உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Friday, July 17, 2015

இஸ்ரோவின் சாதனை




GSLV-D5

2014-ஐ மிகவும் வெற்றிகரமானதாக துவக்கியிருக்கிறது நமது இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ. கடந்த (2014) ஜனவரி 5-ம் தேதி சுமார் இரண்டு டன் (1982 கிலோ) எடையுள்ள ஜிசாட் - 14 என்னும் தகவல்தொடர்பு செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி புவிவட்டப்பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தி சாதனை படைத்தது. 
GSAT-14

 இஸ்ரோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பி.எஸ்.எல்.வி (PSLV) மற்றும் ஜி.எஸ்.எல்.வி (GSLV) ஆகிய இரண்டு ராக்கெட்டுகளை மட்டுமே தற்போது பயன்படுத்தி வருகிறது. இதில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டால் குறைவான உயரத்தில் இரண்டு டன்னுக்கும் குறைவான செயற்கைக்கோள்களையே நிலைநிறுத்த முடியும். இதுவரை 30 தடவை விண்ணில் ஏவப்பட்டு 29 முறை வெற்றி கண்டிருக்கிறது. இஸ்ரோவின் வெற்றிகரமான ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி திகழ்கிறது. ஆனால் இந்தியாவின் வருங்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு பி.எஸ்.எல்.வி மட்டும் போதுமானதல்ல.
இந்தியா சிறிய செயற்கைக்கோள்களை மட்டுமல்லாது எடைமிக்க செயற்கைகோள்களையும் தயாரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் எடை மிக்கதாகவும், அதிக உயரத்தில் (பூமியிலிருந்து சுமார் 35 ஆயிரம் கி.மீ.) நிலை நிறுத்தப்பட வேண்டியவை. கடந்த 2013-ஆம் ஆண்டில் இஸ்ரோ செலுத்திய இன்சாட்-3ஈ மற்றும் ஜிசாட்-7 என்ற இரண்டு செயற்கைக்கோள்களும் 2 டன்னுக்கும் அதிகமான எடை கொண்டவை. எனவே, இவ்விரு செயற்கைக்கோள்களும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரஞ்சு கயானாவின், கூரு ஏவுதளத்திலிருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இவ்வாறு செயற்கைக்கோள்கள் செலுத்தப்படும் போது அவற்றை கூருவுக்கு எடுத்துச் செல்லும் செலவு, உயரே செலுத்த நாம் அளிக்கும் கட்டணம் என செலவுகள் மிக அதிகமாக இருக்கும். வருங்காலத்தில் இத்தகைய செலவுகளை குறைக்கவும், விண்வெளி ஆய்வில் சுயச்சார்போடு செயலாற்றவும் இஸ்ரோவிற்கு சக்திமிக்க ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி தேவைப்படுகிறது. 

இதுவரை எட்டு முறை விண்ணில் ஏவப்பட்டுள்ள ஜி.எஸ்.எல்.வி மூன்று முறை தோல்வியடைந்திருக்கிறது. அதிக எடைமிக்க செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பயன்படும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் கிரையோஜெனிக் (கடும் குளிர்விர்ப்பு நிலை) ராக்கெட் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை என்ஜின்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் பணம் கொடுத்து ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா 1990-ல் முயன்ற போது அமெரிக்கா குறுக்கிட்டு ரஷ்யாவிடமிருந்து இத்தொழில்நுட்பம் கிடைக்காதபடி தடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கிரையோஜெனிக் என்ஜின்களை தயாரிப்பதிலும், சோதனை செய்வதிலும், ராக்கெட் இயக்கத்தின் போது அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதிலும் பல தொழில்நுட்ப சவால்கள் உள்ளன.

நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக பாடுபட்டு, பல கட்ட மேம்படுத்தல் மற்றும் சோதனை ஓட்டங்களுக்கு பிறகு கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்கும் முயற்சியில் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார்கள். இதற்கு சான்றாக மேலே குறிப்பிடப்பட்ட சமீபத்திய சாதனையை சொல்லலாம். இந்த ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட்டில் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மகத்தான வெற்றியின் மூலம் சொந்தமாக கிரையோஜெனிக் என்ஜின்கள் தயாரித்த 6-வது நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகால உழைப்பின் வெற்றி என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில், வருங்காலங்களில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இதை விட சக்திமிக்க ராக்கெட்டுகள் தேவைப்படுகின்றன என்பதும், நான்கு முதல் ஐந்து டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு உதவும் ஜி.எஸ்.எல்.வி மார்க் III (GSLV Mk III) ரக ராக்கெட்டுகள் இன்னும் உருவாக்க முயற்சியில் தான் இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள். 

பெருகி வரும் தகவல் தொழில்நுட்ப தேவைகளுக்கும், பேரிடர் மேலாண்மை (Disaster Management), தொலையுணர்தல் (Remote Sensing), இடஞ்சுட்டல் (Navigation) போன்வற்றிற்கும் ஆற்றல்மிக்க செயற்கைகோள்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய தேவைகளை மனதில் கொண்டு மக்களின் பயன்பாட்டிற்கும், நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் உதவுகிற திட்டங்களை இஸ்ரோ தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. இந்திய பொருளாதார, தகவல் தொடர்பு மற்றும் மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டால் இஸ்ரோவின் நோக்கங்கள் நிறைவேறும் என நம்பலாம். 

சிகரம் டைஜஸ்ட், ஜனவரி 2014

No comments:

Post a Comment