உங்களை வரவேற்கிறேன் ..உங்களில் ஒருவனாக..
Friday, December 11, 2020
தூக்கத்தின் தோற்றுவாய் தேடி.. #4
Saturday, September 5, 2020
தூக்கத்தின் தோற்றுவாய் தேடி.. #3
சிர்காடியன் இசைவும், பரிணாம வளர்ச்சியும்.
மனிதர்களின் தூக்கம் மற்றும் விழிப்பு நிலைகளைக் கட்டுப்படுத்தும் சிர்காடியன் இசைவு எல்லா மனிதர்களுக்கும் ஒரே வகையில் இருப்பதில்லை.
சில மனிதர்களுக்கு இந்த 24 மணிநேர சிர்காடியன் இசைவில் விழிப்பு நிலை அதிகாலை நேரத்தில் நிகழும். இவர்களின் தூக்கநிலை முன்இரவிலேயே தொடங்கி விடும். இத்தகைய சிர்காடியன் இசைவு வாய்க்கப் பெற்றவர்கள் அதிகாலையில் நேரத்துடன் விழித்துக் கொள்பவர்களாக இருப்பார்கள்.
உலக மக்கள்தொகையில் நாற்பது சதவிகிதம் பேர் இத்தகைய சிர்காடியன் இசைவு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நேரத்துடன் விழித்துக் கொள்வது வெகு இயல்பானதாக இருக்கிறது.
முப்பது சதவிகிதம் பேர் இரவு தாமதமாக படுக்கைக்கு செல்வதையும், காலையில் நீண்ட நேரம் கழித்து விழித்துக் கொள்வதையும் பழக்கமாக கொண்டவர்கள். இன்னொரு முப்பது சதவிகிதம் பேர் மேற்சொன்ன இரண்டு நிலைகளுக்கும் இடையே இருப்பவர்கள், இவர்களில் பலர் பெரும்பாலும் கொஞ்சம் தாமதமாக படுக்கைக்குச் செல்லக்கூடியவர்களே.
இரவு தாமதமாகத் தூங்கும் சிர்காடியன் இசைவு வாய்க்கப் பெற்றவர்களால் அதிகாலையில் விழித்துக் கொள்வது சிரமமானது. அப்படி விழித்துக் கொண்டாலும் அவர்களால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. அவர்களது மூளையில் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் முன்மண்டை புறணி (Prefrontal Cortex) முழுமையாக செயல்படாத நிலையிலேயே இருக்கும். இது கடும் குளிர்பிரதேசங்களின் காலை நேரங்களில் ஒரு இயந்திரம் தனது இயக்க வெப்பநிலை (Operating temperature) அடைய அதிகநேரம் எடுத்துக் கொள்வதைப் போன்றது.
எந்த வகையான சிர்காடியன் இசைவு அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது மரபியல் காரணிகள் தான்.
பொதுவாக நாம் வாழுகிற சமூகத்தில் வேறுபட்ட தூக்கம் மற்றும் விழிப்புநிலை கொண்டவர்களை ஏற்றுக்கொள்வது இல்லை. இயல்பாகவே இரவில் நெடுநேரம் விழித்திருந்து விட்டு காலையில் நேரம் கழித்து எழுபவர்களை சோம்பேறி என்றே முத்திரை குத்தி விடுகிறோம். உண்மையில் இத்தகைய குணங்கள் நமது டி.என்.ஏவிலேயே ஆழமாக பதிந்திருக்கிறது.
அனைவருக்கும் பொதுவான பணிநேரமும் காலையில் நீண்டநேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்களை வெகுவாக பாதிக்கிறது. பணிகளில் செயல்திறன் பாதிப்பு, தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல், மன பிரச்சனைகள் என இவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம்.
இத்தகைய வேறுபட்ட சிர்காடியன் இசைவு வாய்க்கப் பெற்றவர்களுக்கு, அவர்களுக்கு ஏற்புடைய பணிநேரத்தை வரையறுப்பதும் ஒரு பெரிய சமூகப் பொறுப்பாகிறது.
சிர்காடியன் இசைவில் ஏன் இத்தகைய வேறுபாடுகள் தோன்றின என்பதைப் பின்வருமாறு விளக்கலாம். தொடக்ககால மனிதர்கள் பெரும்பாலும் சிறுசிறு குழுக்களாகவே வாழ்ந்தார்கள், உறங்கினார்கள். அப்படி ஒரு குழு இரவில் உறங்கும் போது அதிலுள்ள எல்லா உறுப்பினர்களும் உறங்கி விட்டால் குழுவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். அதாவது இந்தச் சூழலில் ஒரு ஆபத்து வருமாயின் இக்குழு உறுப்பினர்களின் உயிர் பிழைத்திருக்கும் திறன் ஏறக்குறைய 0 சதவிகிதம். இதே குழுவில் நள்ளிரவு இரண்டு மணி வரைக்கும் விழித்திருந்து விட்டு பிறகு தூங்கச் செல்பவர்களும், இரவு ஒன்பது மணிக்கே உறங்கி விட்டு விடியற்காலை 5 மணிக்கு விழித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அனைவரும் உறக்கத்தில் இருக்கும் காலம் என்பது சில மணிநேரங்கள் மட்டும் தான். இப்போது இந்த குழுவின் உயிர்பிழைத்திருக்கும் திறன் ஏறக்குறைய ஐம்பது சதவிகிதமாக உயர்ந்து விடும்.
பரிணாம வளர்ச்சி எனும் ஏணியில் மனிதர்கள் சிறப்பிடம் பெற்றதற்கு சிர்காடியன் இசைவும் முக்கிய பங்காற்றியிருக்கிறது தானே!
தொடரும்..
Source: Why we sleep by Matthew Walker
Saturday, August 15, 2020
தூக்கத்தின் தோற்றுவாய் தேடி.. #2
2. தூக்கம் - ஒளியும், வெப்பநிலையும்
ழான் என்னும் பிரஞ்சு அறிவியலாளர் தொட்டால் சிணுங்கி செடியில் ஒரு உள்ளார்ந்த உயிரியல் கடிகார அமைப்பைக் கண்டறிந்ததைப் பார்த்தோம். இந்நிகழ்வு நடந்து சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின், 1938 ம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான நத்தானியேல் கிளைட்மேனும், அவரது ஆய்வு உதவியாளரான புருஸ் ரிச்சார்ட்சனும் இணைந்து மனிதர்களில் சிர்காடியன் இசைவு பற்றிய ஆய்வினை நடத்தினர்.
