உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..

"விதைகள் விழுவதெல்லாம் பெருமரமாய் எழுவதற்கே"

Sunday, December 29, 2019

புத்தகங்கள் 2019

2019 முடியப் போகிறது. இது ஒரு ஆண்டின் இறுதி மட்டுமல்ல, ஒரு தசாப்தத்தின் நிறைவு. மற்றொரு தசாப்தத்தின் தொடக்கம். இந்த ஆண்டும் புத்தகங்கள், பயணங்கள், கற்றல், கற்பித்தல் என வாழ்க்கை தனது புதிய பரிமாணங்களை  காண்பித்துக் கொண்டே இருந்திருக்கிறது.
குழந்தைகள் களிமண் கொண்டு விதவிதமான பொம்மைகள் செய்து மகிழ்வது போலவே ஒரு வாசகனாக சிறுகதைகள் எழுதுவதன் வழியே சொற்களைக் கொண்டு சில பரிசோதனைகளை செய்து பார்த்த வருடமிது.
இரண்டு சிறுகதைகளை மட்டுமே எழுத முடிந்தது. இரண்டும் வெவ்வேறு சிறு பத்திரிகைகளில் அச்சேறி இருக்கின்றன. சாமி மரம் சிறுகதையை என் வலைப்பூவிலும் வாசிக்கலாம்.
இந்த ஆண்டின் சிறப்பான  நிகழ்வாக நான் கருதுவது சிகரம் இலக்கிய வட்டம் எனும் தன்னார்வ அமைப்பை நண்பர்களோடு இணைந்து தொடங்கியதையும், அதன் மூன்று கூட்டங்கள் ஆரோக்கியமான விவாதங்களோடு நடைபெற்றதையும் தான்.



2019ல் வாசித்த புத்தகங்களின் பட்டியல் இது. தமிழ், ஆங்கிலம் என வகைப்படுத்தி பட்டியலிட்டிருக்கிறேன்.

தமிழ் புத்தகங்கள்
*******************

கட்டுரை தொகுப்புகள்

1. கனவு ஆசிரியர் - தொகுப்பாசிரியர் க. துளசிதாசன்
2. காற்றில் யாரோ நடக்கிறார்கள் - எஸ். ராமகிருஷ்ணன்
3. கதைகள் செல்லும் பாதை - எஸ். ராமகிருஷ்ணன்
4. பழவேற்காடு முதல் நீரோடி வரை, தமிழக கடற்கரை - சுனாமிக்கு பின் 10 ஆண்டுகள்
வறீதையா கான்ஸ்தந்தின்
5. உலக பெண் விஞ்ஞானிகள் - ஆயிஷா இரா. நடராசன்
6. அறிவியல் நிறம் சிவப்பு - ஆயிஷா இரா. நடராசன்
7. ஏழாவது அறிவு (முதல் பாகம்) - வெ. இறையன்பு

சிறுகதைகள்

8. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - ச. தமிழ்ச்செல்வன்
9. அந்தோன் செகாவ் - சிறுகதைகளும், குறுநாவல்களும் (தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு )

புதினங்கள்

10. வேள்பாரி - சு. வெங்கடேசன்
11. யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
12. காடோடி - நக்கீரன் (மறுவாசிப்பு)
13. சாய்வு நாற்காலி - தோப்பில் முஹ்ம்மது மீரான்

வாழ்க்கை வரலாறு

14. சே குவேரா, கனல் மணக்கும் வாழ்க்கை - சு.பொ. அகத்தியலிங்கம்
15. சே உருவான கதை - கார்லோஸ் கலிகர் பெர்ரேர்
      தமிழில் - ச. சுப்பாராவ் 

மொழிபெயர்ப்பு

16. வெண்ணிற இரவுகள் - பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில் - பத்மஜா நாராயணன்
17. புத்தக தேவதையின் கதை - எஸ். சிவதாஸ், தமிழில் - யூமா வாசுகி

ஆங்கில புத்தகங்கள்
**********************

18. A Thousand Splendid Suns - Khaled Hosseini

19. What I Talk When I Talk About Running - Haruki Murakami


20. The White Tiger - Arvind Adiga


21. A Study in Scarlet, The Sign of the Four, The Hound of the Baskervilles & The Valley of Fear from  Sherlock Holmes series by Sir Arthur Conan Doyle

22. I am Malala - Malala Yousafzai with Christina Lamb


23. One life to Ride: A Motorcycle Journey to the Himalayas - Ajit Harisinghani


24. Environmentalism: A Global History - Ramachandra Guha


25. The Boy in the Striped Pyjamas - John Boyne


26. The Idea of India - Sunil Khilnani


27. tuesdays with Morrie - Mitch Albom


28. The God Delusion - Richard Dawkins


29. The Kite Runner - Khaled Hosseini


30. Everyone has a Story 2 - Savi Sharma

இதுவரை புத்தகங்களைப் பற்றி எழுதிக் கொண்டு மட்டும் தானிருந்தேன். முதல்முறையாக இவ்வருடம் சிகரம் இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டத்தில் காடோடி நாவல் பற்றி பேசவும் செய்திருந்தேன். அவ்வுரை Youtube பில் காணக் கிடைக்கிறது. 
அதன் link https://youtu.be/ugY9_CTpUqo
Please do click the SUBSCRIBE button of our Sigaram Channel. 

