை (Operating temperature) அடைய அதிகநேரம் எடுத்துக் கொள்வதைப் போன்றது. 

எந்த வகையான சிர்காடியன் இசைவு அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது மரபியல் காரணிகள் தான். 

பொதுவாக நாம் வாழுகிற சமூகத்தில் வேறுபட்ட தூக்கம் மற்றும் விழிப்புநிலை கொண்டவர்களை ஏற்றுக்கொள்வது இல்லை. இயல்பாகவே இரவில் நெடுநேரம் விழித்திருந்து விட்டு காலையில் நேரம் கழித்து எழுபவர்களை சோம்பேறி என்றே முத்திரை குத்தி விடுகிறோம். உண்மையில் இத்தகைய குணங்கள் நமது டி.என்.ஏவிலேயே ஆழமாக பதிந்திருக்கிறது. 

அனைவருக்கும் பொதுவான பணிநேரமும் காலையில் நீண்டநேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்களை வெகுவாக பாதிக்கிறது. பணிகளில் செயல்திறன் பாதிப்பு, தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல், மன பிரச்சனைகள் என இவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம். 

இத்தகைய வேறுபட்ட சிர்காடியன் இசைவு வாய்க்கப் பெற்றவர்களுக்கு, அவர்களுக்கு ஏற்புடைய பணிநேரத்தை வரையறுப்பதும் ஒரு பெரிய சமூகப் பொறுப்பாகிறது.

சிர்காடியன் இசைவில் ஏன் இத்தகைய வேறுபாடுகள் தோன்றின என்பதைப் பின்வருமாறு விளக்கலாம். தொடக்ககால மனிதர்கள் பெரும்பாலும் சிறுசிறு குழுக்களாகவே வாழ்ந்தார்கள், உறங்கினார்கள். அப்படி ஒரு குழு இரவில் உறங்கும் போது அதிலுள்ள எல்லா உறுப்பினர்களும் உறங்கி விட்டால் குழுவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். அதாவது இந்தச் சூழலில் ஒரு ஆபத்து வருமாயின் இக்குழு உறுப்பினர்களின் உயிர் பிழைத்திருக்கும் திறன் ஏறக்குறைய 0 சதவிகிதம். இதே குழுவில் நள்ளிரவு இரண்டு மணி வரைக்கும் விழித்திருந்து விட்டு பிறகு தூங்கச் செல்பவர்களும், இரவு ஒன்பது மணிக்கே உறங்கி விட்டு விடியற்காலை 5 மணிக்கு விழித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அனைவரும் உறக்கத்தில் இருக்கும் காலம் என்பது சில மணிநேரங்கள் மட்டும் தான். இப்போது இந்த குழுவின் உயிர்பிழைத்திருக்கும் திறன் ஏறக்குறைய ஐம்பது சதவிகிதமாக உயர்ந்து விடும். 

பரிணாம வளர்ச்சி எனும் ஏணியில் மனிதர்கள் சிறப்பிடம் பெற்றதற்கு சிர்காடியன் இசைவும் முக்கிய பங்காற்றியிருக்கிறது தானே!

தொடரும்..

Source: Why we sleep by Matthew Walker


 

4 comments:

  1. சிற்காடியன் இசைவு மற்றும் மனிதர்களிடம் காணப்படும் தூக்க நேர வித்தியாசம் பற்றி அறிவியல் பூர்வமாக சொல்லி உள்ளீர்கள்.... பாராட்டுகள்...

    ReplyDelete
  2. சிற்காடியன் இசைவு மற்றும் மனிதர்களிடம் காணப்படும் தூக்க நேர வித்தியாசம் பற்றி அறிவியல் பூர்வமாக சொல்லி உள்ளீர்கள்.... பாராட்டுகள்...

    ReplyDelete
  3. சிற்காடியன் இசைவு மற்றும் மனிதர்களிடம் காணப்படும் தூக்க நேர வித்தியாசம் பற்றி அறிவியல் பூர்வமாக சொல்லி உள்ளீர்கள்.... பாராட்டுகள்...

    ReplyDelete