உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Sunday, February 3, 2019

போர்களின் நிலத்திலிருந்து ஒரு நம்பிக்கையின் ஒளிக்கீற்று

 

A Thousand Splendid Suns by Khaled Hosseini



போர்கள் அமைதியான, வளமான எதிர்காலத்தை செதுக்கி தள்ளிவிடும் கூர்மையில்லாத உளிகள் என்றவர் மார்ட்டின் லூதர் கிங். 

வரலாற்றின் பக்கங்களில் பல்வேறு கலாச்சாரங்களின் பிறப்பிடமாக திகழ்ந்த ஒரு நிலபரப்பு ஆப்கானிஸ்தான். 1950களுக்குப் பிறகு வல்லாதிக்கங்களின் ஆக்கிரமிப்பாலும், மத அடிப்படைவாதத்தை கொண்டாடும் பிற்போக்குவாதிகளின் ஆதிக்கத்தாலும் சிதைக்கப்பட்டு, உள்நாட்டு கலகங்களாலும், வன்முறைகளாலும் துண்டாடப்பட்டு கையறு நிலையில் இன்றும் நிற்கிறது நாம் சமகாலத்தில் காணும் ஆப்கானிஸ்தான்.

இந்த மண்ணின் கதையை, போர்களின் கொடுந்துயரத்தை, பிற்போக்குத்தனங்களின் கொடூரங்களை அற்புதமான ஒரு புனைவாக நம் கையில் தந்திருக்கிறார் கலித் ஹோசினி. 

உலகில் எந்த நிலப்பரப்பிலும் யார் யாரை கைப்பற்ற போரிட்டாலும் அதன் பாதிப்பை சுமந்து நிற்பது பெண்களும், குழந்தைகளுமாகவே இருக்கிறார்கள். அதனால் தான் ஹோசினி இரண்டு வலுவான பெண் கதாபாத்திரங்களான மரியத்தையும், லைலாவையும் கொண்டு ஏறக்குறைய முப்பதாண்டு கால ஆப்கனின் வரலாற்றை சொல்லி விடுகிறார்.

மத அடிப்படைவாதமும், அது சார்ந்த கட்டுப்பாடுகளும், அதனூடே வெளிப்படும் ஆணாதிக்கத்தின் கூறுகளும் பெண்களின் மீது திணிக்கும் வன்முறைகளை வலி நிறைந்த பக்கங்களில் பதிவு செய்கிறது இந்த நாவல். ஹோசினி தனது பெண் கதாபாத்திரங்களின் அன்பை, பரிவை, ஏக்கத்தை, காத்திருப்பின் வலியை, பிரிவுத்துயரை, அவர்களின் திடமான முடிவுகளை சிறப்பாக எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆப்கனின் நகரங்கள், கிராமங்கள், தெரு வீதிகள், போர்க் காட்சிகள், உணவு பழக்கவழக்கங்கள், கலாச்சார மற்றும் நிலவியல் கூறுகள் என எல்லாவற்றையும் எழுத்தில் வடித்து காட்சிப் படிமமாக மாற்றி வாசகனுக்குள் செலுத்தி விடுகிறது இப்புனைவு. ஆப்கனை பற்றி அறிந்திராதவர்கள் கூட அதன் வரலாற்றை கட்டாயம் கூகுளில் தேடி படித்து விடக் கூடும்.

பாமியன் புத்தர் சிலைகளை நாவலின் இரண்டு வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டு காட்டி அதன் வழியே, மாறிய ஆப்கனின் நிலையை வெகு இயல்பாக வாசகனிடம் கொண்டு சேர்த்து விடுகிறார். தாலிபன்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு, பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சூழலிலும், குழந்தைகளுக்கான காப்பகத்தில் ஆஸிஸா கல்வி பயிலும் இடம், பெண்களுக்கு சமமான, தரமான கல்வியை கொடுப்பது தான் அவர்களின் மீட்சிக்கான ஒரே வழி என உரக்கப் பேசுகிறது.

எங்கெல்லாம் போர்களும், வன்முறைகளும் நடக்கிறதோ அங்கெல்லாம் மரியம்களும், லைலாக்களும், அஸிஸாக்களும் உயிர் பயத்தில், பசி மயக்கத்தில், ஐநாவின் அழுக்கடைந்த அகதி முகாம்களில் ஒதுங்கியிருக்கக் கூடும். அவர்களிடம் சொல்வதற்கு நம்மிடம் கலித் ஹோசினியின் இந்த வரிகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன.

“Joseph shall return to Canaan, grieve not,
  Hovels shall turn to rose gardens, grieve not.
  If a flood should arrive, to drown all that’s alive,
  Noah is your guide in the typhoon’s eye, grieve not”

(மூலம்: பாரசீக கவி ஹாபிஸின் கவிதையிலிருந்து...) 

வாசித்து பாருங்கள் என்று புத்தகத்தை கடனாக கொடுத்த வெர்ஜினுக்கு நன்றிகள் பல..

No comments:

Post a Comment