அடுத்த தசாப்தத்திலும் 
கலைகளை கொண்டாடுவோம், 
வாசிப்பை நேசிப்போம், 
புத்தகங்களை காதலிப்போம்,
தென்றலின் கரம் பற்றி நடை பயிலுவோம்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !



Wednesday, October 23, 2019

காடோடி நாவல் - ஒரு பார்வை


எழுத்தாளர் நக்கீரனின் காடோடி நாவல் 2014 ம் ஆண்டு அடையாளம் பதிப்பக வெளியீடாக வந்தது. வெளியானதில் இருந்து இதுவரைக்கும் பரவலான வாசிப்பிற்கும், விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட்ட ஒரு புதினமாக இருக்கிறது. இந்த கதை நிகழும் நிலப்பரப்பு ஆசியாவின் மிகப்பெரிய தீவான போர்னியோ. பழமையான மழைக்காடுகளுக்கு புகழ்பெற்றது. பல்லுயிர் செறிவும், செழுமையும் நிறைந்த இத்தகைய நிலபரப்பிற்குள் ஒரு உல்லாசப் பயணி போல , ஒரு வெட்டுமர நிறுவனத்தின் அலுவலக பணியாளனாக உள்செல்கிறான் கதைசொல்லி. மரங்களின் மரணங்களினூடே மனித உறவுகளை, காடழிப்பின் பின்னுள்ள வணிக தந்திரங்களை, உழைப்புச் சுரண்டலை, இந்நிலப்பரப்பின் சிறப்புகளை கதைசொல்லியின் குரலாகவே பதிவு செய்கிறது இப்புதினம்.

சிகரம் இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டம் 01.10.2019 அன்று சிகரம் மையத்தில் நடைபெற்றது. அன்றைய நிகழ்வில் இந்நாவல் பற்றி நான் ஆற்றிய உரையிது.



Saturday, August 17, 2019

கதைகள் எழுத விரும்புகிறீர்களா?

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் செல்லும் பாதை எனும் கட்டுரை தொகுப்பை வாசித்து முடித்தேன். தன்னுடைய கட்டுரைத் தொகுப்புகளின் வழியே உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளை, அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை, தனக்கே உரிய சுவாரஸ்மான நடையில் வாசகனின் முன்பு வைத்திருக்கிறார்.
உலக இலக்கியம், சினிமா, இசை, பயணங்கள் என அவரது கட்டுரைகள் ஒரு வாசகனுக்கு தரும் தகவல்கள் உண்மையிலேயே பிரமிப்பூட்டுபவை. குறிப்பாக இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஒரு இளம் படைப்பாளிக்கு நிறைய உள்ளீடுகளையும், சிறுகதைகள் குறித்த சில நுட்பங்களையும் கொண்டுள்ளது.


அந்த நுட்பங்களைக் குறித்த ஒரு சுருக்கமான கட்டுரையை தருவதே இப்பதிவின் நோக்கம். நீங்கள் ஒரு மொழியின் இலக்கியங்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் தேர்ந்த வாசகராக இருந்தால் உங்கள் வாசிப்பனுபவம் உங்களை சும்மா இருக்க விடாது என்பது என் கணிப்பு.
உங்கள் வாசிப்பனுபவம் என்ன செய்யும்?

நீங்கள் நாவலிலும், சிறுகதைகளிலும் சந்தித்த மனிதர்களின் உணர்வுகள் உங்களை படைப்புலகின் அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தி செல்லும் தானே. ஒவ்வொரு தேர்ந்த வாசகனும் தனக்குள்ளே ஒரு படைப்புலகை உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். சிறு பிள்ளைகள் களிமண் கொண்டு விதவிதமான பொம்மைகள் செய்து மகிழ்வது போலவே அவனும் தன்னளவில் சொற்களைக் கொண்டு கவிதைகளை, கட்டுரைகளை, சிறுகதைகளை எழுதிப் பார்த்துக் கொள்கிறான். அப்படிப்பட்ட ஒரு வாசகனுக்காக சிறு வெளிச்சம் என இப்புத்தகத்தைச் சொல்வேன்.