இவ்விருவரும் இருள் நிரம்பிய குகை ஒன்றில் 32 நாட்கள் தங்கியிருந்து தங்களது தூக்கம் மற்றும் விழிப்பு நிலைகளின் தன்மையையும், உடலின் வெப்பநிலையையும் பதிவு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் அவர்கள் இரண்டு முக்கியமான உண்மைகளைக் கண்டறிந்தனர். ஒன்று, தொடர்ந்து இருளில் வாழ நேர்ந்தாலும் ஏறக்குறைய 15 மணிநேர விழிப்பு நிலையும், 9 மணிநேர தூக்க நிலையும் மாறி, மாறி வருவது. இரண்டு, இந்த நிலை இருவருக்கும் வெகு சரியாக 24 மணிநேர சுழற்சியாக இல்லாமல் சில வேறுபாடுகள் இருந்தது. இந்த ஆய்வு நடந்து ஏறக்குறைய எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மனிதர்களில் சிர்காடியன் இசைவின் சராசரி காலஅளவு 24 மணி 15 நிமிடங்கள் என வரையறுத்துள்ளோம்.
உயிரினங்கள் இந்த பூமியில் தோன்றியதில் இருந்தே உணர்ந்து கொண்டிருக்கும் இரவு-பகல் சுழற்சி, அவற்றின் உயிரியல் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பூமியின் சுழற்சியைக் கொண்டு மட்டும் மூளை சிர்காடியன் இசைவை கட்டுப்படுத்துவது இல்லை. உணவு, உடற்பயிற்சி, வெப்பநிலை வேறுபாடுகள், சமூக உறவு நிலைகள் போன்ற மற்ற காரணிகளும் அதில் பெரும் பங்கை வகிக்கின்றன. இதற்கு உதாரணமாக முழுவதும் பார்வையற்ற ஒரு நபரிலும் இந்த சிர்காடியன் இசைவு செயல்படுவதைச் சொல்லலாம்.
மனித மூளையில் அமைந்துள்ள சிர்காடியன் இசைவை கட்டுப்படுத்துகிற அமைப்பு சுப்ராசியஸ்மாடிக் நியூக்ளியஸ் (suprachiasmatic nucleus) என்றழைக்கப்படுகிறது. இந்த அமைப்பானது நம் விழித்திரைகளில் இருந்து பார்வை உணர்வுகளை பெருமூளைக்கு எடுத்துச் செல்லும் பார்வை நரம்புகள் கடக்கும் பகுதிக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. நம் கண்கள் வழியே நாம் கடத்தும் ஒளித் தகவல்களை பயன்படுத்தி சிர்காடியன் இசைவில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சரி செய்துகொள்கிறது.
ஏறக்குறைய நூறு பில்லியன் நரம்பணுக்களாலான மனித மூளையின் அளவுடன் ஒப்பிடும் போது இந்த சுப்ராசியஸ்மாடிக் நியூக்ளியஸ் வெறும் 20,000 நரம்பணுக்களாலான சிறிய அமைப்பு தான். ஆனால் மனிதர்களின் தூக்கம் மற்றும் விழிப்பு செயல்பாடுகளில் இந்த அமைப்பின் பங்கு அளப்பெரியது.
படம்: மனித உடலின் வெப்பநிலை மற்றும் 24 மணி நேர சிர்காடியன் இசைவு இடையிலான தொடர்பை காட்டுகிறது
மனித உடலின் வெப்பநிலை தூக்கம் மற்றும் விழிப்பு செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பகல் நேரங்களில் சற்று அதிகரித்து காணப்படும் அது, இரவு நெருங்கும் போது குறையத் தொடங்கி விடுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் குறைந்தே காணப்படும் உடலின் வெப்பநிலை காலை நேரங்களில் மீண்டும் மெல்ல அதிகரிக்கிறது. நாம் தூங்கினாலும், தூங்கா விட்டாலும் இந்த நிலை ஒரு சுழற்சியாகவே நீடிக்கிறது. அதாவது உடல் வெப்பநிலை சற்றே அதிகரிப்பது விழிப்பு நிலையுடனும், சற்றே குறைவது உடல் தூக்கத்திற்கு தயாராவதையும் குறிக்கிறது. சிர்காடியன் இசைவில் இந்த வெப்பநிலை மாற்றத்தை நிர்வகிப்பது சுப்ராசியஸ்மாடிக் நியூக்ளியஸ் தான்.
தூக்கத்தை பாதிக்கும் காரணிகளில் ஒளி மற்றும் வெப்பநிலைக்கு என்ன பங்கிருக்கிறது என்பது இப்போது நமக்கு கொஞ்சம் புரிந்திருக்கும் இல்லையா?
தொடரும்..
Source: Why We Sleep by Matthew Walker
Monday, August 3, 2020
தூக்கத்தின் தோற்றுவாய் தேடி... #1
இரவானால் ஏன் தூக்கம் வருகிறது? உயிரினங்களின் உடல்நலனில் தூக்கத்தின் பங்கு என்ன? தூங்கும் போது மனித உடலில் நிகழும் மாற்றங்கள் என்னென்ன? கனவுகள் எங்கிருந்து தோன்றுகின்றன? இது போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கிறதா?
மனிதன் சிந்திக்கத் தொடங்கியதிலிருந்தே தூக்கம் மற்றும் கனவுகள் பற்றிய புரிதல் அவனுக்குள் அவிழ்க்க முடியாத பெரும் புதிராக அடங்கியிருக்கிறது. இன்றும் உயிரினங்களின் தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வுகள் உலகெங்கும் நடந்தபடியே தான் இருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் தருகிற தரவுகளும், பதில்களும் வெகு சுவராஸ்யமானவை.
தூக்கம் சார்ந்த ஆய்வுகளில் மிக முக்கியமான தொடக்கம் 1729ம் ஆண்டு பிரஞ்சு அறிவியலாளர் ழான் ஜாக்குஸ் டி அர்டஸ் டி மைரான் (Jean-Jacques d'Ortous de Mairan) என்பவர் தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) செடியை வைத்து நடத்திய ஆய்வு. இச்செடியை உற்று கவனித்த போது ழான் கண்டறிந்தது என்ன?
தொட்டால் சிணுங்கியின் இலைகள் பகல் பொழுதுகளில் விரிந்து காணப்படும். ஏதேனும் உயிரினங்கள் அல்லது வேறு பொருட்களுடன் தொடுதல் ஏற்பட்டால் மட்டும் சுருங்கி விடும். இயல்பான இயக்கத்தில் மாலை நேரம் தொடங்கி இரவு முழுவதும் சுருங்கிய நிலையிலேயே இருக்கும். அடுத்த நாள் காலையில் மீண்டும் விரிந்த நிலைக்கு திரும்பி விடும்.
ழான் இந்த செடியை ஆய்வு செய்யும் வரை இதன் இயல்பு சூரிய ஔியோடு தொடர்புபடுத்தியே பார்க்கப்பட்டது. அதாவது சூரிய இயக்கத்தின் கட்டுப்பாட்டில் தான் தொட்டால் சிணுங்கியின் உயிரியல் செயல்பாடு இருப்பதாக கருதப்பட்டது.
