உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Wednesday, February 25, 2015

எபோலாவுக்கு எதிரான போர்


எபோலா (Ebola) - கடந்த சில மாதங்களாக மேற்கு ஆப்ரிக்க கண்டத்தின் பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய். பொதுவாக எபோலா வைரஸ் நோய் (Ebola Virus Disease - EVD) என அறியப்படும் இது எபோலா என்னும் நுண்கிருமியால் உண்டாகிறது. ஆப்ரிக்க காடுகளில் காணப்படும் பழந்தின்னி வெளவால்களிடமிருந்து (Fruit bats) தான் இந்த நுண்கிருமி மனிதர்களுக்கு முதன்முதலாக பரவியிருக்கிறது. எபோலா நுண்கிருமியால் பாதிக்கப்பட்ட வெளவால்களை மனிதர்கள் உண்ணும் போதோ, அவற்றின் உடல்நீர் (Body fluids) மீதான நேரடி தொடர்பின் மூலமாகவோ பரவியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. வெளவால்கள் மட்டுமன்றி சிம்பன்சி, கொரில்லா போன்ற குரங்குகள், நாய், பன்றி போன்ற விலங்குகள், எலி, அணில் போன்ற கொறிணிகள் (Rodents) ஆகியவையும் எபோலா நுண்கிருமியின் பாதிப்புக்கு எளிதாக ஆளாக நேரிடும். ஆனால் இதுவரை கொசு போன்ற பூச்சியினங்கள் மூலமாக எபோலா பரவும் என்பது நிரூபிக்கப்படவில்லை.


எபோலா - ஒரு மீள்பார்வை

    1976-ம் ஆண்டு முதன்முறையாக தெற்கு சூடானின் நசரா பகுதியில் ஒருவித மர்மக்காய்ச்சல் கண்டறியப்பட்டது. இக்காய்ச்சல் சூடான் நுண்கிருமியால் (Sudan Virus) ஏற்படுகிறது என்றும் அதற்கான மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தெற்கு சூடானில் சுமார் 151 பேர் இந்நோய்க்கு பலியாயினர். அதே ஆண்டில் சயர் (Zaire) நாட்டில் (இன்றைய காங்கோ) எபோலா தாக்குதல் கண்டறியப்பட்டது. காங்கோ நாட்டிலுள்ள எபோலா நதிக்கரையில் தோன்றி பரவியதால் எபோலா என்று பெயரிடப்பட்டது. மீண்டும் 1995-ம் ஆண்டு காங்கோவிலும், 2012-ம் ஆண்டு உகாண்டாவிலும் பரவி பல உயிர்களை பலி வாங்கிய எபோலா நுண்கிருமி நாளுக்கு நாள் பல மாறுதல்களுடன் மனிதர்களை அச்சுறுத்துவதாக சொல்லப்படுகிறது.

    இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் தொடங்கிய எபோலாவின் அச்சுறுத்தல் அதன் அண்டை நாடுகளான லைபீரியா, சியேரா லியோன், செனகல் ஆகியவற்றுக்கும் வேகமாக பரவியது. உலக சுகாதார மையத்தின் (World Health Organization - WHO) தரவுகளின்படி தற்போது பரவிக் கொண்டிருக்கும் எபோலாவின் தாக்கமே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளைத் தவிர ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஐவருக்கும் இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எபோலா - உயிர்கொல்லியா?

        உடல் நீரின் வழியே பரவும் எபோலா நுண்கிருமியால் பாதிக்கப்பட்டவருக்கு முதல் ஏழு முதல் ஒன்பது நாட்கள் வரை தலைவலி, தீராத காய்ச்சல் போன்றவை ஏற்படும். முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லையென்றால் பத்து முதல் பன்னிரண்டு நாட்களுக்குள் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழப்பதோடு உடலின் பல இடங்களில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்து விடும். பாதிக்கப்பட்டவரின் எச்சில், வியர்வை, இரத்தம் போன்றவற்றின் மீதான மற்றவர்களின் நேரடி தொடர்பால் எபோலா பரவுவதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தியே சிகிச்சையளிக்க முடியும். அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் சிகிச்சையளிப்பதும் சவாலானதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் பாதுகாப்பு உபகரணங்களின் (Personal Protective Equipment - PPE) உதவியோடும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் அர்ப்பண உணர்வாலும் எபோலா என்னும் உயிர்கொல்லிக்கு எதிரான போர் தொடர்கிறது.

எபோலாவிற்கு எதிரான போர்


சர்வதேச சமூகமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து எபோலாவுக்கு எதிரான ஒரு இயக்கத்தையே முன்னெடுத்திருக்கிறார்கள். உலக நாடுகள் பலவும் மருந்து பொருட்களையும், பாதுகாப்பு உபகரணங்களையும் எபோலாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்பிய வண்ணம் இருக்கின்றன. உலகில் மருத்துவச் சேவைக்கு புகழ்பெற்ற கியூபா தனது மருத்துவ பணியாளர்களை அனுப்பியிருக்கிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை பல மருத்துவ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. எபோலாவை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு நைஜீரியா. ஆப்ரிக்க கண்டத்தில் மிகப்பெரும் மக்கள் தொகையை கொண்ட நைஜீரியாவில் கடந்த ஜøலை மாதம் எபோலா பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்டது. அன்று முதல் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டடன. ஏற்கனவே போலியோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்னனுபவம் எபோலா ஒழிப்பிலும் கைகொடுத்தது. உலக சுகாதார நிறுவனத்தின் உதவியோடு நைஜீரியாவின் அரசு சுகாதார மையங்கள் மக்களிடையே எபோலாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தின. பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இம்முயற்சிகளின் பலனாக கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி எபோலா பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இருந்து நைஜீரியாவை நீக்கியது உலக சுகாதார நிறுவனம்.