நீங்கள் ஒரு மொழியில் எழுத வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் சிறுகதையே அதற்கான உகந்த வடிவம் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எழுத்து கைவர வேண்டும் என்றால் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். இந்த புத்தகத்தில் அமெரிக்க எழுத்தாளர் ரே பிராட்பரி (Ray Bradbury) பற்றிய கட்டுரை ஒன்றிருக்கிறது, ஆம் பாரன்ஹீட் 451 எழுதிய அதே பிராட்பரி தான். அதில் ஒரு நேர்காணலில் பிராட்பரி சொல்லும் வார்த்தைகள் முக்கியமானவை, “எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். படிப்பு, இசை, எழுத்து என அயராமல் இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். அதுவே வாழ்வின் மீதான எனது பற்றுதல்“. உங்களுக்கு வாழ்வின் மீதான பற்றுதல் தரும் விஷயங்கள் எவை என யோசித்திருக்கிறீர்களா?

அடுத்ததாக ‘சிறுகதைகள் எழுத நினைப்பவர்கள் நிறைய சிறுகதைகளை படிக்க வேண்டும். எழுத்தின் நுட்பங்களை யாரும் கற்றுத் தந்து விட முடியாது. வாசிப்பே அவற்றை புரிய வைக்கும்’ என்பது எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்து. அது உண்மையும் கூட, ஒரு மொழியின் குறிப்பிட்ட இலக்கிய வடிவத்தை ஆழ்ந்து வாசிப்பது என்பது உங்கள் படைப்புலகிற்கான உறுதியான அடித்தளம் அமைக்கும் ஒரு செயல்.

‘கதையின் தலைப்பு என்பது கதையின் திறவுகோல் போன்றது’ என்று எழுதியிருக்கும் ஆசிரியர் அதற்கு உதராணமாக புகழ்பெற்ற ஆங்கில கவியான கமலாதாஸின் ‘கடலின் விளிம்பில் ஒரு வீடு’ என்ற கதையின் கவித்துவமான தலைப்பை முன்வைக்கிறார். என்னளவில் நீங்கள் வாசிக்க வேண்டிய முக்கியமான கதைகளில் ஒன்று இது என்பேன்.

‘சிறுகதை ஆசிரியனுக்கு நினைவுகளை கையாளத் தெரிந்திருக்க வேண்டும். கதை முழுவதும் வெறும் நினைவுகளாக வே இருந்து விட்டால் சலிப்பாகி விடும். புனைவும் நினைவும் கலந்து எழுதும் போது தான் கதை சிறப்பாக இருக்கும்.’ தமிழின் சிறந்த சிறுகதையாக ஆசிரியர் குறிப்பிடும் சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதையும், 2000ம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளரான Gao Xingjian எழுதிய Buying a Fishing Rod for my Grandfather என்ற சிறுகதையும் நினைவுகளையும், கால மாறுபாடுகளையும் சிறுகதை எழுதுபவர் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கற்று தரக் கூடும்.

‘சிறுகதை எழுத விரும்புகிறவர்களுக்கு ரஸ்கின் பாண்ட்டின் (Ruskin Bond) இல்லாத கண்கள் (The Eyes have it) ஒரு உத்தியை கற்றுத் கொடுக்கிறது’. அது என்ன உத்தி என்பதனை கதையை படிக்கும் போது நிச்சயம் கண்டறிந்து விடுவீர்கள். ரஸ்கின் பாண்ட் குழந்தைகளுக்காக எழுதிய கதைகளில் பெரும்பாலானவை அறம் சார்ந்த கருத்துகளை தன்னகத்தே கொண்டவை. பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பெரியவர்களும் கொண்டாட வேண்டிய ஒரு சிறந்த கதாசிரியர் ரஸ்கின் பாண்ட்.

‘சிறுகதை ஆசிரியன், கதையில் நிறைய சொல்ல தேவையில்லை. குறைவான கச்சிதமான உரையாடல்களின் வழியே கதையினை நேர்த்தியாக உருவாக்கி விட முடியும்’. இதற்கு உதாரணமாக Etgar Keret எழுதிய கனவுத்தன்மை கொண்ட The Crazy Glue என்ற கதையை குறிப்பிடுகிறார். யதார்த்தத்தை கனவுத்தன்மையோடு கை கோர்க்க வைத்து அதனை அழுத்தமாக வாசகர்களது மனதில் பதிய வைக்கும் உத்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

சிறுகதை வடிவத்தை தேர்ந்தெடுக்க விரும்புவர்களுக்கு இன்னொரு முக்கியமான தகவல் இந்த நூலில் தரப்பட்டிருக்கிறது. தன் வாழ்நாளில் 600க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய ரஷ்யாவின் சிறுகதை சிற்பியான ஆன்டன் செகாவ்  தான் எழுத விரும்பிய கதைக்கருக்களைத் தனது நோட்புக்கில் குறித்து வைத்திருந்தார் என்பதும், அது செகாவின் நோட்புக் என தனியான வெளியாகியுள்ளது என்பதுமான தகவல் தான் அது.