ழான் ஒரு தொட்டால் சிணுங்கி செடியை எடுத்து முழுவதும் இருட்டான ஒரு பெட்டியில் 24 மணிநேரம் வைத்து ஆராய்ந்து பார்த்தார். அதன் செயல்பாடு சூரியனின் இயக்கத்தை மட்டுமே ஒத்து இருக்குமென்றால் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 24 மணிநேரமும் அதன் இலைகள் சுருங்கி இருந்திருக்க வேண்டும் தானே? ஆனால் நடந்ததாே வேறு நிகழ்வு. அதன் இயல்பான வாழிடத்தில் இருக்கும் போது குறிப்பிட்ட இடைவெளியில் சுருங்கி விரிவதைப் போன்றே பெட்டியில் அடைக்கப்பட்ட போதும் அதன் உயிரியல் செயல்பாடு இருப்பதைக் கண்டறிந்தார்.
இந்த எளிமையான ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தொட்டால் சிணுங்கி செடியினுள் ஒரு உள்ளார்ந்த உயிரியல் கடிகார அமைப்பு இருக்கலாம் என்பதை அனுமானித்தார். பிந்தைய ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உயிரினங்கள் தனக்கென உருவாக்கிக் கொண்ட சிர்காடியன் இசைவு (Circadian rhythm) தான் அந்த உயிரியல் கடிகாரத்தின் அடிப்படை எனக் கண்டறியப்பட்டது. 2017 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சிர்காடியன் இசைவை கட்டுப்படுத்துகிற மூலக்கூறுகளின் செயல்பாட்டைக் கண்டறிந்ததற்காக வழங்கப்பட்டது. மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளும் சிர்காடியன் இசைவின் செயல்பாட்டை உறுதிப்படுத்துகின்றன. மனிதர்களின் அன்றாட உயிரியல் செயல்பாடுகளை நிர்வகிப்பதிலும், தூக்கம் மற்றும் விழிப்பு நிலைகளைக் கட்டுப்படுத்துவதிலும் இந்த சிர்காடியன் இசைவு முக்கியப் பங்காற்றுகிறது.
தொடரும்..
Source: Why We Sleep by Matthew Walker
Thursday, June 18, 2020
ஜப்பானிய புத்தகங்கள் - வாசிப்பு அனுபவம் #2
Sunday, June 14, 2020
ஜப்பானிய புத்தகங்கள் - வாசிப்பு அனுபவம் #1
முதல் புத்தகம் ஹருகி முராகமி தனது வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி எழுதிய What I talk about When I talk about Running.
.
முராகமி சமகாலத்திய ஜப்பானின் மிகச்சிறந்த எழுத்தாளர். மரத்தான் போட்டிகளிலும், டிரையத்லான் போட்டிகளிலும் பங்கேற்றவர். உடல் உறுதியை மட்டுமன்றி மனஉறுதியையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தும் இத்தகைய போட்டிகளுக்குத் தயாரான அனுபவங்களையும், பங்கேற்ற அனுபவங்களையும் சுவாரஸ்யமாக பதிவு செய்திருக்கிறார்.
ஒரு நாள் திறந்தவெளி அரங்கு ஒன்றில் பேஸ்பால் விளையாட்டைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்த போது தான் எழுத்தாளாராக வேண்டுமென்கிற எண்ணம் உருவானதாக குறிப்பிடுகிறார் முராகமி. தனது சுயத்தையும், ஆளுமையும் வடிவமைத்ததில் உடற்பயிற்சிக்கு முக்கியமான பங்குண்டு என்கிறார். தத்துவார்த்த ரீதியாக எழுத்துப்பணிக்கும், ஓடுதலுக்குமிடையே அவர் பின்னியிருக்கும் மெல்லிழையின் வழியே வாசகன் அவரது அனுபவங்களை உணரத் துவங்கி விடுகிறான்.
வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து தப்பித்தலுக்கான ஒரு வழியாகவும், வாழ்ந்திருத்தலுக்கான பெரும் உந்துசக்தியாகவும் ஓடுதல் எப்போதுமிருக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது இந்த புத்தகம்.
எனக்கு எத்தனை வயதானாலும் சரி, நான் வாழும் காலம் வரை தொடர்ந்து என் சுயத்தைப் பற்றிய புதிய ஒன்றை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பேன் என்பதுதான் முராகமி தனது இந்த நினைவுக்குறிப்பின் வழியே விட்டுச் செல்லும் மிக முக்கியமான செய்தி.
வாசிப்போம்
Wednesday, April 22, 2020
பூமியும், புத்தரும்
அங்கு தங்கியிருந்த ஒரு மாலையில் எதிரே இருந்த மலைக்குன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் உச்சியில் ஒரு பழமையான தேவாலயமும், மணிக்கூண்டும் இருந்ததைக் கண்டேன். நகரின் நடுவே இரைச்சலில் முழ்கியிருக்கும் தேவாலயங்களை விட இப்படி நிசப்த வெளியில் தனித்திருக்கும் தேவாலயங்களுக்கென்று ஒரு தனி வசீகரமிருக்கிறது.
அதே மாலையில் குளிர் மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து என்னை அணைத்துக் கொண்டது. மேகங்களுக்கு நடுவே சற்று நேரம் மிதந்து கொண்டிருந்தேன். நான் கண்ட தேவாலயமும், மணிக்கூண்டும் பார்வையிலிருந்து மறைந்து போயிருந்தன. என்னை சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளை நிற குளிர் மட்டுமே வியாபித்திருந்தது. குளிரின் நிறம் வெண்மை தானா?
பௌத்தத்தில் புத்தரின் தியான நிலைகள் பல்வேறு முறைகளில் விளக்கப்படுகின்றன. நான் பார்த்த புத்தர் தனது இடது கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு, வலது கையால் பூமியை தொட்டுணர்ந்த நிலையில் அமர்ந்திருக்கிறார். புத்தரின் இந்த நிலைக்கு பௌத்தம் அளிக்கும் விளக்கம் வெகு சுவராஸ்யமானது.
சித்தார்த்தன் போதி மர நிழலில் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறான். அவனது தியானத்தைக் கலைக்க விரும்பிய தீயசக்திகள் அவனை பயமுறுத்தி, அங்கிருந்து துரத்தப் பார்க்கின்றன. சித்தார்த்தன் அசைந்து கொடுக்கவே இல்லை. எல்லா முயற்சிகளும் தோற்றுப் போகவே, அவனிடம் இந்த பூமி எங்களுடையது, நீ இங்கிருந்து இப்போதே வெளியேறி விட வேண்டும் என்கின்றன. இந்த தருணத்தில் சித்தார்த்தன் பூமியைத் தொட்டு தனக்கு உதவி செய்ய அழைத்ததாகவும், பூமி திறந்து இவருக்கு இங்கிருக்க உரிமையுண்டு என்று பதிலளித்த போது தீய சக்திகள் அனைத்தும் மறைந்து போனதாகவும் நீள்கிறது அந்த கதை. சித்தார்த்தன் தன் சுயத்தைக் கண்டுணர்ந்து புத்தனானது இத்தகைய சூழலில் தான் என்கின்றன சில பௌத்த நூல்கள்.
