ஏப்ரல்-22, உலக புவி தினம் (World Earth Day), ஜூன் -5, உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) என நாம் வாழும் இந்த அருமையான பூமியின் நலன் காக்க பல சிறப்புத் தினங்களை ஏற்படுத்தி, பெரும் விழாக்களாக கொண்டாடுகிறோம். எதற்காக இந்த தினங்கள்? ஏன் இத்தனை கொண்டாட்டங்கள்? நல்ல பல மாற்றங்கள் வேகமாக நிகழும் இந்த நவீன உலகமானது எதிர்மறையான சில விளைவுகளையும் தன்னகத்தே கொண்டே பரிணமித்துக் கொண்டிருக்கிறது.
பருவநிலை மாற்றம் (Climate Change) கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு தீய விளைவுகளை இப்புவியில் ஏற்படுத்தியிருக்கிறது. அண்மை காலங்களில் உலகெங்கிலும் நிகழ்ந்து வருகிற பெரும் வெள்ளப்பெருக்குகள், சூறாவளிகள், வறட்சி நிலைமைகள், நில நடுக்கங்கள், கடல்மட்ட உயர்வால் மூழ்குகிற குட்டித்தீவுகள் என இன்னும் ஏனைய இயற்கை பேரிடர்கள் புவிக்கோளத்தின் உயிர்ப்பிழைப்பு குறித்த அபாயகரமான கேள்வியை நம்முன் எழுப்பி வருகிறது.
பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வளங்கள் நிறைந்த இப்புவிக்கோளத்தை சேதமில்லாமல் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய முயற்சிகளை முன்னேடுக்கவும் இத்தகைய தினங்கள் இன்றைய காலத்தின் தேவைகளாகி விட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம்
இன்று பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுவோர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP) அதிகரிப்பு தான் வளர்ச்சி என்கின்றனர். ஆனால் ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாடு போன்றவற்றுடன் சூழியல் தொடர்புடைய காரணிகளும் வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றமும் அவை தொழிற்சாலை உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்களும் மானுட வாழ்க்கையையும் அது இயங்கும் சூழலையும் முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் பூமியும், பூமியின் இயற்கைச் சூழலும் பாழ்படுத்தப்பட்டிருக்கிறது. பூமியின் இயங்கு சூழல் மாற்றத்தால் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு புவி வெப்பமயமாகியிருக்கிறது. கடந்த 131 ஆண்டுகளில் 2010-ம் ஆண்டு தான் அதிக வெப்பம் வாய்த்த ஆண்டென உலக வெப்ப அளவீட்டு கருவிகள் மற்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. உலகவெப்பமயமாக்கத்தால் (Global Warming) உருச்சிதையும் ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பனிப்பாறைகள் பெரிய அளவில் கடல்மட்டத்தை உயர வைத்து விடும். இதே அளவில் வெப்பமயமாக்கம் தொடர்ந்தால் பல தீவு நாடுகள் நீரில் முழ்க நேரிடும், மேலும் பல கோடி மக்கள் கடும் அழிவுகளை சந்திப்பார்கள். எனவே தான் ஐ.நா.வின் அங்கமான ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (United Nations Environment Programme - UNEP) இவ்வாண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தினை ‘குரலை உயர்த்துவோம் கடல் மட்டத்தை அல்ல’ ((Raise your Voice, not the Sea Level) என்ற தலைப்புடன் அனுசரித்தது.
பருவநிலை மாற்றத்திற்கான காரணம்
இன்றைய தொழில்யுகத்தின் பொருளுற்பத்திக்கான மூல வளங்களை வழங்குவதில் பெரும் பங்களிப்பு செய்வது புதைபடிம எரிபொருள்கள் (Fossil Fuels) ஆகும். நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருள்கள் தொழிற்சாலைகள் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இப்புதைபடிம எரிபொருட்கள் அதிக அளவிலான பசுமைக்குடில் வாயுக்களான (Green House Gases) கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய ஏழு கோடி டன் பசுமைக்குடில் வாயுக்கள் திணிக்கப்படுகிறது. இதில் பாதி அளவு கூட கடல்களாலோ, காடுகளாலோ மறுசுழற்சி செய்ய முடியாதவை. வளிமண்டலத்தின் மீதான அளவுக்கு அதிகமான பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வால் பசுமைக்குடில் அடுக்கானது அதிக அளவிலான சூரிய வெப்ப கதிர்களை பூமிக்குள் ஈர்த்து அனுப்பத் தொடங்குகிறது. இதனால் புவியின் சராசரி வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்வதோடு வளிமண்டலத்தின் தட்பவெப்ப சமநிலையையும் சீர்குலைக்கிறது.