‘சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடவும் சவாலானது. மொழியை கையாளுவதிலும், கதைகளை விவரிப்பதிலும் மிகுந்த கட்டுப்பாடும், லயமும், ஒருமையும் தேவை’ என்ற முக்கியமான அறிவுரையையும் முன்வைக்கிறார்.

‘சிறுகதை ஆசிரியர்கள் பேராசை கொண்டவர்கள். எதையும் கதையாக்கிவிட முயற்சி செய்வார்கள்’ என்பதும் எவ்வளவு பெரிய உண்மை என்பது கதைகளின் உலகில் சஞ்சரிப்பவர்களுக்குப் புரியும்.

சிறுகதைகள் மட்டுமன்றி சில கவிஞர்களைப் பற்றிய தகவல்களும், அவர்களது கவிதைகளும், அந்த கவிதைகளுக்கு எஸ்.ரா. வின் சிறுவிளக்கங்களும் என நீள்கிறது இந்த புத்தகம். இந்த நூலில் கவிஞர் வைத்தீஸ்வரன் எழுதிய 'மன்னிப்பு' என்ற தலைப்பிட்ட  கவிதை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

மன்னிப்பு

மரங்கள் ஓயாமல்
அழிந்து கொண்டிருந்த போதிலும்
குயில்களுக்கு இன்னும்
கோபமில்லை யாரிடமும்
அதன் குரல் இன்னும்
காதலையே பாடுகின்றன
இனி வரப் போகும்
“ஒரு மனிதனுக்காக”

எழுத்தாளன் கூட ஒரு வகையில் இந்த குயில் போலத் தான் இல்லையா? நூலகங்கள் தரைமட்டமாக்கப்பட்ட போதும், புத்தகங்கள் தடை செய்யப்பட்ட போதும், அவன் இயற்கையின் பேருண்மைகளை, பேரன்பின் உடனிருப்பை, அடக்குமுறைக்கு எதிரான போர்குரலை, மனித மனதின் எண்ணற்ற உணர்வுகளை, தீராத பக்கங்களில் எழுதிக் கொண்டே தானே இருக்கிறான், இனி வரப்போகும் ஒரு வாசகனுக்காக.


Friday, June 28, 2019

மரணத்திலிருந்து மீண்ட மலாலாவின் கதை

I am Malala: The Girl Who Stood Up for Education and Was Shot by the Taliban
by Malala Yousafzai with Christina Lamb

யார் இந்த மலாலா?

2012ம் ஆண்டுக்கு பிறகு உங்களில் சிலர் இந்த பெயரை செய்திகளில் படித்திருக்கக்கூடும். விரைவில் அவர் நலம் பெற்று விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்திருக்கக் கூடும். 2014ம் ஆண்டு இந்தியாவின் கைலாஷ் சத்தியார்த்தியோடு இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற போது வியப்படைந்திருக்கக் கூடும்.
சிறு வயதிலிருந்தே பெண்களின் கல்விக்காக, உரிமைகளுக்காக போராடிய ஒரு வலிமையான போராளி தான் இந்த மலாலா, அவருடைய சுயசரிதையே மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இப்புத்தகம்.தன்னுடைய இந்த சுயசரிதையை பதினாறாவது வயதில் இங்கிலாந்தின் பத்திரிகையாளரான கிறிஸ்டினா லாம்ப்புடன் இணைந்து எழுதியிருக்கிறார் மலாலா.



நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பஷ்தூன் இன மக்கள் அதிகமாக வாழும் ஸ்வாட் பள்ளதாக்கின் மின்கோரா எனும் சிறுநகரில் தனது பெற்றோருக்கு மூத்த மகளாக பிறந்தவர். ஆண் குழந்தைகளின் பிறப்பை மட்டுமே மகிழ்ச்சியாக கொண்டாடுகிற ஒரு சமூகத்தில் இவரது தந்தை ஜியாதுதீன் சற்றே வித்தியாசமானவர், முற்போக்கு சிந்தனை கொண்டவர். அத்தகைய தந்தையின் அரவணைப்பிலும், வழிகாட்டுதலிலும் சிறு வயதிலேயே பெண்களின் உரிமைக்காக பல தளங்களில் தைரியமாக பேசியவர், எழுதியவர். துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவிலும் கல்வியின் மீதும், புத்தகங்களின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தவர்.