என்ன செய்கிறது இந்தியா ?

எபோலா நோய்க்கான எந்த முகாந்திரமும் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இந்தியா தனது பரிசோதனை முயற்சிகளை தீவிரமாக செயல்படுத்தியிருக்கிறது. குறிப்பாக எபோலா பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து வரும் விமானப் பயணிகள் தகுந்த மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். எபோலா தடுப்பு நடவடிக்கையில் உதவுவதற்காக எல்லைகளற்ற மருத்துவர்கள் (Medecins Sans Frontieres - MSF) அமைப்பு மேற்கு ஆப்ரிக்காவில் தாங்கள் மேற்கொண்ட சிகிச்சை முறைகளைப் பற்றிய தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. ஏறக்குறைய 90% இறப்பு விகிதமுள்ள எபோலா, இந்தியா போன்ற நாடுகளில் பரவினால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தியா மிக எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியிருக்கிறது.

     சுகாதாரத்துறையில் தனியாரின் பங்கை ஊக்குவிக்கும் அரசு, இது போன்ற கொள்ளை நோய்களின் தாக்குதலின் போது தனது கடமைகளை மறந்து விடக்கூடாது. எபோலா மட்டுமின்றி காசநோய், தொழுநோய், கலா அசர் (Kala Azar) என்று சொல்லப்படுகின்ற கருங்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கான தடுப்பு முயற்சிகள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறங்களில் குறைந்து வரும் மருத்துவர், நோயாளிகளின் விகிதம் (Doctor to Patient ratio) சரியான அளவில் பேணப்பட வேண்டும். இந்தியாவின் கடைக்கோடியில் வாழும் கடைசி குடிமகனுக்கும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் சென்று சேர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற தொடர் முயற்சிகளாலும், அரசின் நடவடிக்கைகளாலும் மட்டுமே சுகாதாரத்தில் தன்னிறைவு இந்தியாவில் சாத்தியப்படும்.

தடுப்பு மருந்துகள் ஏன் இல்லை?

    1976-ல் தோன்றி பரவிய ஒரு நோய்க்கு இன்னும் தடுப்பு மருந்து ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பலருக்கும் புரியாக புதிராகவே இருக்கிறது. இதுவரை கண்டறியப்பட்ட மருந்துகள் பலவும் விலங்குகளில் செலுத்தப்பட்டு சோதனை செய்யும் பரிசோதனை முயற்சியைத் தாண்டவில்லை. ஆனால் மேற்கு ஆப்ரிக்காவில் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எபோலாவிற்கு ஏன் இன்னும் தடுப்பு மருந்து இல்லை என்பதற்கான ஒரு சர்வதேச சமூக-பொருளாதாரக் காரணியை சுட்டிக்காட்டியிருக்கிறது. இதுவரை எபோலாவால் பாதிக்கப்பட்டவை அனைத்தும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழும் ஆப்ரிக்க நாடுகள் தான். இன்று மருந்து சார்ந்த ஆராய்ச்சிகள், மருந்து உற்பத்தி ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரு நிறுவனங்கள் எபோலா மருந்து ஆராய்ச்சியில் போதிய வேகம் காட்டவில்லை. அப்படி மருந்து கண்டறிப்பட்டால் அதனை இந்த ஏழை நாடுகளில் சந்தைப்படுத்தும் அவர்களது லாப நோக்கம் நிறைவேறாமல் போய் விடலாம் என்பது ஒரு முக்கிய காரணம். இன்று எபோலாவிற்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் பல வளர்ந்த நாடுகள் கூட பிற்காலத்தில் எபோலா நுண்கிருமி உயிரி ஆயுதமாக (Bio weapon) பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சத்திலேயே அவற்றை செயல்படுத்தியிருக்கிறார்கள்.

    உலக சுகாதார நிறுவனம் 2015-ம் ஆண்டின் துவக்கத்தில் எபோலாவிற்கான தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று நம்பிக்கையளித்திருக்கிறது. பயன்பாட்டுக்கு வந்தபின் தொண்டு நிறுவனங்கள், சுகாதார அமைப்புகள் ஆகியவற்றின் உதவியோடு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் மருந்துகள் சென்றடைய வேண்டும். இத்தருணத்தில் வேகமாக பரவும் ஒரு கொடிய நோய்க்கு எதிராக மேற்கு ஆப்ரிக்க கண்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பெரும் பாராட்டுக்குரியவர்களே. எனவே தான் டைம் பத்திரிகை எபோலா போராளிகளை (Ebola Fighters) 2014-ம் ஆண்டின் சிறந்த மனிதர்கள் என அறிவித்திருக்கிறது. உயிரை பணயம் வைத்து உயிர் காக்கும் பணியைச் செய்யும் இவர்களே உண்மையான மனிதநேயச் செம்மல்கள். இந்தியாவிலும் மருத்துவத்துறையில் பணியாற்றுகிறவர்களுக்கும், மருத்துவ துறையை தேர்வு செய்கிறவர்களுக்கும் இந்த போராட்ட உணர்வு வேண்டும்.

பயணங்கள் தொடரும்...சவால்களையும், சாதனைகளையும் தேடி.

சிகரம் டைஜஸ்ட், டிசம்பர் 2014

No comments:

Post a Comment