புவியின் வெப்பம் தணிக்க
பருவநிலை மாற்றம் தொடர்பான சூழலியல் போராட்டங்களை 90களில் பல பசுமை இயக்கங்கள் முன்னெடுத்தன. மனித இனம் சூழலியல் சிக்கல்களுக்கு தீர்வை நோக்கி நகர வேண்டும் என்று வற்புறுத்திய அவ்வியக்கங்கள், சமூக-அரசியல் தளத்தில் அதிர்வலைகளை உண்டாக்கின. இதன் விளைவாக 1992-ம் ஆண்டு பருவ நிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) என்னும் ஒப்பந்தம் ரியோ டி ஜெனிரோ நகரில் 154 நாடுகளால் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின் உலகநாடுகளால் வெளியிடப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் விகிதத்தினை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகள் (Conference of Parties - COP) நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 20 முறை இம்மாநாடுகள் நடந்துள்ளன. இறுதியாக 2013 நவம்பர் மாதம் COP - 20 மாநாடு பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்றது. விவாதங்களின் முடிவில் சில நல்ல முடிவுகள் எட்டப்பட்டாலும், இம்மாநாடுகளில் முன்மொழியப்பட்ட செயல்திட்டங்கள் முழு செயலாக்கம் பெறுகின்றனவா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.
இன்றைய காலச்சூழலில் பெருநிறுவனங்கள் சமூகத்தின் தேவையை மட்டுமே இலக்காக கொண்டு தன் உற்பத்தி அமைப்பை ஒழுங்கமைப்பதில்லை. மாறாக விரைவான உற்பத்தி மற்றும் அதிகமான லாபம் என்ற கோட்பாட்டை மையப்படுத்தி தான் தங்களது உற்பத்தி முறையை ஒழுங்கமைக்கின்றன. இதன் விளைவாக இயற்கை வளங்கள் வேகமாக அழிக்கப்படுவதும், ஏழை தொழிலாளர்களின் கடின உழைப்பு சுரண்டப்படுவதும், இயற்கையில் நச்சுப் பொருட்கள் திணிக்கப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. வளமான, பலமான நமது பூமி வெகுவிரைவாக பலமிழந்து வருகிறது. இந்த புவியை மீண்டும் பலமாக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டிருக்கிறது. இந்த பூமியின் குடிமக்களாக அதன் வளங்களை அனுபவித்து வாழும் நாம் அனைவரிலும் நமது அடுத்த தலைமுறையிடம் இந்த பூமியை எப்படி அளிக்கப் போகிறோம்? என்கிற கேள்வி எழ வேண்டும்.
நல்ல காற்று, சுத்தமான குடிநீர், ஒலிமாசற்ற சுற்றுச்சூழல் போன்றவை இருந்தால் தான் சிந்திக்கிற, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். இத்தகைய நிறைவுகளை அடையும் போது தான் அது ஒரு நிலையான வளர்ச்சி என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சூழலை சிதைத்து இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக சுரண்டும் உற்பத்தி முறையில் தீவிர மாற்றங்கள் நிகழ வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும் வளர்ந்த நாடுகளும் இதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சிகரம் டைஜஸ்ட், ஜூன், ஜூலை 2014
பயணங்கள் தொடரும்..
சவால்களையும், சாதனைகளையும் தேடி...
பயணங்கள் தொடரும்..
சவால்களையும், சாதனைகளையும் தேடி...
.
No comments:
Post a Comment