புத்தர் பூமியைத் தொட்டு உணரும் இந்த நிகழ்வு மனிதர்கள் நிலத்தோடு தொடர்புடையவர்கள், மனித நாகரிகங்கள் அனைத்தும் மண்ணில் வேர்கொண்டு வளர்ந்தவை தான் என்பதை வலியுறுத்தி சொல்கிறது. மனிதர்களுக்கும், பூமிக்குமான இத்தகைய இணக்கம் துண்டிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் புத்தரின் தியான நிலை நமக்கு விட்டுச் செல்லும் செய்தி முக்கியமானது.
ஏப்ரல் 22 - உலக பூமி தினம்
Tuesday, April 14, 2020
அம்பேத்கரை வாசித்தல் #1
இந்தியாவில் சாதிகளின் தோற்றம், வளர்ச்சி, அவற்றின் அமைப்பியக்கம் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் பலரும் இந்திய சமூகத்துக்கு வெளியே இருந்து அதனை கற்றறிய முயன்றவர்கள் (டாக்டர் கெட்கர் போன்ற விதிவிலக்குகள் இருக்கவே செய்கின்றன). டாக்டர் பி. ஆர். அம்பத்கர் இந்தியாவில் சாதிகள் பற்றிய தனது கட்டுரையில் சாதி அமைப்பை அதன் அடிப்படைகளோடு, சமூகவியல் கண்ணோட்டத்தோடு நுட்பமாக அணுகியிருக்கிறார்.
Tuesday, April 7, 2020
விடுதலைக்கான நெடும்பயணம் #1
பல ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்கியில் (Transkei) உள்ள எனது கிராமத்தில் சிறுவனாக இருந்த போது, எங்கள் இனக்குழுவிலுள்ள பெரியவர்கள் கடந்த காலத்தைப் பற்றி சொல்ல கேட்டிருக்கிறேன். வெள்ளையர்கள் இந்த மண்ணில் கால் பதிப்பதற்கு முன்பிருந்த பொன்னான நாட்கள் அவை. இனக்குழுக்களின் தலைவர்களிடம் அதிகாரங்கள் இருந்த போதிலும் ஜனநாயக உணர்வு அவர்களிடமிருந்தது. அந்த நாட்களில் எங்கள் மக்கள் அமைதியாக வாழ முடிந்தது, எந்த தடைகளுமின்றி சுதந்திரமாகவும், நம்பிக்கையோடும் நாடு முழுக்க செல்வதற்கான உரிமை இருந்தது. இந்த அழகிய தேசத்தின் நிலமும், காடுகளும், நதிகளும், பிற வளங்களும் எங்களுக்கானவையாக இருந்தன. அரசும், வணிகமும், ஆயுதங்களும் மக்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயே நிர்வாகம் செய்யப்பட்டன.
பண்டைய கால ஆப்பிரிக்க சமூகங்களின் கட்டமைப்பு என்னை வெகுவாக கவர்ந்திருக்கிருக்கிறது. என் அரசியல் பார்வையை உருவாக்கியதிலும், செழுமைப்படுத்தியதிலும் அதற்கு சிறப்பான ஒரு பங்கிருக்கிறது. அச்சமூகங்கங்களில் உற்பத்தியின் மிக முக்கியமான காரணியான நிலம் ஒட்டுமொத்த இனக்குழுவுக்கும் பொதுவானதாக இருந்தது. தனியுடைமை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. வர்க்க பேதமோ, சுரண்டலோ இல்லாத ஒரு சமூகமாக அது பரிணமித்தது. எல்லாரும் சுதந்திரமான, சமமான மனிதர்கள் என்கிற கோட்பாடே எங்கள் நிர்வாகங்களின் அடிப்படையாக அமைந்தது. இத்தகைய கோட்பாடுகளை பல்வேறு இனக்குழுக்களை நிர்வகிக்கும் அவைகளின் (Councils) அமைப்புச் சட்டங்களிலும் நீங்கள் காண முடியும். இந்த அவைகள் யாவும் மக்கள்மயபடுத்தப்பட்டிருந்தன. எல்லா மக்களும் அவை முன்னெடுக்கும் விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்தினை முன்வைக்கிற நிலை அன்றிருந்தது.
இன்றைய சூழலின் தேவைகளுக்கு மிகவும் பழமையானதாகவும், பாதுகாப்பற்றதாகவும் கருதப்படும் இச்சமூக அமைப்பு தான் புரட்சிகர ஜனநாயகத்தின் விதைகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய சமூக அமைப்பில் அடிமைத்தனமும், வறுமையும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும் ஒரு போதும் இருக்காது. இப்படிப்பட்ட ஆப்பிரிக்காவின் வரலாறு தான் இன்றும் போராடுகிற எனக்கும், என் தோழர்களுக்கும் உத்வேகம் தரக் கூடியதாக இருக்கிறது.
இந்த நாட்டில் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு ஆப்பிரிக்கனும் ஒரு விதமான முரண்பாட்டை உணர்ந்து கொண்டே இருக்கிறான். தன்னுடைய மனச்சாட்சிக்கும், இந்த நாட்டில் அமலில் இருக்கும் சட்டங்களுக்கும் இடையிலான பெரிய முரண்பாடு அது. இவ்விதமான முரண்பாடு இந்த நாட்டு குடிமக்கள் மட்டுமே உணரக் கூடிய ஒன்றல்ல, எங்கெல்லாம் சிந்திக்கத் தெரிந்த, கூர்மையான உணர்வுகள் கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் எல்லோருமே இத்தகைய முரண்பாட்டை உணர்வார்கள். மேற்கத்திய தத்துவியலாளரான பெர்ட்ரண்டு ரசல் பிரிட்டனில், அந்நாட்டின் அணுஆயுத கொள்கைக்கு எதிராக குரலெழுப்பியதையும், அதற்காக அவர் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டதையும் ஒரு உதாரணமாக உங்கள் முன் சொல்ல விரும்புகிறேன். அவர் இத்தகைய விளைவுகளை தான் எதிர்கொள்ளக் கூடும் எனத் தெரிந்தே மக்களுக்கு நன்மை தராத தனது நாட்டின் கொள்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்தார். நானும், இன்னும் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு ஆப்பிரிக்கனும் அதைத் தான் செய்ய முயற்சி செய்கிறோம்.
இங்கு அமலில் இருக்கும் பல சட்டங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. ஆட்சியில் இருக்கும் தேசியவாத அரசினால் (Nationalist Party Government) எழுதப்பட்ட எல்லா சட்டங்களுமே அறமற்றது, அநீதியானது, சகித்துக் கொள்ள இயலாதது. நாங்கள் இத்தகைய சட்டங்களை வலுவாக எதிர்க்கிறோம், அவற்றிற்கு எதிராக கடுமையாக போராடுகிறோம், அவற்றை மாற்றி எழுத முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
இன்று நான் சில சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறேன், நான் செய்த செயல்களுக்காக அல்ல. மாறாக, எந்த மதிப்பீடுகளுக்களாக நான் போராடுகிறேனோ அதற்காக, என் சிந்தனைகளுக்காக. இப்படிப்பட்ட உயரிய இலட்சியங்களுக்காக போராடுகிறவர்களை சட்டவிரோதி எனப் புறக்கணிப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களின் படி சில மாதங்கள் நான் சட்ட விரோதியாக தலைமறைவு வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளேன்.