இந்த புத்தகம் மலாலாவின் சுயத்தை மட்டும் பற்றி பேசவில்லை என்பதில் தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது. தான் பிறந்து வளர்ந்த சூழலை, அந்த நாட்டின் வரலாற்று பின்புலத்தோடும், கலாச்சார கூறுகளோடும் விளக்கியிருக்கிறார் மலாலா. மத அடிப்படைவாதிகளின் கைகளில் ஆட்சியும், அதிகாரங்களுமிருந்தால் என்னவெல்லாம் எதிர்மறையான விளைவுகளை சாமானிய மக்கள் சந்திக்க நேரும் என்பதற்கு இந்த புத்தகத்தில் நாம் வாசிக்கும் நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம்.

பனி போர்த்திய மலைகள், நீர் வீழ்ச்சிகள், தூய நீர் கொண்ட ஏரிகள் என செழுமையாக இருந்த ஒரு நிலப்பரப்பு தாலிபன்களின் பிடியில் சிக்குண்டு, ராணுவத்தின் தலையீட்டால் நடந்த தொடர் சண்டைகளால் சிதைவுற்று மெல்ல, மெல்ல போர்களின் நிலமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் மலாலாவின் குடும்பம் உட்பட பல குடும்பங்கள் ஸ்வாட் பகுதியை விட்டு விலகி  உள்ளூர் அகதிகளாக அலைத்து திரிவதையும் பதிவு செய்கிறது. இத்தகைய சூழலிலும் பெண்களுக்கு கல்வி அளிக்கும் மலாலாவின் தந்தை ஜியாதுதீன் நடத்தும் பள்ளிக்கூடம், அடர்ந்த காரிருளில் பெருவெளிச்சமாகத் தெரிகிறது. இத்தகைய வன்முறைகளுக்கு நடுவிலும் மலாலா கல்வி கற்பதையோ, பெண்களின் கல்விக்காக குரல் கொடுப்பதையோ நிறுத்தவே இல்லை.

மதங்களின் பெயரால் தாங்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டங்களை, பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தாலிபன்களால் கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும்  பெண்களுக்கு சம உரிமை, பெண்கள் கல்வி கற்பது போன்ற செயல்களை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இறுதியாக மலாலாவை நோக்கியும் அவர்களது கொடுங்கரம் நீள்கிறது. 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பள்ளியில் தேர்வு முடித்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வழியில் தாலிபன்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிறார் மலாலா. போராளிகளை துப்பாக்கி குண்டுகளால் கொன்று விட முடியுமா என்ன? மலாலாவின் இடது கண்ணின் ஓரம் குண்டு பாய்ந்து மூளைக்கு வெகு அருகாமையில் துளைத்து செல்கிறது. அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே வாசகர்களிடையே கண்ணீரை வரவழைக்கக் கூடியது.

படுகாயங்களுடன் ராவல்பிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் கூட அவருடைய உயிருக்கு பாதுகாப்பற்ற சூழலில், உலக அளவில் கவனம் பெற்று விட்ட மலாலாவுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்கின்றன. மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்தின் பிரிம்மிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. மருத்துவ குழுவின் உதவியோடு மலாலா மீண்டு வரும் பகுதி, நல்ல மனிதர்களும், நம்பிக்கையும் துணையிருந்தால் வாழ்வின் மிக மோசமான நிகழ்வுகளையும் கடந்து விடலாம் என்ற உணர்வை வாசகர்களுக்குள் விதைத்து விட்டு போகிறது.

நள்ளிரவில் உருவாக்கப்பட்ட தேசத்திலிருந்து வந்த ஒரு சாமானிய பெண்ணின் குரல் இன்றும் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களின் குரலாக உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது.  மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்த மலாலா ஐநா சபையில் தான் ஆற்றிய முதல் உரையின் போது இவ்வாறு குறிப்பிட்டார், ‘ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம் மற்றும் ஒரு பேனா உலகை மாற்றி விட முடியும்’. முடியும் தானே.

பி.கு. 'நான் மலாலா' என்ற பெயரில் தமிழிலும் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது. 

Sunday, June 9, 2019

ஒரு கத சொல்லட்டா சார் ? #2

சாமி மரம்
***********
“அப்பா, அப்பா எந்திரிங்க, சாமி மரத்தை வெட்ட ஆள் வந்திருக்கு“ என்றபடி தனது அப்பாவை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள் இலக்கியா.

“அவரே நேத்து ஓவர்டைம் பாத்துட்டு லேட்டா வந்து படுத்துருக்காரு அவர ஏன்டி எழுப்பிட்டு இருக்க“  என்றபடி அறைக்குள் வந்தாள் இலக்கியாவின் அம்மா.

“சாமி மரத்த வெட்ட ஆள் வந்திருக்குமா அதான் அப்பாவ எழுப்பிட்டு இருக்கேன்“.

