உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Friday, June 28, 2019

மரணத்திலிருந்து மீண்ட மலாலாவின் கதை

I am Malala: The Girl Who Stood Up for Education and Was Shot by the Taliban
by Malala Yousafzai with Christina Lamb

யார் இந்த மலாலா?

2012ம் ஆண்டுக்கு பிறகு உங்களில் சிலர் இந்த பெயரை செய்திகளில் படித்திருக்கக்கூடும். விரைவில் அவர் நலம் பெற்று விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்திருக்கக் கூடும். 2014ம் ஆண்டு இந்தியாவின் கைலாஷ் சத்தியார்த்தியோடு இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற போது வியப்படைந்திருக்கக் கூடும்.
சிறு வயதிலிருந்தே பெண்களின் கல்விக்காக, உரிமைகளுக்காக போராடிய ஒரு வலிமையான போராளி தான் இந்த மலாலா, அவருடைய சுயசரிதையே மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இப்புத்தகம்.தன்னுடைய இந்த சுயசரிதையை பதினாறாவது வயதில் இங்கிலாந்தின் பத்திரிகையாளரான கிறிஸ்டினா லாம்ப்புடன் இணைந்து எழுதியிருக்கிறார் மலாலா.



நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பஷ்தூன் இன மக்கள் அதிகமாக வாழும் ஸ்வாட் பள்ளதாக்கின் மின்கோரா எனும் சிறுநகரில் தனது பெற்றோருக்கு மூத்த மகளாக பிறந்தவர். ஆண் குழந்தைகளின் பிறப்பை மட்டுமே மகிழ்ச்சியாக கொண்டாடுகிற ஒரு சமூகத்தில் இவரது தந்தை ஜியாதுதீன் சற்றே வித்தியாசமானவர், முற்போக்கு சிந்தனை கொண்டவர். அத்தகைய தந்தையின் அரவணைப்பிலும், வழிகாட்டுதலிலும் சிறு வயதிலேயே பெண்களின் உரிமைக்காக பல தளங்களில் தைரியமாக பேசியவர், எழுதியவர். துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவிலும் கல்வியின் மீதும், புத்தகங்களின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தவர்.

இந்த புத்தகம் மலாலாவின் சுயத்தை மட்டும் பற்றி பேசவில்லை என்பதில் தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது. தான் பிறந்து வளர்ந்த சூழலை, அந்த நாட்டின் வரலாற்று பின்புலத்தோடும், கலாச்சார கூறுகளோடும் விளக்கியிருக்கிறார் மலாலா. மத அடிப்படைவாதிகளின் கைகளில் ஆட்சியும், அதிகாரங்களுமிருந்தால் என்னவெல்லாம் எதிர்மறையான விளைவுகளை சாமானிய மக்கள் சந்திக்க நேரும் என்பதற்கு இந்த புத்தகத்தில் நாம் வாசிக்கும் நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம்.

பனி போர்த்திய மலைகள், நீர் வீழ்ச்சிகள், தூய நீர் கொண்ட ஏரிகள் என செழுமையாக இருந்த ஒரு நிலப்பரப்பு தாலிபன்களின் பிடியில் சிக்குண்டு, ராணுவத்தின் தலையீட்டால் நடந்த தொடர் சண்டைகளால் சிதைவுற்று மெல்ல, மெல்ல போர்களின் நிலமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் மலாலாவின் குடும்பம் உட்பட பல குடும்பங்கள் ஸ்வாட் பகுதியை விட்டு விலகி  உள்ளூர் அகதிகளாக அலைத்து திரிவதையும் பதிவு செய்கிறது. இத்தகைய சூழலிலும் பெண்களுக்கு கல்வி அளிக்கும் மலாலாவின் தந்தை ஜியாதுதீன் நடத்தும் பள்ளிக்கூடம், அடர்ந்த காரிருளில் பெருவெளிச்சமாகத் தெரிகிறது. இத்தகைய வன்முறைகளுக்கு நடுவிலும் மலாலா கல்வி கற்பதையோ, பெண்களின் கல்விக்காக குரல் கொடுப்பதையோ நிறுத்தவே இல்லை.

மதங்களின் பெயரால் தாங்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டங்களை, பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தாலிபன்களால் கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும்  பெண்களுக்கு சம உரிமை, பெண்கள் கல்வி கற்பது போன்ற செயல்களை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இறுதியாக மலாலாவை நோக்கியும் அவர்களது கொடுங்கரம் நீள்கிறது. 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பள்ளியில் தேர்வு முடித்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வழியில் தாலிபன்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிறார் மலாலா. போராளிகளை துப்பாக்கி குண்டுகளால் கொன்று விட முடியுமா என்ன? மலாலாவின் இடது கண்ணின் ஓரம் குண்டு பாய்ந்து மூளைக்கு வெகு அருகாமையில் துளைத்து செல்கிறது. அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே வாசகர்களிடையே கண்ணீரை வரவழைக்கக் கூடியது.

படுகாயங்களுடன் ராவல்பிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் கூட அவருடைய உயிருக்கு பாதுகாப்பற்ற சூழலில், உலக அளவில் கவனம் பெற்று விட்ட மலாலாவுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்கின்றன. மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்தின் பிரிம்மிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. மருத்துவ குழுவின் உதவியோடு மலாலா மீண்டு வரும் பகுதி, நல்ல மனிதர்களும், நம்பிக்கையும் துணையிருந்தால் வாழ்வின் மிக மோசமான நிகழ்வுகளையும் கடந்து விடலாம் என்ற உணர்வை வாசகர்களுக்குள் விதைத்து விட்டு போகிறது.

நள்ளிரவில் உருவாக்கப்பட்ட தேசத்திலிருந்து வந்த ஒரு சாமானிய பெண்ணின் குரல் இன்றும் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களின் குரலாக உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்த மலாலா ஐநா சபையில் தான் ஆற்றிய முதல் உரையின் போது இவ்வாறு குறிப்பிட்டார், ‘ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம் மற்றும் ஒரு பேனா உலகை மாற்றி விட முடியும்’. முடியும் தானே.

பி.கு. 'நான் மலாலா' என்ற பெயரில் தமிழிலும் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது. 

Sunday, June 9, 2019

ஒரு கத சொல்லட்டா சார் ? #2

சாமி மரம்
***********
“அப்பா, அப்பா எந்திரிங்க, சாமி மரத்தை வெட்ட ஆள் வந்திருக்கு“ என்றபடி தனது அப்பாவை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள் இலக்கியா.

“அவரே நேத்து ஓவர்டைம் பாத்துட்டு லேட்டா வந்து படுத்துருக்காரு அவர ஏன்டி எழுப்பிட்டு இருக்க“  என்றபடி அறைக்குள் வந்தாள் இலக்கியாவின் அம்மா.

“சாமி மரத்த வெட்ட ஆள் வந்திருக்குமா அதான் அப்பாவ எழுப்பிட்டு இருக்கேன்“.

“நீயும், உன் சாமி மரமும் தான், அது என்ன நம்ம நிலத்துலயா நிக்குது நாம விருப்பபடி வளக்குறதுக்கு“ என சலிப்புடன் சொல்லி விட்டு தண்ணீர் பிடிக்க குடங்களுடன் வெளியே சென்றாள் அவள்.

இலக்கியாவுக்கு மனது கேட்கவில்லை, அப்பாவிடமிருந்து நகர்ந்து காலையிலேயே மொட்டை மாடியிலிருந்து படுதீவிரமாக ஸ்மாôட்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த  அண்ணனிடம் ஓடினாள். “அண்ணா சாமி மரத்த வெட்ட ஆள் வந்திருக்கு பாத்தியா?“அவன் வேண்டா வெறுப்பாக மாடியிலிருந்து எட்டி பார்த்தான். அவர்கள் வீட்டிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் நின்றிருந்தது அந்த மரம். அதனருகே மரம் அறுக்கும் இயந்திரங்களோடும், கயிறுகளோடும் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். “ஆமா அவங்க மரம் அவங்க வெட்றாங்க உனக்கென்ன வந்திச்சு?“ என்றபடி மறுபடியும் விளையாட்டில் ஆழ்ந்தான்.
படம்: சித்தரிப்புக்காக மட்டும் (from my archives)
இலக்கியாவுக்கு பத்து வயதாகிறது, அவளது சாமி மரத்தை வெட்ட போகிறார்கள் என்பதை தாங்கி கொள்ளவே முடியவில்லை. அந்த மரத்தடியில் எந்த சாமியுமில்லை, யாரும் அதை வழிபடவுமில்லை. இவளுக்கு மட்டும் அது எப்படி சாமி மரமானது?

மூன்று வருடங்களுக்கு முன்னால் அவர்களது சொந்த கிராமத்துக்கு கூட்டி சென்றிருந்தார் அவள் அப்பா. அங்கே  ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்றார்கள். அங்கே கோவிலுக்கு பதிலாக பசுமையான ஒரு சிறு சோலை மட்டும் தானிருந்தது. விதவிதமான மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், ஊர்வன என அந்த உயிர்சூழலுக்கேற்ற அனைத்து உயிரினங்களும் செழித்து வாழும் சோலை அது. அந்த சோலைக்கு நடுவேயிருந்த ஒரு பெருமரத்தை தான் குலசாமி என தலைமுறை, தலைமுறையாக வணங்கி கொண்டிருந்தார்கள். நீண்டுயர்ந்து வளர்ந்திருந்த அந்த மரத்தை அண்ணாந்து பார்த்து விட்டு மனதில் எழுந்த பல கேள்விகளுடன் தன் பாட்டி தாயம்மாவிடம் ஓடினாள்.