கடந்த சில மாதங்களில் என் மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வாழ்வது அவ்வளவு எளிதானதாக இல்லை. அன்றாடம் அலுவலக வேலைகள் முடிந்த பின்னர் என் குடும்பத்தினருடன் உணவருந்துவதே பெரிதும் விரும்புகிறேன். ஆனால் உண்மையில் என் தாய்நாட்டில், சொந்தங்களையும், நண்பர்களையும் பிரிந்து காவல்துறையால் தொடர்ந்து துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். இப்படி வாழ்வது சிறையில் தண்டனை அனுபவிப்பதை விடக் கொடுமையானது. ஒரு நாகரிகமான சமுதாயத்தில் வாழுகிற எந்த மனிதனும் இத்தகைய வாழ்க்கையை விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை எனக் கருதுகிறேன்.
சில வேளைகளில், சில மனிதர்களுக்கு என் வாழ்க்கையில் நடந்ததைப் போன்று அவர்கள் விரும்பிய இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படலாம். அரசுகளின் சட்டங்கள் அவர்களை சட்டவிரோதியாக வாழ நிர்பந்திக்கலாம். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இப்படி வாழ நேர்ந்ததற்காக நான் ஒரு போதும் வருத்தமடையப் போவதில்லை. என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகள் சரியானவை என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இந்த நாட்டில் வாழும் இன்னும் பல மக்களும் இந்த அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாவார்கள் என்பதையும் கூட என்னால் வெகு நிச்சயமாக சொல்ல முடியும்.
நீங்கள் தண்டனைகளை தருவதன் மூலம் ஒரு மனிதனின் நம்பிக்கையை அழித்து விடலாம் என நினைக்கிறீர்கள். அறம் சார்ந்து வாழ்கிற மனிதர்களின் நம்பிக்கையை எந்த தண்டனையும் உருக்குலைத்து விடாது என்பதற்கு வரலாற்றின் பக்கங்களில் சாட்சிகள் இருக்கின்றன. நீங்கள் தரப்போகிற தண்டனைகள் என்னையோ, என் தோழர்களையோ, என் மக்களையோ இந்த போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கப் போவதில்லை.
நம் நாட்டின் சிறைகளில் ஆப்பிரிக்கர்களின் நிலை எவ்வளவு மோசமானது என்பது தெரிந்த போதிலும் இந்த நீதிமன்றம் விதிக்கப் போகிற தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாராகவே இருக்கிறேன். இந்த நாடு முழுக்க என் மக்கள் நிறத்தின் பெயரால் படும் இன்னல்களையும், பாகுபாடுகளையும் நினைக்கும் போது சிறையின் சுவர்களுக்குள் நான் அடையப் போகிற இன்னல்கள் அவ்வளவு கொடுமையானதாக இருக்காது என நம்புகிறேன்.
மீண்டுமொரு முறை உரக்கச் சொல்கிறேன், நீங்கள் தரப்போகிற தண்டனைகள் என்னையோ, என் தோழர்களையோ, என் மக்களையோ இந்த போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து தடுக்கப் போவதில்லை. மாறாக, அது சொந்த மண்ணில் விடுதலை நோக்கிய நெடும்பயணத்திற்கு தூண்டுகோலாகவே இருக்கப் போகிறது. தண்டனைக் காலம் முடிந்தவுடன் ஓய்ந்து விடுவேன் என நினைத்து விடாதீர்கள். என் மக்கள் எதிர்கொள்கிற அத்தனை அநீதிகளும் முழுமையாக அழித்தொழிக்கப்படும் வரை நான் இயங்கிக் கொண்டே இருப்பேன்.
என் மக்களுக்காகவும், தென்னாப்பிரிக்காவுக்குமான என் கடமைகளைச் செய்து விட்டேன். எதிர்கால தலைமுறை நான் குற்றமற்றவன் என முடிவு செய்யும் என்பதிலும், நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய உண்மையான குற்றவாளிகள் இந்த அரசின் உறுப்பினர்கள் தான் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
Book Courtesy: Fr. Sebastian :)
Tuesday, March 31, 2020
ஒரு கத சொல்லட்டா சார்? #4
*****************
எங்கே அடைக்கப்பட்டிருக்கிறேன்? ஒரு வேளை உயிரோடு புதைத்து விட்டார்களா? இல்லை, அப்படி தெரியவில்லை உடல் மெல்ல அதிர்ந்து கொண்டிருக்கிறது. ஏதோ வாகனத்தில் ஏற்றப்பட்டிருக்கிறேன். கைகளும், கால்களும் சங்கிலிகளால் பிணைக்கப்படவில்லை. ஆனாலும் சிறகுகள் தறிக்கப்பட்டு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பறவையை போல உணர்கிறேன்.
மெல்ல கண்களை திறந்து பார்க்கிறேன் இருட்டின் கனத்தைக் கிழித்துக் கொண்டு தெருவிளக்குகளின் வெளிச்சம் மட்டுமே துணையிருக்கிறது.
என்ன செய்யப் போகிறார்கள்?
நிச்சயமற்ற நிலை நெஞ்சை அழுத்த, மூச்சு முட்டுகிறது. ராணுவத்தின் கவச வாகனத்தில் அடைத்து கொண்டு செல்லுமளவுக்கா தவறு செய்து விட்டேன். நினைக்க, நினைக்க குழப்பமே மிஞ்சுகிறது.
எனக்களிக்கப்பட்டிருக்கும் ஒரே வசதியான, வாகனத்தின் சிறு ஜன்னலின் வழி வெளியே பார்க்கிறேன். காட்சிகள் மாறிவிட்டிருக்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்து விடும். நகரத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் ராணுவ தளத்திற்க்கான எனது பயணமும் முடிந்து விடும்.
வாகனத்திலிருந்து கீழே இறக்கப்பட்டிருக்கிறேன். காலூன்றி நிற்க முடியவில்லை. உடல் என் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது போன்ற ஒரு உணர்வு மேலிடுகிறது. எங்கள் நாட்டில் ராணுவ தளங்கள் மட்டுந்தான் இவ்வளவு வசதியானதாக அமைக்கப்பட்டிருக்கும் போலிருக்கிறது.
துப்பாக்கி ஏந்திய இரண்டு வீரர்கள் என்னை அழைத்துக் கொண்டு ஒரு கட்டிடத்திற்குள் நுழைகிறார்கள். முழு உடலையும் சோதனை செய்யும் கருவி வழியே முதலில் நுழையச் சொல்கிறார்கள். ஒரு ஓவியனிடம் என்ன பெரிய ஆயுதம் இருந்துவிட முடியும்? அவனது தூரிகையைத் தவிர. இவர்களை நினைத்தால் வருகிற சிரிப்பும் உடல் நடுங்குகிற நடுக்கத்தில் தொண்டைக் குழிக்குள் ஆழப் புதைந்து விடுகிறது.
முதல்கட்ட சோதனைக்குப் பின் அதிகாரி ஒருவரின் அறைக்கு அழைத்து செல்கிறார்கள். அறையைச் சுற்றிலும் கணிணித் திரைகள் கண்களை கூச செய்கின்றன. அதிகாரியின் கண்கள் சிவந்து போயிருக்கின்றன, மதுப்போதையா? அதிகார போதையா? இல்லை என் மேலிருக்கும் கோபமா? கண்டறிய இயலவில்லை. தன் முன்னால் விரிந்திருக்கும் மின்ணணுத் திரையில் எதையோ கூர்ந்து பார்த்து விட்டு என் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறார்.
சற்று நேரத்தில் அதிகாரியின் ஆணைப்படி அந்த கட்டிடத்தின் தரைதளத்திலுள்ள அறைத்தொகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறேன். பாதி இருட்டும், பாதி வெளிச்சமுமாக ஒருவித பயஉணர்வை ஏற்படுத்துகிறது அவ்வறைகள்.
“Get in, you are under detention for a month”
என் பதிலுக்கு காத்திராமல் அறையை பூட்டி விட்டு நகர்கிறான் அழைத்து வந்த ராணுவ வீரன்.
அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு நபர் ஏற்கனவே அடைக்கப்பட்டிருக்கிறார். என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி. ஒரு வேளை என்னை எதற்கு பிடித்து வந்து அடைத்திருக்கிறார்கள் என்பது இவருக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது.
அவரிடம் பேசிய பிறகு நான் கண்டறிந்த சில உண்மைகள் இவை:
எங்களைப் போன்றவர்களை எல்லாம் தீவிரமாக கண்காணிக்க தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் 24 மணிநேரமும் எங்கள் உடலையும், மனதையும் பற்றிய தகவல்களை இவர்களுக்கு அனுப்பும் நானோ ரோபாக்களைக் கொண்டு. அதாவது எங்கள் சிந்தனைகளை ஊடுருவி பார்க்கக் கூடிய திறன் அவர்களுக்கிருக்கிறது.
இந்த ஒரு மாதத்தில் என்ன செய்து விடுவார்கள். சிந்தனைகளை கண்காணிக்க தெரிந்தவர்களுக்கு அதனை அழிக்க தெரியாதா என்ன? அழித்து விட முடியுமா என்ன? சந்தேகம் வலுக்கிறது, உடனிருப்பவரிடம் கேட்டு விடலாமா எனத் தோன்றுகிறது. ஆனால் கேட்க மனமில்லை. .
சிந்தனைகளின் சுழலில் சிக்குண்டு கிடக்கிறேன். கண்களைத் திறக்கிறேன், ஜன்னலின் வழியே கதிரொளி முகத்தில் விழுகிறது.
Wednesday, March 25, 2020
ஹிப்பியாய் வாழ்தல்
தமிழ் புனைவுலகில் நமக்கு அந்நியமான கலாச்சாரத்தை, வாழ்வியலை, நிலப்பரப்பை பதிவு செய்யும் போக்கு என்பது கடந்த சில ஆண்டுகளில் வளர்ந்திருக்கிறது. மாற்று கலாச்சாரத்தை மொழிபெயர்ப்புகளினூடே மட்டுமல்லாது நேரடி படைப்புகளின் வழியே தமிழுக்கு அறிமுகப்படுத்துவது மிகச் சவாலான ஒரு பண்பாட்டு பணி.
அய்யனார் விஸ்வநாத் எழுதியிருக்கும் ஹிப்பி நாவல் புதுமையான, உயிரோட்டமுள்ள கதைக்களத்தைக் கொண்டிருக்கிறது. வாசகனை கதையோடு பிணைத்து விடும் சுவாரஸ்யமான கதைச் சொல்லல் முறையும் எனக்கு சிறப்பானதாக தோன்றியது.
திருவண்ணாமலையின் ஜவ்வாது மலையை ஒட்டிய நிலப்பரப்பை ஹிப்பிக்களின் கொண்டாட்ட வெளியாக்கியிருக்கிறது இப்புனைவு. இயற்கையோடு இயைந்து வாழும் அவர்களின் வாழ்வியலோடு நிலம், நீர், தாவரங்கள் என இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் ரசிக்க கற்றுத் தருகிறது.
இரவுகளின் நிசப்தத்தைக் கிழிக்கும் புல்லாங்குழலிசையும், வயலின் கம்பிகளின் அதிர்வுகளினூடே மேலேழும் துயர இசையும் வாசிப்பு முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கின்றன. புல்வெளிக்கும், அடர்மரக்காட்டுக்கும் இடையே சலசலத்து ஓடும் ஓடைக்கு அருகே கஞ்சாவும், மதுவும் தரும் போதையையும், மனித உணர்வுகளின் வேட்கையையும் வார்த்தைகளின் வழியே வாசகன் உணர்ந்து விடுகிறான்.
தமிழ்நாட்டில் விளிம்புநிலையில் வாழும் ஒரு மனிதன் ஹிப்பிக்களின் உலகுக்கு அறிமுகமாவதும், அங்கே பொருந்திக் கொள்ள அவன்படும் மன நெருக்கடிகளும் இயல்பாக சொல்லப்பட்டிருக்கின்றன. மையக்கதைகளிரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கும் இடத்தை வாசகனின் யூகத்திற்கு பரிசாக தந்திருப்பதும் சிறப்பானதாக இருக்கிறது.
வாசித்து முடிக்கும் போது ஹிப்பியாய் வாழ்ந்துவிட்ட ஒரு துண்டு நினைவும், வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒரு மெல்லிய துயரும் எஞ்சி நிற்கின்றன.
#வாசிப்போம்..
Friday, February 21, 2020
ஒரு கத சொல்லட்டா சார் ? #3
***********************************
மழை பெய்து ஓய்ந்திருந்த ஒரு மாலை நேரத்தில் தன் வீட்டின் ஜன்னலோரத்திலிருந்து வெளியே தோட்டத்திலிருந்த பலாமரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் ரஹ்மத். பெரிய பலாப்பழம் ஒன்றை கொறிக்க எத்தனித்து அதனைச் சுற்றி சுற்றி வந்தன இரண்டு அணில்கள். இப்படி ஒரு காட்சியை அவன் இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த நகரத்தில் காண்பது இப்போது அரிதாகி விட்டது. அதனால் தானோ என்னவோ மனம் லயித்து போய் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது பருவத் தேர்வுகள் முடிந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருக்கிறான்.
‘மழ பெஞ்சு முடிஞ்ச பெறவு சைக்கிள எடுத்துட்டு கடைக்கி வா’ என்று வாப்பா சொல்லி விட்டு போனது நினைவுக்கு வந்தது. உம்மா சமையலறையில் செய்து கொண்டிருந்த பழப்பத்தலின் வாசம் வேறு மூக்கை துளைத்தது. நேராக அடுப்படிக்கு போய் சூடாக இரண்டு பழபத்தல்களை சாப்பிட்டு விட்டு நான்கை ஒரு தூக்குவாளியில் எடுத்துக் கொண்டு, உம்மாவிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
அவர்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த கடை. மாலை முதல் இரவு வரை செயல்படும் பழைய புத்தகக் கடை அது. அவனது வாப்பா அமீரகத்தில் தனது இளமையை தொலைத்து சம்பாதித்ததில் மிஞ்சியவை ஐந்து சென்ட் நிலமும், அதில் ஒரு சிறிய வீடும் மேலும் இந்த கடைக்கான சிறுமுதலீடும்.
