உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Tuesday, March 31, 2020

ஒரு கத சொல்லட்டா சார்? #4

வாழ்ந்திருத்தல்
*****************

எங்கே அடைக்கப்பட்டிருக்கிறேன்? ஒரு வேளை உயிரோடு புதைத்து விட்டார்களா? இல்லை, அப்படி தெரியவில்லை உடல் மெல்ல அதிர்ந்து கொண்டிருக்கிறது. ஏதோ வாகனத்தில் ஏற்றப்பட்டிருக்கிறேன். கைகளும், கால்களும் சங்கிலிகளால் பிணைக்கப்படவில்லை. ஆனாலும் சிறகுகள் தறிக்கப்பட்டு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பறவையை போல உணர்கிறேன்.

மெல்ல கண்களை திறந்து பார்க்கிறேன் இருட்டின் கனத்தைக் கிழித்துக் கொண்டு தெருவிளக்குகளின் வெளிச்சம் மட்டுமே துணையிருக்கிறது.
என்ன செய்யப் போகிறார்கள்?

நிச்சயமற்ற நிலை நெஞ்சை அழுத்த, மூச்சு முட்டுகிறது. ராணுவத்தின் கவச வாகனத்தில் அடைத்து கொண்டு செல்லுமளவுக்கா தவறு செய்து விட்டேன். நினைக்க, நினைக்க குழப்பமே மிஞ்சுகிறது.

எனக்களிக்கப்பட்டிருக்கும் ஒரே வசதியான, வாகனத்தின் சிறு ஜன்னலின் வழி வெளியே பார்க்கிறேன். காட்சிகள் மாறிவிட்டிருக்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்து விடும். நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் ராணுவ தளத்திற்க்கான எனது பயணமும் முடிந்து விடும்.

வாகனத்திலிருந்து கீழே இறக்கப்பட்டிருக்கிறேன். காலூன்றி நிற்க முடியவில்லை. உடல் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது போன்ற ஒரு உணர்வு மேலிடுகிறது. எங்கள் நாட்டில் ராணுவ தளங்கள்  மட்டுந்தான் இவ்வளவு வசதியானதாக அமைக்கப்பட்டிருக்கும் போலிருக்கிறது.

துப்பாக்கி ஏந்திய இரண்டு வீரர்கள் என்னை அழைத்துக் கொண்டு ஒரு கட்டிடத்திற்குள் நுழைகிறார்கள். முழு உடலையும் சோதனை செய்யும் கருவி வழியே முதலில் நுழையச் சொல்கிறார்கள். ஒரு ஓவியனிடம் என்ன பெரிய ஆயுதம் இருந்துவிட முடியும்? அவனது தூரிகையைத் தவிர. இவர்களை நினைத்தால் வருகிற சிரிப்பும் உடல் நடுங்குகிற நடுக்கத்தில் தொண்டைக் குழிக்குள் ஆழப் புதைந்து விடுகிறது.

முதல்கட்ட சோதனைக்குப் பின் அதிகாரி ஒருவரின் அறைக்கு அழைத்து செல்கிறார்கள். அறையைச் சுற்றிலும் கணிணித் திரைகள் கண்களை கூச செய்கின்றன. அதிகாரியின் கண்கள் சிவந்து போயிருக்கின்றன, மதுப்போதையா? அதிகார போதையா? இல்லை என் மேலிருக்கும் கோபமா? கண்டறிய இயலவில்லை. தன் முன்னால் விரிந்திருக்கும் மின்ணணுத் திரையில் எதையோ கூர்ந்து பார்த்து விட்டு என் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்.

சற்று நேரத்தில் அதிகாரியின் ஆணைப்படி அந்த கட்டிடத்தின் தரைதளத்திலுள்ள அறைத்தொகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறேன். பாதி இருட்டும், பாதி வெளிச்சமுமாக ஒருவித பயஉணர்வை ஏற்படுத்துகிறது அவ்வறைகள்.

“Get in, you are under detention for a month” 


என் பதிலுக்கு காத்திராமல் அறையை பூட்டி விட்டு நகர்கிறான் அழைத்து வந்த ராணுவ வீரன்.

அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு நபர் ஏற்கனவே அடைக்கப்பட்டிருக்கிறார். என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி. ஒரு வேளை என்னை எதற்கு பிடித்து வந்து அடைத்திருக்கிறார்கள் என்பது இவருக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது.

அவரிடம் பேசிய பிறகு நான் கண்டறிந்த சில உண்மைகள் இவை:
எங்களைப் போன்றவர்களை எல்லாம் தீவிரமாக கண்காணிக்க தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் 24 மணிநேரமும் எங்கள் உடலையும், மனதையும் பற்றிய தகவல்களை இவர்களுக்கு அனுப்பும் நானோ ரோபாக்களைக் கொண்டு. அதாவது எங்கள் சிந்தனைகளை ஊடுருவி பார்க்கக் கூடிய திறன் அவர்களுக்கிருக்கிறது.

இந்த ஒரு மாதத்தில் என்ன செய்து விடுவார்கள். சிந்தனைகளை கண்காணிக்க தெரிந்தவர்களுக்கு அதனை அழிக்க தெரியாதா என்ன? அழித்து விட முடியுமா என்ன? சந்தேகம் வலுக்கிறது, உடனிருப்பவரிடம் கேட்டு விடலாமா எனத் தோன்றுகிறது. ஆனால் கேட்க மனமில்லை.  .

சிந்தனைகளின் சுழலில் சிக்குண்டு கிடக்கிறேன். கண்களைத் திறக்கிறேன், ஜன்னலின் வழியே கதிரொளி முகத்தில் விழுகிறது. 

1 comment:

  1. அழகிய ஓவியம் போன்ற கதை.... ஆழமான கருத்தை எளிமையாக முன் வைக்கிற கதை.... கதை சொல்லும் விதம் அருமை... மக்கள் சிந்தனையாளர், படைப்பாளி களை கண்டு அதிகார வர்க்கத்தினர் அச்சப்படுகின்றனர்...ஆனால் சிந்தனையாளர்களின் சிந்தனைகளை சிறை வைக்க முடியாது... நம்பிக்கையோடு சிந்தியுங்கள்.. எழுதுங்கள்... வாழ்த்துகள். பாராட்டுகள்.

    ReplyDelete