“நீயும், உன் சாமி மரமும் தான், அது என்ன நம்ம நிலத்துலயா நிக்குது நாம விருப்பபடி வளக்குறதுக்கு“ என சலிப்புடன் சொல்லி விட்டு தண்ணீர் பிடிக்க குடங்களுடன் வெளியே சென்றாள் அவள்.

இலக்கியாவுக்கு மனது கேட்கவில்லை, அப்பாவிடமிருந்து நகர்ந்து காலையிலேயே மொட்டை மாடியிலிருந்து படுதீவிரமாக ஸ்மாôட்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த  அண்ணனிடம் ஓடினாள். “அண்ணா சாமி மரத்த வெட்ட ஆள் வந்திருக்கு பாத்தியா?“அவன் வேண்டா வெறுப்பாக மாடியிலிருந்து எட்டி பார்த்தான். அவர்கள் வீட்டிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் நின்றிருந்தது அந்த மரம். அதனருகே மரம் அறுக்கும் இயந்திரங்களோடும், கயிறுகளோடும் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். “ஆமா அவங்க மரம் அவங்க வெட்றாங்க உனக்கென்ன வந்திச்சு?“ என்றபடி மறுபடியும் விளையாட்டில் ஆழ்ந்தான்.
படம்: சித்தரிப்புக்காக மட்டும் (from my archives)
இலக்கியாவுக்கு பத்து வயதாகிறது, அவளது சாமி மரத்தை வெட்ட போகிறார்கள் என்பதை தாங்கி கொள்ளவே முடியவில்லை. அந்த மரத்தடியில் எந்த சாமியுமில்லை, யாரும் அதை வழிபடவுமில்லை. இவளுக்கு மட்டும் அது எப்படி சாமி மரமானது?

மூன்று வருடங்களுக்கு முன்னால் அவர்களது சொந்த கிராமத்துக்கு கூட்டி சென்றிருந்தார் அவள் அப்பா. அங்கே  ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்றார்கள். அங்கே கோவிலுக்கு பதிலாக பசுமையான ஒரு சிறு சோலை மட்டும் தானிருந்தது. விதவிதமான மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், ஊர்வன என அந்த உயிர்சூழலுக்கேற்ற அனைத்து உயிரினங்களும் செழித்து வாழும் சோலை அது. அந்த சோலைக்கு நடுவேயிருந்த ஒரு பெருமரத்தை தான் குலசாமி என தலைமுறை, தலைமுறையாக வணங்கி கொண்டிருந்தார்கள். நீண்டுயர்ந்து வளர்ந்திருந்த அந்த மரத்தை அண்ணாந்து பார்த்து விட்டு மனதில் எழுந்த பல கேள்விகளுடன் தன் பாட்டி தாயம்மாவிடம் ஓடினாள்.

“பாட்டி இதுதான் நம்ம குலசாமியா?“

“ஆமா செல்லம்“

“மரம் எப்படி பாட்டி குலசாமியா இருக்க முடியும்?, நாங்க இருக்கிற டவுன்ல கோயில்கள் இருக்கு, அதுக்குள்ள சாமிங்க இருக்கு, இங்க மட்டும் ஏன் இப்பிடி?“

அவளை அள்ளி அணைத்து மடியில் இருத்தி அவள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தொடங்கினாள் தாயம்மா.

“இது கிராமம் கண்ணு, இங்க இருக்குறவங்க செய்யுற முக்கியமான தொழில் விவசாயம், விவசாயம் நடக்கணும்னா என்ன எல்லாம் முக்கியம் சொல்லு?“

“நிலம், அப்புறம் தண்ணி“ என்றபடி உரையாடலில் ஒன்றிவிட்டிருந்தாள் இலக்கியா.

“ரெம்ப சரி, அதானல தான் இங்க இருக்குற இந்த சோலையும், உயிர் சூழலும், தாய் மரமும் நம்ம குலசாமி“.

தாயம்மா மேலும் பேசிக் கொண்டிருந்தாள், “இந்த தாய் மரத்துகிட்ட நாம மழை பெய்யணும்ன்னு வேண்டிகிட்டா இந்த மரம் வானத்துல மிதந்து வர்ற மேகங்கள் கிட்ட நம்ம வேண்டுதல சொல்லிடும், அதனாலயே இங்க வருசம் தவறாம நம்ம கிராமத்துல மழை பெய்யுது இது காலாகாலமா நம்மகிட்ட இருக்குற நம்பிக்கை.“

இலக்கியாவுக்கு ஆச்சரியம் விலகவே இல்லை. “மழை பெய்யும் சரி நிலத்தை எப்பிடி இந்த சாமி மரம் பாதுகாக்கும்?“

“தான் ஆழமா வேர்விட்டு நிக்குற இந்த நிலத்தோட தொப்புள் கொடி உறவு இருக்கு தாயி, இந்த உயிர்சூழல் இங்க  இருக்குற வரைக்கும் நம்ம நிலம் செழிப்பா இருக்கும், மகசூலும் குறைவில்லாம கிடைக்கும்“ என்றபடி தாய் மரத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டாள் பாட்டி.

