உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Wednesday, March 25, 2020

ஹிப்பியாய் வாழ்தல்

ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத்


தமிழ் புனைவுலகில் நமக்கு அந்நியமான கலாச்சாரத்தை, வாழ்வியலை, நிலப்பரப்பை பதிவு செய்யும் போக்கு என்பது கடந்த சில ஆண்டுகளில் வளர்ந்திருக்கிறது. மாற்று கலாச்சாரத்தை மொழிபெயர்ப்புகளினூடே மட்டுமல்லாது நேரடி படைப்புகளின் வழியே தமிழுக்கு அறிமுகப்படுத்துவது மிகச் சவாலான ஒரு பண்பாட்டு பணி.

அய்யனார் விஸ்வநாத் எழுதியிருக்கும் ஹிப்பி நாவல் புதுமையான, உயிரோட்டமுள்ள கதைக்களத்தைக் கொண்டிருக்கிறது. வாசகனை கதையோடு பிணைத்து விடும் சுவாரஸ்யமான கதைச் சொல்லல் முறையும் எனக்கு சிறப்பானதாக தோன்றியது.

திருவண்ணாமலையின் ஜவ்வாது மலையை ஒட்டிய நிலப்பரப்பை ஹிப்பிக்களின் கொண்டாட்ட வெளியாக்கியிருக்கிறது இப்புனைவு. இயற்கையோடு இயைந்து வாழும் அவர்களின் வாழ்வியலோடு நிலம், நீர், தாவரங்கள் என இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசிக்க கற்றுத் தருகிறது.

இரவுகளின் நிசப்தத்தைக் கிழிக்கும் புல்லாங்குழலிசையும், வயலின் கம்பிகளின் அதிர்வுகளினூடே மேலேழும் துயர இசையும் வாசிப்பு முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கின்றன. புல்வெளிக்கும், அடர்மரக்காட்டுக்கும் இடையே சலசலத்து ஓடும் ஓடைக்கு அருகே கஞ்சாவும், மதுவும் தரும் போதையையும், மனித உணர்வுகளின் வேட்கையையும் வார்த்தைகளின் வழியே வாசகன் உணர்ந்து விடுகிறான்.

தமிழ்நாட்டில் விளிம்புநிலையில் வாழும் ஒரு மனிதன் ஹிப்பிக்களின் உலகுக்கு அறிமுகமாவதும், அங்கே பொருந்திக் கொள்ள அவன்படும் மன நெருக்கடிகளும் இயல்பாக சொல்லப்பட்டிருக்கின்றன.  மையக்கதைகளிரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கும் இடத்தை வாசகனின் யூகத்திற்கு பரிசாக தந்திருப்பதும் சிறப்பானதாக இருக்கிறது.

வாசித்து முடிக்கும் போது ஹிப்பியாய் வாழ்ந்துவிட்ட ஒரு துண்டு நினைவும், வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒரு மெல்லிய துயரும் எஞ்சி நிற்கின்றன.

#வாசிப்போம்..

4 comments:

  1. அருமையான அறிமுகம்... வாசிக்க தூண்டும் விமர்சனம். நானும் விரைந்து வாசித்து விட்டேன்... அழகான ஆழமான தமிழுக்கு புதிய கதைச் சொல்லல்.... சுதந்திர இயல்பான வாழ்க்கைக்கு ஏங்கும் மனித மனம்... தேசங்களை கடந்த மனித இணைவுகள்... இயற்கையின் இனிய இதமான இலயிப்புகள்.... அடித்தட்டு மக்கள் வாழ்வின் அவலங்கள்... என அழகாக பயணிக்கிறது இந்நாவல்... அழகான புனைவு.... சுவைபட உணர்வுகளோடு கதை சொல்லல் வாசகனை கட்டிப்போடும்... ரயில் தண்டவாளம் போல பயணிக்கும் இரு கதைகள் அழகாக இணைகின்றன... மாற்று திறனாளி பெண்ணோடு இணையாக வாழ்க்கையை தொடங்கப் போகும் கதாநாயகனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete