உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Thursday, June 28, 2018

மனித குலத்தின் தொடக்கம்

கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக நமது ஹோமோ சாப்பியன்ஸ் பிரிவைச் சேர்ந்த மனித இனம் மட்டும் தான் இந்த பூமியில் வாழ்ந்து, ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. ஹோமோ என்பது பேரினத்தைக் (Genus) குறிக்கும் சொல், சாப்பியன்ஸ் என்பது இனத்தைக் (Species) குறிக்கும் சொல். ஹோமோ பேரினத்தைச் சார்ந்த பல்வேறு உயிரினங்கள் பரிணமித்து இவ்வுலகில் வாழ்ந்து, புதைப்படிமங்களாகி போனதன் வரலாறு இது. அத்தகைய உயிரினங்களைக் குறிக்க மனிதர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். நவீன மனிதர்களான நம்மைக் குறிப்பிட சாப்பியன்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்.

மனிதர்கள் எங்கே, எப்படி தோன்றினார்கள்? 

இரண்டரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் Australopithecus பேரினத்தைச் சார்ந்த குரங்குகளிலிருந்து பரிணமித்து முதன்முதலில் மனிதர்கள் தோன்றினார்கள். அங்கிருந்து வடக்கு ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள்.

மாறுபட்ட குணநலங்களுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்கள் இப்புவியில் வாழ்ந்தனவா?

ஐரோப்பா மற்றும் மேற்காசிய பகுதிகளில் வாழ்ந்த மனித இனத்தை நியன்டர்தல்கள் (Neanderthals) என்கிறோம். இந்த நியன்டர்தல்கள் சாப்பியன்சை விட உருவில் பெரியவர்களாகவும், மேற்கு யூரேசிய பகுதியின் கடுங்குளிருக்கு தகவமைத்துக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஆசியாவின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்களை ஹோமோ எரக்டஸ் (Homo erectus) என்கிறோம். இந்த இனத்தைச் சார்ந்த உயிரினங்கள் ஏறக்குறைய இரண்டு மில்லியன் ஆண்டுகள் இவ்வுலகில் நிலைபெற்று வாழ்ந்திருக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜாவா தீவுப் பகுதியில் வாழ்ந்த உயிரினங்கள் Homo soloensis எனப்பட்டன, இவை வெப்பமண்டல பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு வாழ்ந்தன. மற்றுமொரு இந்தோனேசிய தீவான புளோரெஸில் வாழ்ந்த மனிதர்கள் குள்ளத்தன்மை உடையவர்களாக இருந்தனர். கடலில் நீர்மட்டம் குறைவாக இருந்த போது இத்தீவிற்கு இடம் பெயர்ந்த இவர்கள் கடல் மட்டம் உயர்ந்தவுடன் வளங்கள் குறைந்த தீவிற்குள் மாட்டிக் கொண்டனர். காலப்போக்கில் அதிக உணவு தேவைப்படும் உருவில் பெரிய உயிரிகள் அழியவே உருவத்தில் சிறியவர்கள் பிழைத்து வாழத் தொடங்கினர். உயரம், ஒரு மீட்டருக்கு மிகாமலும், எடை, இருபத்தி ஐந்து கிலோவிற்கு மிகாமலும் இருந்த இந்த மனிதர்களை Homo floresiensis  என்று வகைப்படுத்துகிறார்கள் அறிவியலாளர்கள்.
2010ம் ஆண்டு செர்பியாவின் டெனிசோவா குகையில் கண்டெடுக்கப்பட்ட விரல் எலும்பின் புதைப்படிமமானது இன்னொரு மனித இனமான Homo denisova  வினுடையது என்று கண்டறியப்பட்டது. இன்னும் ஏதேனும் குகைகளில், தீவுகளில் அல்லது பெருங்கடல்களின் ஆழங்களில் இது போன்ற புதைபடிமங்கள் கண்டறியப்படுவதற்கு காத்திருக்கலாம்.

ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மனித இனங்கள் பரிணமித்துக் கொண்டிருந்த நேரம், மனித இனத்தின் பிறப்பிடமாக கருதப்படும் கிழக்கு ஆப்ரிக்காவிலும் பரிணாம வளர்ச்சி Homo rudolfensis, Homo ergaster, Homo sapiens போன்ற புதிய இனங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தது.
மேற்குறிப்பிட்ட அனைத்து இனங்களிலும் மனிதர்கள் ஒரே குணாதிசயம் கொண்டவர்களாக இல்லை. சில இனங்களில் அவர்கள் உருவத்தில் பெரியவர்களாகவும், பலசாலிகளாகவும், பயமறியா வேட்டையாடிகளாகவும் இருந்தார்கள், சில இனத்தை சார்ந்தவர்கள் உருவத்தில் சிறியவர்களாகவும், தாவரங்களிலிருந்து உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்தார்கள். சிலர் தனித்தீவுகளில் வாழ்ந்தார்கள், சிலரோ கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்ந்தார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் ஹோமா என்னும் பேரினத்தைச் சார்ந்தவர்கள், மனிதர்கள்.

பொதுவாக பரிணாம வளர்ச்சியை காலக்கிரமமாக வரிசைப்படுத்தும் போது நேர்க்கோட்டில் வரிசைப்படுத்துகிறோம். அதாவது ஒரு இனம் வாழ்ந்து மறைந்த பிறகே அடுத்த இனம் பரிணமித்திருக்கும் என்ற எண்ணம் அடிப்படையில் தவறானது. உண்மை என்னவெனில் இரண்டு மில்லியன் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த உலகம் ஒன்றுக்கு மேற்பட்ட மனித இனங்களுக்கு தாயகமாக இருந்திருக்கிறது. பொய் என்கிறீர்களா? தற்போது இந்த உலகில் நமது சக உயிரிகளாக வாழும் சிங்கம், புலி, பனிச்சிறுத்தை போன்ற விலங்குகள் Panthera  எனும் ஒரே பேரினத்தைச் சார்ந்தவை, இந்த தர்க்கத்தின்படி பார்த்தால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பூமியில் பல்வேறு இனங்களைச் சார்ந்த மனிதர்கள் வாழ்ந்திருப்பார்கள் தானே.

ஹோமா பேரினத்தைச் சார்ந்த மற்ற உயிரினங்கள் யாவும் காலப்போக்கில் முற்றிலுமாக அழிந்து விட சாப்பியன்ஸ் மட்டும் நிலைத்திருக்க காரணமென்ன? அடுத்த பதிவில்..


Credits: Sapiens - A brief history of humankind by Yuval Noah Harari  Buy at Amazon


No comments:

Post a Comment