தனது தாயாருடன் ருக்ஷார் காதூன்
ஜனவரி 13, 2011 இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ருக்ஷார் காதூன் என்கிற 18 மாத குழந்தையை நம்மில் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இளம்பிள்ளை வாத நோயால் (போலியோ) கால்கள் முடக்கப்பட்டு தற்போது தனது ஐந்தாவது பிறந்தநாளை நோக்கி காத்திருக்கும் இந்த சிறுமி தான் இந்தியாவில் போலியோ தாக்குதலுக்குள்ளான கடைசி நபர். இவ்வருடம் (2014) ஜனவரி 13 -ஆம் நாள் ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய பிறகு தான் போலியோவின் தாக்கம் எத்தகையது, அதனால் பாதிக்கப்பட்டு தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்தவர்கள் எத்தனை இலட்சம் என்பதை நாம் திருப்பி பார்த்திருப்போம். நாடு முழுவதுமுள்ள சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், ருக்ஷாருக்கு பிறகு எந்தவொரு போலியோ பாதிப்பும் இந்தியாவில் பதிவாகவில்லை. சுமார் 120 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரு கொடிய நோயை முற்றிலும் ஒழித்திருக்கிறோம். இந்நிகழ்வானது பொதுச்சுகாதாரத்தில் ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகிறது.
போலியோ நோயைப் பற்றி
இளம்பிள்ளை வாதம் என்றழைக்கப்படும் இந்நோய் பாதிக்கப்பட்டவரின் மலம், மலத்துகள்களால் மாசடைந்த நீர், உணவு ஆகியவற்றின் மூலம் பரவும் ஒரு தொற்று நோயாகும், பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை எளிதாக தாக்கும் போலியோ நுண்கிருமி, பாதிக்கப்பட்டவரின் இரத்த ஓட்டத்துடன் கலந்து, மைய நரம்பு தொகுதிக்கு (Central Nervous System) சென்று, இயக்க நரம்பணுக்களை (Motor Neurons) தாக்குவதால் தசைநார்கள் (Muscle Fibres) பலவீனமுற்று தீவிரமான தளர்வாதம் (Paralysis) உருவாகிறது. பொதுவாக இந்நோய் கால் தசைகளை தாக்கி, செயல்பாடற்றதாக மாற்றி, நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
இந்தியாவில் போலியோ
1980-களில் இந்தியா முழுவதும் ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் முதல் நான்கு லட்சம் குழந்தைகள் போலியோ நோய் தாக்குதலுக்கு உள்ளாயினர். நாளொன்றுக்கு 500 முதல் 1000 பேரிடம் இந்நோய் தாக்குதல் கண்டறியப்பட்டது. தளர்வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 1000 பேருக்கு இருவர் உயிரிழந்தனர். நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் ஒரு சதவிகிதம் பேருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்தது. சுகாதாரமற்ற திறந்தவெளி கழிப்பிடங்கள் நோய் பரவலை அதிகப்படுத்தியது.
போலியோவிற்கு எதிரான போர்
1988-ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) போலியோவிற்கு எதிரான உலகளாவிய இயக்கத்தை (Global Movement for Polio Eradication) தோற்றுவித்து தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் போலியோ தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, Oral Polio Vaccine எனப்படும் வாய்வழி சொட்டு மருந்தையும் அறிமுகப்படுத்தியது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF), ரோட்டரி பவுண்டேஷன் மற்றும் பல்வேறு நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு போலியோ தடுப்பு நடவடிக்கை உலகெங்கும் முடுக்கி விடப்பட்டது. இம்முயற்சிக்கு பிறகு உலக அளவில் போலியாவின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்தது, இருப்பினும் இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தனித்துவமான செயல்பாடுகள் தேவைப்பட்டன. எனவே, 1995-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் உதவியோடு Pulse Polio Immunization எனப்படும் ஒருங்கிணைந்த போலியோ தடுப்பு நடவடிக்கை நாடெங்கும் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆண்டுக்கு இருமுறை போலியோ தடுப்பு சொட்டு மருந்து, சிறப்பு முகாம்கள் அமைத்து வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 24 லட்சம் சுகாதார பணியாளர்கள், 1.5 லட்சம் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் என பல லட்சம் மக்களின் பங்களிப்போடு ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளாக இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மலைபிரதேசங்கள், கிராமங்கள், ரயில், பேருந்து, விமான நிலையங்கள், பெரிய அலுவலகங்களிலிருந்து செங்கல் சூளை வரைக்குமான பலவகை பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டன. சாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பு மக்களையும் தடுப்பு மருந்து சென்றடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய முயற்சிகளின் பலனாக, கடந்த மூன்று ஆண்டுகளில் போலியோவின் தாக்கம் முற்றிலுமாக குறைந்திருக்கிறது. 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி உலக சுகாதார அமைப்பானது போலியோ பாதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது. இந்திய நகரங்களில் சேகரிக்கப்பட்ட சில மாதிரிகளின் ஆய்வு முடிவுகளுக்குப் பின், போலியோ இல்லாத நாடு என்கிற அந்தஸ்து கிடைத்து விடும்.
இது சிறப்பான முன்னேற்றம், ஏன்?
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொது சுகாதாரத்திற்காக 1 சதவிகிதத்திற்கும் குறைவாக செலவிடும் தேசம், மக்கள் தொகை, அதிலும் குறிப்பாக சுகாதாரம் பற்றிய போதிய வழிப்புணர்வு இல்லாத கிராமப்புற மக்கள், போலியோ நுண்கிருமி தொற்றுக்கு ஏதுவானதாக அமைந்த திறந்தவெளி கழிப்பிடங்கள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தான் போலியோ தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறோம். கடந்த 19 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த மத்திய, மாநில அரசுகள், சேவைப் பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள், பணியாளர்கள், உலக சுகாதார அமைப்பு, தொழில்நுட்ப உதவியளித்த ஊடகங்கள் என அனைத்து தரப்பினரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் இந்த மாபெரும் முன்னேற்றம்.
ஒரு நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்றால் ஆரோக்கியமான மனித வளம் மிகவும் அவசியம். அந்த வகையில் 2000-ம் ஆண்டில் இருந்து போலியோ தடுப்பு முகாம்களுக்காக ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஏனெனில் போலியோ போன்ற நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயானது மனித மாண்பை சிதைத்து, மனித வள ஆற்றலை முற்றிலுமாக முடக்கக் கூடியது. தடுக்கக்கூடிய நோயினால் ஒரு மனிதன் பாதிக்கப்படுகிறான் என்றால் அங்கே நலமாக வாழும் அடிப்படை மனித உரிமை மறுக்கப்படுகிறது என்று பொருள். போலியோ இல்லா இந்தியாவை உருவாக்கியிருக்கும் இந்த வேளையில், இம்முன்னேற்றத்தை எட்டுவதற்கு நாம் எடுத்துக் கொண்ட காலம் குறுகியதல்ல என்பதும், சுகாதாரத் துறையில் அடைய வேண்டிய முன்னேற்றங்கள் நம் முன் மிகப்பெரிய சவால்களாக நிறைந்திருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இன்னும் போலியோவின் தாக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. எனவே அங்கிருந்து போலியோ கிருமிகள் ஊடுவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையும் அவசியமாகிறது. திட்டமிட்டு செயல்பட்டால் மிகப்பெரிய இலக்குகளையும் எட்டிவிடலாம் என்பதற்கு இந்தியாவில் போலியோ ஒழிப்பு ஒரு அருமையான எடுத்துக்காட்டு.
பயணங்கள் தொடரும்...
சவால்களையும், சாதனைகளையும் தேடி...
சிகரம் டைஜஸ்ட், பிப்ரவரி 2014
No comments:
Post a Comment