ரஹ்மத்திற்கு புத்தகங்கள் மீதான தீராக்காதல் சிறுவயதிலேயே தொடங்கி விட்டது. காமிக்ஸ் உலகின் மாயாவியும், அக்கதைகளில் வரும் குதிரையும், நாயும் அவனுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களாயிருந்தன. சிறுவயதில் இப்படியோரு குதிரையும், நாயும் தன்னிடமிருந்தால் காடு முழுவதும் சுற்றியலையலாம் என்றெல்லாம் கூட நினைத்திருக்கிறான்.
பொழுதுபோக்காக தொடங்கிய வாசிப்பு வாழ்வினது அதிஉன்னதங்களை நோக்கிய சாளரத்தை அவனுக்கு திறந்து விட்டிருந்தது. கட்டுரைகள், சிறுகதைகள் என எழுதவும் தொடங்கியிருந்தான்.
சைக்கிளை கடைவாசலில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்று வாப்பாவிடம் பழபத்தல்கள் இருந்த தூக்குவாளியை நீட்டியபடி உட்கார்ந்தான்.
‘இந்த வலத்தில இருக்க புஸ்தவமெல்லாம் நேத்து தாம் நாகரோவில்லேருந்து வந்துது. ஏதோ பெரிய ஆபீசரா இருத்தவராம், அவரு போயச் சேந்த பொறவு அவரு வச்சிருந்த புஸ்தவத்த எல்லாம் பழைய விலைக்கு வித்துருக்கானுவ அவருக்க புத்திரனுங்க. அதில ஒரு பெட்டிய நம்ம கடைக்கு அனுப்பிக்காரு உசேன் அண்ணாச்சி.’
அவர் பேசி முடிக்கவும் அட்டைபெட்டியை திறந்து பார்த்தான் ரஹ்மத். ஆங்கிலமும், தமிழும் என அவன் கேள்விப்படாத புத்தகங்கள் எல்லாம் அந்த சேமிப்பிலிருந்தன, நல்ல மனிதர்களைப் போலவே சிறந்த புத்தகங்களும் கூட தூக்கி எறியப்படுகின்றன என நினைத்துக் கொண்டான்.
வாப்பா தான் கையில் வைத்திருந்த நாளிதழை அவன் கையில் கொடுத்தபடி அதில் பிரசுரமாகியிருந்த கட்டுரைப் போட்டிக்கான விளம்பரத்தை அவனிடம் காட்டினார்.
‘நீ தான் நல்லா கட்டுரை எல்லாம் எழுதுவியே, இந்த தலைப்புல கட்டுரை ஒண்ணு எழுது’.
அவன் சரியென்று தலையாட்டியபடி நாளிதழை வாங்கி பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏறக்குறைய இரண்டு மணிநேரம் அந்த அட்டைபெட்டியிலிருந்த புத்தகங்கள் அனைத்தையும் எடுத்து புரட்டியபடியே இருந்தான். ஏறக்குறைய எல்லா புத்தகங்களின் முகப்பிலும் வாங்கப்பட்ட தேதியும், தருணமும் குறித்து வைக்கப்பட்டிருந்தன. சில புத்தகங்களில் பென்சில் கொண்டு குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. ஒரு மனிதன் தேடித் தேடிச் சேகரித்த செல்வங்களாகவே அவை அவனுக்கு தெரிந்தன.
‘மணி ஒன்பதாச்சு வீட்டுக்கு போவோமா’ என்று கேட்டபடி கடையை அடைக்க வாப்பா ஆயத்தமான போது தான் நேரமானதை உணர்ந்தான்.
‘சைக்கிளை உருட்டிகிட்டே நடந்து போவமா வாப்பா’
![]() |
புகைப்படம் நன்றி: தோழர் ஜீன்பால் (சித்தரிப்புக்காக மட்டும் ) |
வழியிலிருந்த மாதா கோவிலிருந்து பிரார்த்தனை முடிந்து ஆட்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக தங்கள் தெருவுக்கு மீன் கொண்டு வரும் மேரியக்கா, தங்கள் கடைக்கு பக்கத்திலேயே தையல் கடை வைத்திருக்கும் ஜோஸ் அண்ணாச்சி என பலரையும் ரஹ்மத் பார்த்துக் கொண்டிருந்தான்.
பத்து நிமிட நடைக்கு பிறகு கடைகள் இருக்கும் பகுதிக்கு வந்திருந்தார்கள். எதிரில் ரஹ்மத்துக்கு பள்ளிக்கூடத்தில் தமிழ் பாடம் எடுத்த ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் வணக்கம் சொன்னான் ரஹ்மத். அவனது கல்லூரி படிப்பு பற்றி விசாரித்துக் கொண்டார். அவரது வகுப்பில் நான் எதிர்காலத்தில் எழுத்தாளாகப் போகிறேன் என்று சொன்னவன் இவன் மட்டுமே என்பதனால் அவருக்கு இவன் மீது தனிக்கவனமிருந்தது. இவர்களிடம் பேசிவிட்டு மாட்டுக்கறி விற்கும் கடை நோக்கி நடந்து போய் கொண்டிருந்தார் முருகன் சார்.
இடப்புற வளைவிலிருந்த பிரத்தி பெற்ற சிவன் கோவில் இருந்த பகுதியிலிருந்து மூன்று பெரியவர்கள் இவர்கள் எதிரே வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெரியவர் ரஹ்மத்தின் வாப்பாவை பார்த்து பேசத் தொடங்கினார்.
‘நீங்க கொடுத்த புஸ்தவமெல்லாத்தையும் நம்ம பிள்ளியளுக்கு பயங்கரமா பிடிச்சு போச்சுது கேட்டியளா. நீங்க தான் அதுக்கு விலை போட்டு பைசா ஒண்ணும் வாங்கேல’
‘அது ஒண்ணும் வேணாம் அண்ணாச்சி நீங்களே பாவப்பட்ட பிள்ளியளுக்கு படிப்பகம் நடத்திதியோ அதுல நம்ம வெயாவாரம் செய்யப்பிடாதுல்லா’
‘உமக்கு பெரிய மனசு தான் ஓய், இது யாரு மோனா?, வாப்பாய கண்டு படிக்கணும் மக்கா. வரட்டா’
வாப்பாவின் இத்தகைய செயல்கள் அவனுக்கு நன்றாகவே தெரியும். வீட்டுக்கு வந்து உம்மாவுடன் சேர்ந்து இரவு உணவை முடித்து விட்டு தன் அறைக்கு சென்று மேசையில் அமர்ந்தான் ரஹ்மத். வாப்பா அவன் கையில் கொடுத்த பத்திரிகையில் அந்த விளம்பரத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு எழுதத் தொடங்கினான். நேரம் நள்ளிரவைத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. கட்டுரை ஒரு நல்ல வடிவம் பெற்று விட்டதாக உணர்ந்த பிறகு படுக்க சென்றான்.