“பாட்டி இதுதான் நம்ம குலசாமியா?“

“ஆமா செல்லம்“

“மரம் எப்படி பாட்டி குலசாமியா இருக்க முடியும்?, நாங்க இருக்கிற டவுன்ல கோயில்கள் இருக்கு, அதுக்குள்ள சாமிங்க இருக்கு, இங்க மட்டும் ஏன் இப்பிடி?“

அவளை அள்ளி அணைத்து மடியில் இருத்தி அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினாள் தாயம்மா.

“இது கிராமம் கண்ணு, இங்க இருக்குறவங்க செய்யுற முக்கியமான தொழில் விவசாயம், விவசாயம் நடக்கணும்னா என்ன எல்லாம் முக்கியம் சொல்லு?“

“நிலம், அப்புறம் தண்ணி“ என்றபடி உரையாடலில் ஒன்றிவிட்டிருந்தாள் இலக்கியா.

“ரெம்ப சரி, அதானல தான் இங்க இருக்குற இந்த சோலையும், உயிர் சூழலும், தாய் மரமும் நம்ம குலசாமி“.

தாயம்மா மேலும் பேசிக் கொண்டிருந்தாள், “இந்த தாய் மரத்துகிட்ட நாம மழை பெய்யணும்ன்னு வேண்டிகிட்டா இந்த மரம் வானத்துல மிதந்து வர்ற மேகங்கள் கிட்ட நம்ம வேண்டுதல சொல்லிடும், அதனாலயே இங்க வருசம் தவறாம நம்ம கிராமத்துல மழை பெய்யுது இது காலாகாலமா நம்மகிட்ட இருக்குற நம்பிக்கை.“

இலக்கியாவுக்கு ஆச்சரியம் விலகவே இல்லை. “மழை பெய்யும் சரி நிலத்தை எப்பிடி இந்த சாமி மரம் பாதுகாக்கும்?“

“தான் ஆழமா வேர்விட்டு நிக்குற இந்த நிலத்தோட தொப்புள் கொடி உறவு இருக்கு தாயி, இந்த உயிர்சூழல் இங்க  இருக்குற வரைக்கும் நம்ம நிலம் செழிப்பா இருக்கும், மகசூலும் குறைவில்லாம கிடைக்கும்“ என்றபடி தாய் மரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள் பாட்டி.

இலக்கியாவுக்கு இன்னும் கேள்விகள் தீரவில்லை, “அப்போ நாங்க எங்க இருந்தாலும் எங்களோட வேண்டுதல சொல்ல இங்க வந்து தான் சாமி கும்பிடணுமா?“

“நீ இருக்குற இடத்தில நிக்குற எந்த மரத்துகிட்ட உன் வேண்டுதல சொன்னா போதும் அது நம்ம தாய் மரத்துகிட்ட வந்து சேந்துடும்“


“அது எப்பிடி பாட்டி?“ 

“காத்து அடிக்குதில்ல கண்ணு அந்த காத்து வழியா மரங்கள் ஒண்ணோட ஒண்ணு பேசிக்குது“ 

“மரங்கள் பேசுமா பாட்டி?“  விழிகள் விரிய கேட்டாள் இலக்கியா

“பேசும் கண்ணு“ என்றபடி அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் பாட்டி.

தனக்கு ஏழு வயதாயிருந்த போது நிகழ்ந்த இந்த நிகழ்வு தான் அவளது வீட்டிற்கு அருகில் நின்றிருந்த அந்த மரத்தை சாமி மரமாக்கி இருந்தது. கூடவே பள்ளியில் கற்ற பாடங்களும் மரங்களின் சிறப்பை அவளுக்கு உணர்த்தியிருந்தன.

அன்று முழுவதும் மரமறுக்கும் இயந்திரத்தின் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. மாலையில் அவள் அண்ணன் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தான் “அந்த மரம் நின்ன இடத்துல நாலு மாடி மால் வருதாம்பா, இரண்டு, மூணு தியேட்டர், கேம் சென்டர் எல்லாம் திறக்க போறாங்களாம்.“

அவன் சொன்னது இலக்கியாவிற்கும் கேட்டது. 
மரங்கள் பேசும், மால்கள் பேசுமா? என்று யோசித்தபடி அப்பா வாங்கி வந்திருந்த வேப்பமரக்கன்றை நடுவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தாள் இலக்கியா.