இலக்கியாவுக்கு இன்னும் கேள்விகள் தீரவில்லை, “அப்போ நாங்க எங்க இருந்தாலும் எங்களோட வேண்டுதல சொல்ல இங்க வந்து தான் சாமி கும்பிடணுமா?“

“நீ இருக்குற இடத்தில நிக்குற எந்த மரத்துகிட்ட உன் வேண்டுதல சொன்னா போதும் அது நம்ம தாய் மரத்துகிட்ட வந்து சேந்துடும்“


“அது எப்பிடி பாட்டி?“ 

“காத்து அடிக்குதில்ல கண்ணு அந்த காத்து வழியா மரங்கள் ஒண்ணோட ஒண்ணு பேசிக்குது“ 

“மரங்கள் பேசுமா பாட்டி?“  விழிகள் விரிய கேட்டாள் இலக்கியா

“பேசும் கண்ணு“ என்றபடி அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் பாட்டி.

தனக்கு ஏழு வயதாயிருந்த போது நிகழ்ந்த இந்த நிகழ்வு தான் அவளது வீட்டிற்கு அருகில் நின்றிருந்த அந்த மரத்தை சாமி மரமாக்கி இருந்தது. கூடவே பள்ளியில் கற்ற பாடங்களும் மரங்களின் சிறப்பை அவளுக்கு உணர்த்தியிருந்தன.

அன்று முழுவதும் மரமறுக்கும் இயந்திரத்தின் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. மாலையில் அவள் அண்ணன் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தான் “அந்த மரம் நின்ன இடத்துல நாலு மாடி மால் வருதாம்பா, இரண்டு, மூணு தியேட்டர், கேம் சென்டர் எல்லாம் திறக்க போறாங்களாம்.“

அவன் சொன்னது இலக்கியாவிற்கும் கேட்டது. 
மரங்கள் பேசும், மால்கள் பேசுமா? என்று யோசித்தபடி அப்பா வாங்கி வந்திருந்த வேப்பமரக்கன்றை நடுவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தாள் இலக்கியா. 

Sunday, February 3, 2019

போர்களின் நிலத்திலிருந்து ஒரு நம்பிக்கையின் ஒளிக்கீற்று

 

A Thousand Splendid Suns by Khaled Hosseini



போர்கள் அமைதியான, வளமான எதிர்காலத்தை செதுக்கி தள்ளிவிடும் கூர்மையில்லாத உளிகள் என்றவர் மார்ட்டின் லூதர் கிங். 

வரலாற்றின் பக்கங்களில் பல்வேறு கலாச்சாரங்களின் பிறப்பிடமாக திகழ்ந்த ஒரு நிலபரப்பு ஆப்கானிஸ்தான். 1950களுக்குப் பிறகு வல்லாதிக்கங்களின் ஆக்கிரமிப்பாலும், மத அடிப்படைவாதத்தை கொண்டாடும் பிற்போக்குவாதிகளின் ஆதிக்கத்தாலும் சிதைக்கப்பட்டு, உள்நாட்டு கலகங்களாலும், வன்முறைகளாலும் துண்டாடப்பட்டு கையறு நிலையில் இன்றும் நிற்கிறது நாம் சமகாலத்தில் காணும் ஆப்கானிஸ்தான்.

இந்த மண்ணின் கதையை, போர்களின் கொடுந்துயரத்தை, பிற்போக்குத்தனங்களின் கொடூரங்களை அற்புதமான ஒரு புனைவாக நம் கையில் தந்திருக்கிறார் கலித் ஹோசினி. 

உலகில் எந்த நிலப்பரப்பிலும் யார் யாரை கைப்பற்ற போரிட்டாலும் அதன் பாதிப்பை சுமந்து நிற்பது பெண்களும், குழந்தைகளுமாகவே இருக்கிறார்கள். அதனால் தான் ஹோசினி இரண்டு வலுவான பெண் கதாபாத்திரங்களான மரியத்தையும், லைலாவையும் கொண்டு ஏறக்குறைய முப்பதாண்டு கால ஆப்கனின் வரலாற்றை சொல்லி விடுகிறார்.