காலையில் ரஹ்மத்தின் உம்மா அவன் மேசையிலிருந்த கட்டுரையை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தார். அக்கட்டுரை ‘நான் விரும்பும் இந்தியா’ எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.
Wednesday, January 22, 2020
‘இளைஞர்களோடு மாற்றம் நோக்கி' - நூல் முன்னுரை
வரலாற்றின் பக்கங்களில் பெரும் மாற்றங்களை விதைத்த இளைஞர் இயேசு அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளை தனது வாழ்வாக்கிக் கொண்டவர். இந்த பின்னணியில் தான் திருஅவையின் தற்போதைய தலைவராகிய திருத்தந்தை பிரான்சிஸ், மாற்றங்களின் தூதராக பார்க்கப்படுகிறார். தான் பொறுப்பேற்றது முதலே ஏழைகள், நலிவுற்றோர், மாற்று பாலினத்தவர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், புலம் பெயர்ந்தோர் என சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் வலிமை குன்றியவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்.
அறிவியல் பார்வையோடு சமகால பிரச்சனைகளை அணுகுபவர் என்பதற்கு அவருடைய ‘புகழனைத்தும் உமதே’ (Laudato Si - Praise Be To You) என்று தலைப்பிடப்பட்ட திருத்தூது மடலை சாட்சியாகக் கூறலாம். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பரிணாம வளர்ச்சியையும், பெரு வெடிப்பு கோட்பாட்டையும் நம்ப வேண்டும், விஞ்ஞான சமூகம் கூறும் முடிவுகளை விமர்சனபூர்வமாக அணுக வேண்டும் என்று புரட்சிகரமான கருத்துக்களை முன்வைத்தவர்.
இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், இணைய உலகம், மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள், தொலைத்தொடர்பில் சாதனைகள் என வளர்ச்சி நோக்கி வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் போர்கள், பிரிவினைவாதம், சூழலியல் பிரச்சனைகள், அதிகார குவிப்பு நோக்கி நகரும் மக்களாட்சி அரசுகள், சமூக ஊடகங்களின் எதிர்மறை தாக்கம் என்பது போன்ற பெரும் பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் தான் திருஅவை இளைஞர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு 2018-ம் ஆண்டை இளைஞர்களுக்காக அர்ப்பணித்ததோடு, அவர்களுக்கான உலக ஆயர் மாமன்றத்தையும் கூட்டியது. இம்மாமன்றம், இளைஞர் இயேசுவைப் போன்று நேர்மறை மாற்றங்களை, இன்றைய இளைஞர்கள் இவ்வுலகில் விதைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ‘இளைஞர்கள், நம்பிக்கை மற்றும் அழைத்தலுக்கான தெளிந்து தேர்தல்’ எனும் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. 2018, அக்டோபர் 3 முதல் 28 வரை நடைபெற்ற இந்நிகழ்வில் உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த 34 இளைஞர்கள் பங்கேற்றதும், அவர்களின் கருத்துக்களுக்கு திருஅவை செவிமடுத்ததும், அவர்கள் விவாதத்தின் ஓர் அங்கமாக திகழ்ந்ததும் மிக முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
முன்தயாரிப்போடு, திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வின் தொடர்ச்சியாக திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 2, 2019 அன்று ‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christus Vivit) என்று தலைப்பிடப்பட்ட திருத்தூது ஊக்கவுரையை வெளியிட்டார். அந்த ஊக்கவுரையின் முக்கிய கருத்துக்களை தமிழக இளைஞர்களுக்கும், இளைஞர் வழிகாட்டிகளுக்கும், பொது வாசகர்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியே ‘இளைஞர்களோடு மாற்றம் நோக்கி..’ என்ற இந்நூல்.
‘இளைஞர்களே நீங்கள் திருச்சபையின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலம்’ என்ற திருத்தந்தையின் தன்னுந்துதல் தரும் வார்த்தைகளோடு தொடங்கும் கட்டுரையில் நிகழ்கால முன்மாதிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்களைப் பற்றி பேசியிருக்கும் நூலாசிரியர், தடம் பதிக்க விரும்பும் இளைஞர்கள் எத்தகைய தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறார். இளைஞர்களுக்கான உலக ஆயர் மாமன்றத்தின் தயாரிப்பு ஏடு சார்ந்த தகவல்கள், மாமன்ற நிகழ்வின் முக்கிய தருணங்கள், ஆயர்கள், இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோரது கருத்துக்கள், இளைஞர்களின் வளர்ச்சியில் திருஅவையின் பங்கு என விரிகிறது இந்நூல்.
இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்கியே இளைஞர் பணி ஆற்ற வேண்டும் என்பதும், சாதி, மத, இன பேதங்களை கடந்து திருஅவை அனைத்து இளைஞர்களோடும் பயணிக்க வேண்டும் என்பதும் விரிவாக கூறப்பட்டிருக்கிறது. 21ம் நூற்றாண்டை எதிர்கொள்வதற்காக இளைஞர்களுக்கு எத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும், எத்தகைய திறன்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற கருத்துக்கள் செயல்வடிவம் பெறுமானால் சமூக மாற்றம் சாத்தியம் என்றே தோன்றுகிறது.
நமது செயல்திட்டங்கள் எத்திசை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, பதிலாக ஐக்கிய நாடுகள் சபையின் வளங்குன்றா நிறைவளர்ச்சிக்கான 17 உலகளாவிய குறிக்கோள்கள், அதனதன் முக்கியத்துவத்துடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் வாசிக்கப்பட்டு, இளைஞர் கூட்டங்களில், பயிற்சிகளில் விவாதிக்கப்பட வேண்டியவை.
இந்நூலின் ஆசிரியர் அருட்பணி. செபாஸ்டின் பிரான்சிஸ், எனது நண்பரும், வழிகாட்டியும், உடன்பணியாளருமாவார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உருவாக்கத்தில் நீண்ட கால கள அனுபவம் வாய்ந்த ஒரு ஆளுமை படைத்திருக்கும் இந்நூல் நேர்மறையான மாற்றத்திற்கான விதைகளை உங்கள் மனங்களில் விதைக்கும் என வெகு நிச்சயமாக நம்புகிறேன். இந்நூலை வெளியிடுவதில் சிகரம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
அருமை நண்பர் செபாவிற்கு நன்றியும், பேரன்பும்.
என்றும் தோழமையுடன்
காட்வின் ஜினு (GJ)
18.01.2020
பின் குறிப்பு: 22.01.2020 அன்று வெளியான இந்நூலினை வாங்க
தொடர்பு எண்: 9443605794, விரைவில் அமேசானிலும்....