மத அடிப்படைவாதமும், அது சார்ந்த கட்டுப்பாடுகளும், அதனூடே வெளிப்படும் ஆணாதிக்கத்தின் கூறுகளும் பெண்களின் மீது திணிக்கும் வன்முறைகளை வலி நிறைந்த பக்கங்களில் பதிவு செய்கிறது இந்த நாவல். ஹோசினி தனது பெண் கதாபாத்திரங்களின் அன்பை, பரிவை, ஏக்கத்தை, காத்திருப்பின் வலியை, பிரிவுத்துயரை, அவர்களின் திடமான முடிவுகளை சிறப்பாக எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆப்கனின் நகரங்கள், கிராமங்கள், தெரு வீதிகள், போர்க் காட்சிகள், உணவு பழக்கவழக்கங்கள், கலாச்சார மற்றும் நிலவியல் கூறுகள் என எல்லாவற்றையும் எழுத்தில் வடித்து காட்சிப் படிமமாக மாற்றி வாசகனுக்குள் செலுத்தி விடுகிறது இப்புனைவு. ஆப்கனை பற்றி அறிந்திராதவர்கள் கூட அதன் வரலாற்றை கட்டாயம் கூகுளில் தேடி படித்து விடக் கூடும்.

பாமியன் புத்தர் சிலைகளை நாவலின் இரண்டு வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்டு காட்டி அதன் வழியே, மாறிய ஆப்கனின் நிலையை வெகு இயல்பாக வாசகனிடம் கொண்டு சேர்த்து விடுகிறார். தாலிபன்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு, பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சூழலிலும், குழந்தைகளுக்கான காப்பகத்தில் ஆஸிஸா கல்வி பயிலும் இடம், பெண்களுக்கு சமமான, தரமான கல்வியை கொடுப்பது தான் அவர்களின் மீட்சிக்கான ஒரே வழி என உரக்கப் பேசுகிறது.

எங்கெல்லாம் போர்களும், வன்முறைகளும் நடக்கிறதோ அங்கெல்லாம் மரியம்களும், லைலாக்களும், அஸிஸாக்களும் உயிர் பயத்தில், பசி மயக்கத்தில், ஐநாவின் அழுக்கடைந்த அகதி முகாம்களில் ஒதுங்கியிருக்கக் கூடும். அவர்களிடம் சொல்வதற்கு நம்மிடம் கலித் ஹோசினியின் இந்த வரிகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன.

“Joseph shall return to Canaan, grieve not,
  Hovels shall turn to rose gardens, grieve not.
  If a flood should arrive, to drown all that’s alive,
  Noah is your guide in the typhoon’s eye, grieve not”

(மூலம்: பாரசீக கவி ஹாபிஸின் கவிதையிலிருந்து...) 

வாசித்து பாருங்கள் என்று புத்தகத்தை கடனாக கொடுத்த வெர்ஜினுக்கு நன்றிகள் பல..

Tuesday, January 1, 2019

புத்தகங்கள் 2018

2018 இல் வாசித்த புத்தகங்களின் பட்டியல்

1. தாய் - மக்சீம் கார்க்கி (மொழிபெயர்ப்பு - ரகுநாதன்)

2. பிம்பச்சிறை எம்.ஜி. ராமச்சந்திரன் - திரையிலும், அரசியலிலும்
    எழுத்தாளர் - எம் எஸ் எஸ் பாண்டியன் (மொழிபெயர்ப்பு - பூ கொ சரவணன்)

3. தேர்ந்தெடுத்த கதைகள் கு. அழகிரிசாமி
    கதை தேர்வு: ச. தமிழ்செல்வன்

4. அன்பின் வெற்றி ; சிறார் கதைகள் - யூமா வாசுகி

5. கடவுளின் நாக்கு - எஸ். ராமகிருஷ்ணன்

6. போர் தொழில் பழகு   - வெ. இறையன்பு

7. கடல் - சமஸ்

8. உள்ளாட்சி உங்கள் உள்ளங்களின் ஆட்சி - டி.எல். சஞ்சீவிகுமார்

9. Homo Deus: A Brief History of Tomorrow by Yuval Noah Harari

10. India After Gandhi by Ramachandra Guha

11. The Fall of a Sparrow by Dr. Salim Ali

12. What Can I give? : Life Lessons from my Teacher by Srijan Pal Singh

13. Once upon an IAS Exam by K. Vijayakarthikeyan

14. Man's Search for Meaning by Viktor Frankl

15. Siddhartha by Hermann Hesse

17. You can Heal your Life by Louise Hay

18. Me Vs Myself: The Anxiety Guy Tells all by Dennis Simsek

19. Screw it, Let's Do it: Lessons in Life by Richard Branson

20. Wings of Fire: An Autobiography by Dr. APJ Abdul Kalam 

21. The Monk who sold his Ferrari by Robin Sharma

வாசிக்கவும், பயணிக்கவும், கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் நிறைய இருக்கிறது. 

வாருங்கள் பயணிப்போம், புத்தாண்டு பிறந்து விட்டது. 

HAPPY NEW YEAR 2019 !